காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நுரையீரல் புற்றுநோயை தடுப்பதில் கிரீன் டீ முக்கிய பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுபவர்களுடன் ஒப்பிடும்போது மற்றவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கிரீன் டீ பருகி வந்தால் நுரையீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் சற்று குறைவாக இருக்கும் என்பதும் தெரியவந்திருக்கிறது. கிரீன் டீ முக்கிய ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளதால் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் அழற்சியை குறைக்க அவை உதவும்.
உடலில் நீரிழப்பு ஏற்படாமலும் கவனித்துக்கொள்ளவேண்டும். நீரிழப்பு ஏற்பட்டால் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு நேரும். சுவாச மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும். இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் அல்லது திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்வது மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை, சுவாசப் பிரச்சினைகளை போக்க உதவும். நுரையீரலுக்கும் நலம் சேர்க்கும். மஞ்சளும் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதில் இருக்கும் குர்குமின் நச்சுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும். சளி, இருமலை போக்குவதற்கும் உதவும்.
இஞ்சிக்கு சுவாசத்திறனை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. இதில் பல அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. அவை நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்த உதவும். காற்றை சுத்திகரித்து நச்சுகளை அகற்றும் சிறந்த வடிகட்டியாக துளசி செயல்படுகிறது.