விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு 30 நாட்கள் சிறை


ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால், ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து

ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.

பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
தன் மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின.

இந்நிலையில், கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தார்.

அவரை மாஸ்கோ விமானநிலையத்திலேயே ரஷிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 2014-ம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் நவல்னி கைது செய்யப்பட்டுள்ளார் என ரஷிய போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நவல்னி உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவல்னி மாஸ்கோவில்
உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

30 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நவல்னி ‘இது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயல்’ என்றார். மேலும், தனது ஆதரவாளர்கள் ரஷிய வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என நவல்னி அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், நவல்னி சிறையில் அடைக்கப்பட்டதற்கு ரஷிய அரசுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா மனித உரிமை அமைப்பு, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகள் நவல்னியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ரஷியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது