(பி.எம்.எம்.ஏ.காதர்)
கிழக்கு மாகாணம், அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்றைச் சேரந்த ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான மீரலெவ்வை சரிப்டீன் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருதுக்குத் தெரிவாகியுள்ளார்.அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இவர் தனது ஆரம்பக் கல்வியை இசங்கணிச்சீமை அல்கமர் வித்தியாலயத்திலும்,இடைநிலைக் கல்வியை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் (தேசிய பாடசாலை) கற்றார்.
இவர் கல்வி கற்கும் காலம் முதல் கலைத்துறையில் ஈடுபாடுகாட்டி வந்ததுடன்,2000 ஆம் ஆண்டு முதல் கவிதை எழுதுதல், நாடகம், ஊடகம் போன்ற துறைகளில் பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டவர்.2001 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும்,வானொலிகளுக்கு ஊடகவியலாளராகவும், 2004ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பகுதிநேர அறிவிப்பாளராகவும் நியமனம் பெற்று செய்திகளையும், பல கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவையான பிறை எப்.எம் வானொலியில் கலைஞர் சந்திப்பு, கலை இலக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றையும் தயாரித்து வளங்கி வருகிறார். இவரது கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது.அத்துடன் தமிழ் தின போட்டிகளுக்கு நடுவராகவும், அகில இலங்கை சமாதான நீதிவானகவும், அக்கரைப்பற்று கலாசார அதிகாரசபையின் செயலாளராகவும் கடமையாற்றிவருகிறார்.
பத்திரிகை மற்றும் வெகுசன தகவல் தொடர்புத்துறையில் பட்டதாரியான இவர் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உளவியல் சமூக ஆதரவு மற்றும் ஆலோசனை சான்றிதழ் கற்கை நெறியையும், கொழும்புப் பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக டிப்ளோமா கற்கை நெறியையும் நிறைவு செய்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவை கற்றும் வருகிறார்.
கலாசார அலுவல்கள் திணைக்களம் 2017ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடாத்திய தேசிய கையெழுத்துப் பிரதிப் போட்டியில் ‘கிழக்கு மாகாண பாரம்பரிய கலை கைத்தொழில் பற்றிய ஓர் ஆய்வு’ கட்டுரைகளுக்கு தேசிய சான்றிதழைப் பெற்றுள்ளார். ‘பொன் விழாக் காணும் சலீம்’ எனும் பொன் விழா நூலினை 2017ஆம் ஆண்டும், ‘பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும்’ எனும் நூலினை 2018 ஆம் ஆண்டும் வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய கலாசாரப் போட்டி திறந்த பிரிவில் பாடலாக்கத்தில் பிரதேச மட்டத்தில் முதலாம் இடத்தையும், மாவட்ட மட்டத்தில் 03ஆம் இடத்தையும் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையே தேசிய ரீதியில் நடாத்திய பாடலாக்கப் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பணப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த துடிப்புள்ள இளைஞன் விருது 2000 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினாலும், ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் சேவைக்கான விருது 2004ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட கரையோரப் பத்திரிகையாளர் சங்கத்தினாலும், ஊடகத்துறையில் வெளிக்காட்டிவரும் திறமைக்கான விருது 2010ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினாலும், ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் புகழ் பெற்ற சேவைக்கான விருது 2015ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினாலும், கலைஞர் சுவதம் விருது 2017ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினாலும், ‘பொன்விழாக்காணும் சலீம்’ நூல் வெளியிட்டமைக்கான விருது 2017ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினாலும், அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்ட இளம் கலைஞர் போட்டியில் ‘இலக்கியத்துறைக்கான இளம் கலைஞர் விருது’ 2018ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம் வானொலியில் 2005ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராகவும், லேக்ஹவுஸ் பத்திரிகைககள், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சுடர் ஒளி, தமிழ் மிரர் போன்ற பத்திரிகைகளுக்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளராகவும் சுமார் 20 வருடங்களாக கடமையாற்றி வருவதுடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம் வானொலியில் நிரந்தர முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிவருகிறார்.
இவர் மர்ஹூம்களான உதுமாலெவ்வை மீராலெவ்வை, முகம்மது இப்றாகீம் தக்குவா உம்மா ஆகியோரின் கனிஷ்ட புதல்வராவார்.