இந்த நாட்டில் பயிரிடக்கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் நமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
விவசாயத் துறையை முன்னேற்றுவதற்காக விவசாய சமூகத்திற்கு தேவையான நீர், உரம், தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கும் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. இதற்காக 2021 வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உள்ளூர் ஒதுக்கீடுகளின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 800 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவடையவில்லை. இந்த திட்டங்கள் அனைத்தையும் விரைவாக நிறைவுசெய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
“கிராமத்துடன் கலந்துரையாடல்“ திட்டத்தின் கீழ் “பணிகளுடன் மீண்டும் கிராமத்திற்கு“ தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றி அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று (07) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்விலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
சுமார் 75% கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு நிலையான வேலைத்திட்டத்தின் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பாரம்பரியமாக விவசாய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் காரணமாக தற்போதைய தலைமுறை விவசாயத்திலிருந்து விலகிச் செல்கிறது.
அறுவடைக்கு அதிக விலை, தொழில்நுட்ப அறிவு, நீர் முகாமைத்துவம், உள்ளூர் விதை உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குதல் மற்றும் சேதன விவசாய உற்பத்தியில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவித்தல் போன்ற முறைகள் மூலம் அதிகாரிகள் பிரச்சினையை தீர்ப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கிராமப்புற பிரச்சினைகளை சட்ட திட்டங்களின் அடிப்படையிலன்றி, மக்களை கவனத்திற்கொண்டு தீர்க்க நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும், எனவே, அலுவலகங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது கிராமங்களுக்குச் சென்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, பணியாற்றுவது அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை செயல்படுத்த வெளிநாட்டு நிபுணர்கள் அல்லது ஆலோசகர்களின் உதவி தேவையில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கிராமப்புற மக்களின் நலனுக்காக இதை பூமியில் செயல்படுத்த வேண்டியது அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.
கொரோனா தொற்றுநோயால் மாற்றப்பட்ட வாழ்க்கை முறையை வெற்றிகொள்ள அரச மற்றும் தனியார் துறைகள் செய்த தியாகங்களை பிரதமர் பாராட்டினார்.
கொரோனா தொற்றுநோயுடன், பாடசாலை கல்வி முதல் சேவை தேவைகளை நிறைவேற்றி கொள்தல் உட்பட பல துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றிய ஒரு புதிய அறிமுகம் கிடைத்துள்ளது. எந்த நேரத்திலும் புதியவற்றைத் தழுவி வேலை செய்வதற்கான எமது நாட்டு அதிகாரிகளின் திறனை இது வெளிக்காட்டியது. இதை விளங்கி நவீன தொழில்நுட்பத்தை முடிந்தவரை விரைவாக அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு முறையும் தனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி திறம்பட முன்னெடுக்கப்பட்டது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போன்று நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரச அலுவலர்களின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எழும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி கலந்துரையாடுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
காட்டு யானைகள் மற்றும் ஏனைய விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண கிராம மட்டத்திலான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு திரு. பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சுகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் சேவை அதிகாரிகள், கணக்காளர்கள் மற்றும் பல அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.