நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொண்டு,அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்!!

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1609949913028"}

‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும்’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதுண்டு. இதன் அடிப்படையில், நம்மில் பலர் வரவுக்கு ஏற்ப செலவு, எதிர்கால தேவைக்கு ஏற்ற சேமிப்பு, ஏழை-எளியவர்களுக்கு தம்மால் இயன்ற அளவு கொடுத்து உதவுதல் என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதேநேரத்தில் சிலர் தங்கள் மனம் போல இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள். ‘வாழ்க்கை என்பது நன்றாக அனுபவிக்கத்தானே உள்ளது’ என்று இதற்கு விளக்கமும் கூறுவதுண்டு. மனிதர்களில் இன்னொரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வருமானம் எவ்வளவு வந்தாலும் அதையும் செலவு செய்துவிட்டு, அதற்கு மேலும் கடன் வாங்கி செலவு செய்ய தயங்குவதில்லை. பிறருக்கு கொடுத்து உதவும் மனமும் இவர்களிடம் இருப்பதில்லை.
இப்படிப்பட்டவர்களை இஸ்லாம் கண்டிக்கின்றது. இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் இருந்து செலவு செய்ய வேண்டும். அந்த செலவு தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தன் உற்றார் உறவினர்களுக்கும், பிறருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று இவ்வாறு திருக்குர்ஆன் நமக்கு கற்றுக்கொடுக்கின்றது:
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 2:267).
நமது வருமானம் நல்ல வழியில் இருக்க வேண்டும் அதை தான தர்மம் மூலம் செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த வசனம், கெட்ட வழியில் சம்பாதிப்பதையும், அதை தான தர்மம் செய்வதையும் கண்டிக்கிறது. எனவே நமது வருமானமும் நல்ல வழியில், இறைவன் வகுத்த வழியில் இருக்க வேண்டும். அதையும் தாராள மனதுடன் செலவு செய்ய வேண்டும் என்பதையே இந்த திருக்குர்ஆன் வசனம் வலியுறுத்துகிறது.
நம்மில் பலர் இன்று பகட்டுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும், வீண் பெருமைக்காவும் செலவு செய்ய தயங்குவது இல்லை. ஆடம்பரமான உடை, கவர்ச்சிகரமான செல்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் செலவு செய்ய பலர் தயங்குவது கிடையாது. இது தவறாகும். நமது செலவு அவசியமானதாக, நல்ல வழியில் இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வற்புறுத்திக்கூறுகின்றது:
“(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்”. (திருக்குர்ஆன் 2:3).
நாம் அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்களாக இருந்தால், அந்த ஏக இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவன் குறிப்பிட்டுள்ளபடி தொழுகையில் தவறாமல் ஈடுபட வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் இருந்து நல்ல வழியிலும் செலவு செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் இறைவனின் நல்லடியார்களாக இருக்க முடியும் என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது.
இறைவழியில் வருமானத்தைத்ததேடி, அதை இறைவழியில் செலவு செய்பவர்களையே இறைவன் மிகவும் நேசிக்கின்றான். இதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் மூலம் அறியலாம்:
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:195).
இறைவன் கொடுத்தவற்றை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழுவதுண்டு. இதற்கும் திருக்குர்ஆன் விடை சொல்கிறது. இதுகுறித்து நபிகள் நாயகம் முகமது (ஸல்) அவர்களிடம் இறைவன் கூறியதாவது:
“(நபியே) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்”. (திருக்குர்ஆன் 2:215).
நாம் செலவு செய்வது முதலில் நமது பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் இருக்க வேண்டும். அடுத்து அநாதைகள், ஏழைகள் போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் நன்மையான எதைச்செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்ட நமக்கு நற்கூலி தருவான் என்றும் இந்த வசனம் நற்செய்தி கூறுகின்றது.
எனவே, நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.