உடலில் முதுகெலும்பின் இருபுறமும் விலா எலும்புக்கூட்டின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
முக்கியமாக கழிவுகளை வடிகட்டுதல், ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீங்குதல், அதிகப்படியான நீரை வெளியேற்றுதல், உடலில் பி.எச் அளவு, உப்பு, பொட்டாசியம் அளவுகளை கட்டுப்படுத்துதல், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துதல், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை உருவாக்குதல் என ஏராளமான பணிகளை செய்கின்றன.
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வடிகட்டவும், உடல் இயக்கம் சீராக நடைபெற உதவும் ஹார்மோன்களை உருவாக்கவும் முடியும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை காப்பதற்கு சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிப்புக்குள்ளாக்கும். புகைப்பிடிப்பதால் ரத்த நாளங்கள் சேதமடையும். அதனால் உடல் முழுவதும் செல்லும் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். சிறுநீரகங்களும் பாதிப்படையும். சிறுநீரகங்களை பாதுகாக்க, புகைப்பிடிப்பதை விட்டொழிப்பதுதான் நல்லது.
அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கொண்டிருந்தால் சிறுநீரகமும் சேதமடையும். நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய் போன்றவை ஏற்படக்கூடும். குறைவான கலோரி கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு உடற்பயிற்சி செய்துவருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். சோடியம் குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகத்தின் ஆயுளை அதிகப்படுத்தலாம்.
சுறுசுறுப்பாக இருப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கிய வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுவது, நீண்டகால சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவை கடந்து உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டால் அது சிறுநீரகங்களை பாதிக்கும். புகை, மது இந்த இரண்டையும் விட்டொழிப்பது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள்தான் அதிக அளவில் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உடலில் உள்ள செல்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாதபோது ரத்தத்தை வடிகட்டுவதற்கு சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
இந்த அதிகப்படியான செயல்பாடு சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நீரிழிவு மேலாண்மை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவை மிக முக்கியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் இருக்கும் சோடியம் மற்றும் நச்சுகளை அழிக்க உதவும். சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தையும் குறைக்கும். தினமும் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.