புதிய அரசியலமைப்பு- பாகம் 4: வரையறைக்குட்பட்ட அரசாங்கம் (Limited Government)-வை எல் எஸ் ஹமீட்

வரையறைக்குட்பட்ட அரசாங்கம் என்றால் என்ன?

இது ஒரு ஜனநாயக நாட்டிற்கு அவசியமா? ஆம் எனில் எவ்வாறு?
இது சிறுபான்மைகளுக்கு நன்மையானதா? ஆம் எனில் எவ்வாறு?

 

 

“ வரையறைக்குட்பட்ட அரசாங்கம்” எனும் தலைப்பின்கீழ் மேற்படி கேள்விகளுக்கு பிரதானமாக விடைகாண நாம் முற்படுகின்றோம்.

“வரையறைக்குட்பட்ட அரசாங்கம்” என்பது ‘Constitutionalism’ என்ற கோட்பாட்டின் மையப்புள்ளியாகும். ( இதற்கான சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. சில சகோதரர்களிடமிருந்து கிடைத்த சில தமிழ்ச் சொற்களுள் “ அரசியலமைப்புவாதம்” என்ற சொல் இங்கு பாவிக்கப்படுகின்றது).

இந்த ‘அரசியலமைப்புவாதம்’ என்பது ‘ பெரும்பான்மைவாதம்’ ( Majoritarianism) என்ற கோட்பாட்டின் antithesis ( எதிர்வாதம்/எதிர்மறை) ஆகும்; அந்த வகையில் சிறுபான்மையினருக்கு இக்கோட்பாடு மிகமுக்கிமானது; என்ற ஆரம்பக் குறிப்பை பதிவுசெய்துகொண்டு குறித்த கோட்பாட்டிற்குள் நுழைவோம்.

Constitutionalism ( அரசியலமைப்புவாதம்)
—————————————————————
அரசியலமைப்பு என்பது அரசின் அதிகாரங்களை வரையறை செய்கிறது. அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகிறது. அரசியலமைப்பு வாதம் என்பது அரசியலமைப்பின் அடிப்படையை/ அதன் நோக்கத்தைப்பற்றிப் பேசுகின்றது.

அரசனின்/அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தமுடியுமா?
——————————————————————-
அதிகாரம் ( இறைமை) அரசனுக்கு, அரசுக்கு உரியது. சட்டத்தை ஆக்குவது அரசு. தான் ஆக்குகின்ற சட்டத்திற்கு தானே கட்டுப்படமுடியுமா? அது சாத்தியமா? கட்டுப்பாடு என்பது வெளியில் இருந்து வரவேண்டும். தன்னைத்தானே கட்டுப்படுத்துவது கட்டுப்பாடு எனக்கொள்ள முடியுமா? இது சதுரமான ஒரு வட்டத்தைக் கீறுவது போன்றதல்லவா? சதுரமான வட்டம் சாத்தியமா?” இந்தக் கருத்தினை தோமஸ் ஹொப்ஸ், ஜோன் ஒஸ்டின் போன்ற தத்துவ ஞானிகள் (17ம்,18ம் நூற்றாண்டு) கொண்டிருந்தனர்.

இவர்களின் கருத்துப்படி முழுமையான அதிகாரம் இறைமையுடைய ஒருவர் அல்லது ஒரு குழுவிடம் ( அரசு) இருக்கவேண்டும். அது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது; அதேநேரம் ஜோன் லொக்கி போன்றவர்கள் அரசின் அதிகாரம் அல்லது இறைமை சமூக ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது; என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

இவ்வாறான கருத்துக்கள்தான் “அரசின் இறைமை “என்பது “மக்கள் இறைமை” ( popular sovereignty) என்று மாறுவதற்கு காரணமாகும். எனவே, இறைமை அல்லது முழுமையான அதிகாரம் மக்களுடையது, அரசனுடையது அல்ல; என்ற கோட்பாடு அரசின் அதிகாரத்தை மக்கள் கட்டுப்படுத்தலாம்; என்ற கோட்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.

எந்த வகையில் கட்டுப்படுத்துவது? அக்கட்டுப்பாட்டின் பிரதான அம்சங்களென்ன? என்ற விடயங்களை ஆராய்கின்ற கோட்பாடுதான் ‘அரசியலமைப்புவாதமாகும்’ Constitutionalism. இக்கட்டுப்பாடுகளை உள்ளடக்குகின்ற ஆவணம்தான் ‘ அரசியலமைப்பு- Constitution’ ஆகும். அரசியலமைப்பில் ( Constitution இல்) இரு விடயங்கள் இருக்கின்றன. அவை, ஒன்று Constitutional Law இரண்டு Constitutional Conventions) ஆகும்.

இவற்றில் எழுதப்பட்ட விடயங்கள் Constitutional Law (அரசியலமைப்புச் சட்டம்) என்றும் எழுதப்படாத விடயங்கள் Constitutional Conventions ( அரசியலமைப்பு சம்பிரதாயம்/ மரபு) என்றும் அழைக்கப்படும். உதாரணமாக, பிரித்தானியாவில் பாராளுமன்றத்தால் ஆக்கப்படும் சட்டம் ஒன்றில் ராணி கையொப்பமிட மறுத்தால் என்ன செய்வது? என்று சட்டமெதுவுமில்லை. ஆனாலும் ராணி அவ்வாறு மறுப்பதில்லை. ஏனெனின் அது convention (மரபு) ஆகும்.

அதேபோல், இலங்கையில் உதாரணமாக, ஒரு சட்டம் மூன்றில் இரண்டு பங்கினால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜனவாக்கெடுப்பில் வெற்றிபெற்று அதில் ஜனாதிபதி கையொப்பமிடும்போது சட்டமாகிறது; என்று இருக்கிறது.. ( சில அரசியலமைப்புத் திருத்தங்கள்). ஜனாதிபதி கட்டாயம் கையொப்பம் வைக்கவேண்டுமென்றோ அல்லது கையொப்பம் வைக்காவிட்டால் என்ன செய்வதென்றோ சட்டம் கூறவில்லை. அவ்வாறு மறுக்காமல் கையொப்பம் வைப்பதென்பது constitutional convention ( மரபு) ஆகும். எனவேதான் இந்த எழுதப்படாத constitutional conventions உம் அரசியலமைப்பின் ஒரு பகுதி எனப்படுகிறது.

Constitutional Law தொடர்பாகத்தான் நீதிமன்றம் செல்லமுடியும்; Conventions தொடர்பாக முடியாது; என்ற ஒரு கருத்தும் சிலரிடம் இருக்கிறது. இது சிலவேளை பிரித்தானியாவுக்குப் பொருந்தினாலும் இறைமை மக்களுடையது; என்ற சரத்தைக்கொண்ட இலங்கைபோன்ற ஒரு நாட்டிற்கு பொருந்துமா? என்ற கேள்வி இருக்கிறது. நமது தலைப்பிற்கு அது முக்கிமில்லை; என்பதனால் அதற்குள் செல்லவிரும்பவில்லை.

அரசியலமைப்பு வாதத்தின்( Constitutionalism ) தோற்றம்
——————————————————
அரசியலமைப்பு வாதம் என்பது பிரித்தானிய, பிரான்சிய, அமெரிக்கப்புரட்சியின் விளைவாகப் பெறபட்டதாகும். ஆயினும் அது ஓர் முதிர்ச்சியான வடிவத்தைப் பெற்றது அமெரிக்க அரசியலமைப்பின் தோற்றத்தின் பின்னராகும்.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் தோற்றத்திற்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. சிலர் கி பி 4ம் நூற்றாண்டையும் ( சிலர் அதற்கும் முதல்) சிலர் கி பி 11ம் நூற்றாண்டையும் குறிப்பிடுகின்றபோதிலும் ( இவை தொடர்பாக அரசியலமைப்பு மாற்றம், என்ற எனது முன்னைய தொடரில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது) 1215 மக்னா காட்டா ஒப்பந்தத்தைத்தான் அதன் தோற்றுவாயாக பொதுவாக ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் அரசனின் அதிகாரத்திற்கு சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. ( இது தொடர்பாகவும் அத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது). இவ்வொப்பந்தம் உருவாகும்வரை பிரித்தானியாவில் ( உலகின் ஏனைய நாடுகளைப்போல்) அரசனிடமே இறைமை இருந்தது. ( இறைமை என்பது ‘கட்டுப்பாடற்ற, கேள்விக்குட்படுத்த முடியாத முழுமையான அதிகாரம்).
இந்த அதிகாரத்தின் ஒரு சிறிய பகுதி “மக்னா காட்டா” மூலம் விட்டுக்கொடுக்கப்படுகிறது.

எனவே, இங்கு அரசனின் அதிகாரத்தில் முதல் தடைவையாக கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது. ஆயினும் இது அரசனாக விரும்பி விட்டுக்கொடுத்த அதிகாரம். பிரித்தானியா தொடர்ந்து அரசனின் அதிகாரம் தொடர்பாக பல போராட்டங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.

அந்த வரிசையில் 1642ம் ஆண்டு ‘கலப்பு அரசு- Mixed Government’ என்ற ஒரு கோட்பாடு முதலாம் சார்ள்ஸ் மன்னனால் அறிமுகப்படுத்தப்படுகிறது. ( ஆனாலும் பாராளுமன்ற கீழ்சபை என்பது 13ம் நூற்றாண்டிலே ஆரம்பித்து விட்டது. “ பாராளுமன்றம்” என்ற சொல் உத்தியோகபூர்வமாக 1236ம் ஆண்டே பாவிக்கப்பட்டது; என்ற நீண்ட வரலாறு இருக்கின்றது; அது நமக்கு இங்கு அவசியமில்லை). இந்தக்கோட்பாடுதான் “ பாராளுமன்றம் என்பது – மன்னன், பிரபுக்கள் மற்றும் கொம்மன்ஸ், அதாவது சாதாரணமானவர்கள்- ஆகியோரைக்கொண்டது; என்பதாகும். இம்மூன்று தரப்பையும் உள்ளடக்கிய அமைப்புத்தான் “இறைமையுடைய” அரசாகும்.

மன்னன் முதலாம் சார்ள்ஸ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அரசை எவ்வாறு கட்டுப்படுத்துவதென்ற கேள்வி எழுகிறது. இந்தப் பின்னணியில்தான் சட்டவாக்க, நிர்வாக, நீதித்துறை அதிகாரங்கள் தனித்தனிப் பிரிவுகளாகும்; என்ற கோட்பாடு பிறக்கிறது.

இங்கு நாங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அரசியலமைப்புவாதத்தின் அடிப்படை அரசின் அதிகாரத்தை வரையறை செய்வதன்மூலம் அரசைக் கட்டுப்படுத்துவது. அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை ‘ அதிகார வேறாக்கமாகும்- (Separation of Power)

இந்த அதிகார வேறாக்கக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம் ‘தனி நபர்களோ, குழுக்களோ அதாவது அரசனோ, அரசாங்கமோ – தன்னுடைய செயற்பாடுகளில் தானே நீதிபதியாக இருக்கக்கூடாது; என்பதாகும். “No individuals or groups should be judges in their own cause”.

அதிகாரங்கள் அனைத்தும் இறுதியில் ஒருவரின் கைகளில் ( அரசனின்) இருக்கவேண்டும்; என்ற கோட்பாடு, பிரித்தானிய, பிரான்சிய, அமெரிக்கப்புரட்சிகளைத் தொடர்ந்து மாற்றமடைகிறது. அதாவது ‘அதிகார வேறாக்கத் தத்துவத்தும் குறித்த மூன்று பிரிவுகளுக்கும் இடையில் checks and balances ஊடாக இதில் எந்த ஒரு பிரிவும் எல்லை மீறாமல் இருப்பதை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, இந்த அதிகாரங்களின் இறுதிச் சொந்தக்காரன் யார்? என்ற கேள்வியை உருவாக்குகிறது.

அதுவரை, அதிகாரங்களின் இறுதிச் சொந்தக்காரன் ( இறைமைக்குரியவன்) அரசன் என்ற நிலையிருந்து ( அரசனோ/ அரசோ இறுதி அதிகாரத்தின் சொந்தக்காரனானால் அவனை/ அரசை, அவனே/ அரசே கட்டுப்படுத்துவதென்பது ‘சதுரமான வட்டம் கீறுவதாகும்.) எனவே, அதிகாரங்களின் இறுதிச் சொந்தக்காரன் மக்கள்தான், அதாவது இறைமை மக்களுடையது; என்ற தத்துவம் மேலெழுகிறது.

அதிகாரம் மக்களிடையது என்றால் தமது அதிகாரங்களில் எவ்வளவு அதிகாரத்தை ஆட்சியளருக்கு கொடுக்க மக்கள் விரும்புகிறார்கள்? ஒரு காலத்தில் ஆட்சியாளர் என்பது ஒருவராக இருந்தது. அதாவது மன்னன் ஆட்சியாளராக இருந்தார். ஆட்சியின் மூன்று துறையும் ( சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம், நீதித்துறை அதிகாரம்) மன்னனிடமே இருந்தது.

காலவோட்டத்தில் இம்மூன்று துறையும் தனித்தனியாக வளர்ச்சியடைந்தாலும் இவற்றின் இறுதி அதிகாரம் மன்னனிடமே இருந்தது. ( இது இரண்டாம் கட்டம்)

அதன்பின் இம்மூன்று துறையும் தனித்தனி சுதந்திரமான துறைகளாக மாறுகின்றன. இதற்குக் காரணம் ‘அதிகாரம் மன்னனுடையது என்ற நிலையிலிருந்து அதிகாரம் மக்களுடையது ( popular sovereignty) என்ற நிலைக்கு வந்ததாகும். அதேநேரம் இம்மூன்று துறையும் மக்கள் சார்பாக நிர்வாகம் செய்கின்ற அதேவேளை, ஒன்றையொன்று ஆதிக்கம் செய்யக்கூடாது என்பதற்காகவும் தமது அதிகார எல்லையை மீறக்கூடாது; என்பதற்காகவும் ‘அதிகாரவேறாக்கத் தத்துவமும் ( Docrine of Separation of power) அவற்றிற்கிடையிலான checks and balances போன்ற விடயங்களும் உருவாகின்றன.

இங்கு எழுகின்ற அடுத்த கேள்வி: அதிகாரம் மக்களுடையது. மூன்று துறைகளுக்கும் “ மக்கள் கொடுக்கின்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவோ ஒன்றையொன்று மேவவோ முடியாது. சரி. ஆனால் எவ்வளவு அதிகாரம் கொடுப்பது? கொடுக்கின்ற அதிகார எல்லை என்ன? எந்தெந்த அதிகாரங்களைக் கொடுக்கலாம். எவற்றைக் கொடுக்கக்கூடாது? ஏன் சிலவற்றைக் கொடுக்கக்கூடாது?

கொடுத்தவற்றை துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதற்கு என்ன வழி? இந்த அதிகார வேறாக்கத்தையும் checks and balances ஐயும் செயற்படுத்துவதெவ்வாறு? இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களினதும் பொதுவாகவும் சிறுபான்மைகளின் உரிமைகளை குறிப்பாகவும் இந்த அதிகார வேறாக்கம், checks and balances ஐக் கொண்டு எவ்வாறு உறுதிப்படுத்துவது?

இவை அனைத்திற்கும் தேவையான பொறிமுறையை ( mechanism) உள்ளடக்குகின்ற ஆவணம்தான் அரசியலமைப்பு-constitution ஆகும். ஆரம்பத்தில் ஒரு அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் மூன்றாக கருதப்பட்டது. அதாவது சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறைகளின் அதிகாரங்களை மேற்சொன்ன அடிப்படையில் வரையறை செய்வது. ஆரம்பத்தில் உரிமைகள் என்ற ஒரு விடயம் அரசியலமைப்பில் இருக்கவில்லை.

அதன்பின் அது “உரிமைகள்” என்ற ஒன்றையும் இணைத்து நான்காக மாறியது. தற்போது மேலும் ஒருபடி முன்னேறி அரசியலமைப்பு என்றாலே அது “உரிமைகள்” பற்றியதுதான். அதாவது அரசியலமைப்பு என்றால் உரிமை, உரிமை என்றால் அரசியலமைப்பு; அரசியலமைப்பிலுள்ள மற்றவையெல்லாம் ( ஏனைய முன்சொன்ன துறைகள்) இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கான, உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளே! என்று கூறுகின்ற அளவு அரசியலமைப்புக் கோட்பாடு முன்னேறி இருக்கின்றது.

இந்தப் பின்னணியில்தான் தமது உரிமைப் பாதுகாப்புகளோடு சம்பந்தப்படுத்தி நாம் மேலும் ஆராயவேண்டும்.

( தொடரும் இன்ஷாஅல்லாஹ்)