புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் பிரித்தானியாவை தவிர வேறு நாடுகளிலும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் புதுவகையான கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலர் மட் ஹான்கக் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த புதிய வைரஸ் பிரித்தானியா மட்டுமல்லாமல் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இதே வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸ் ஏற்கனவே பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை விட வேகமாக பரவுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸ் ஸ்பெயினில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மூலமாக பிரித்தானியாவிற்குள் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் அமைப்பு வித்தியாசமாக இருப்பதால் மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை அடையாளம் காண்பது கடினம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய வைரசுக்கு எதிராக செயற்படாமல் போகலாம் என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பண்டிகை காலங்களில் கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை “குறுகிய” மற்றும் “சிறியதாக” வைத்திருக்குமாறு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மக்களை கோரியுள்ளார்.
டிசம்பர் 23 முதல் 27 வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் – ஆனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திப்பதற்கு முன்பு மக்கள் “கடினமாக சிந்திக்க வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இன்று பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 25,161 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், 612 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.