அமெரிக்காவின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவுக்காக உளவு வேலைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் ஹேக்கர்கள், அமெரிக்காவின் கருவூலம், வர்த்தகம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளின் கணினி அமைப்புகளில் ஊடுருவியிருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே இந்த ஹேக்கிங் நடந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹேக்கர்கள் அரசாங்கத் துறைகளில் உள்ள மின்னஞ்சல் அமைப்புகளுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. ஹேக்கிங் செய்யப்பட்டது தொடர்பான முழு தரவுகளும் உடனடியாகத் தெரியவில்லை. ஹேக்கர்கள், அரசின் பிற துறைகளிலும் பல தனியார் நிறுவனங்களின் கணினிகளிலும் ஊடுருவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வர்த்தகத் துறை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஆகியவை வெளியிட்ட அறிக்கைகளில் ஹேக்கர்கள் ஊடுருவலை ஒப்புக் கொண்டன. ஆனால் முழுமையான விவரங்களை வழங்கவில்லை.
அரசாங்க நெட்வொர்க்குகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஊடுருவல் தொடர்பாக நடவடிக்கை தொடங்கியிருப்பதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் உல்யோட் கூறினார்.
இதுபற்றி முன்னாள் இணைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஹேக்கர்கள் உள் மின்னஞ்சல் அமைப்புகளில் ஊடுருவி, தங்கள் விருப்பப்படி படித்துள்ளனர். இதுபோன்ற ஊடுருவலை இதுவரை நான் பார்த்ததில்லை’ என்றார்.
ஆனால், ரஷ்யாவையோ அல்லது வேறு எந்த நாட்டையே அமெரிக்க அரசு குறிப்பிடவில்லை.
அமெரிக்க தேர்தல் முடிவை மாற்றும் வகையில் ரஷ்ய ஹேக்கர்கள் திறமையானவர்கள் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.