1905 இல், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த சீ.பி. லெயாட் ஒருநாள் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது முஸ்லிம் சட்டத்தரணியான எம்.சி.ஏ. காதர், துருக்கித் தொப்பி அணிந்தவராக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு சார்பாக வாதிட எழுந்தார். அதைக் கண்ட நீதிபதி, துருக்கித் தொப்பியணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகுவதன் மூலம் நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறியதுடன், அவ்வாறு வாதாடுவதை ஆட்சேபித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டத்தரணி கூறிய விளக்கத்தை நீதிபதி ஏற்கவில்லை. ஆனால், சட்டத்தரணி எம்.சி.ஏ. காதர் ‘தொப்பி அணிவது தனது உரிமை’ என்று கூறி தொப்பியை கழற்ற மறுத்ததால் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது.
இந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சாத்வீகப் போராட்டம் நடாத்தப்பட்டது. அறிஞர் அஸீஸ் இதற்காக முன்னின்றதுடன் மாக்கான் மாக்கார் உள்ளிட்ட 21 முஸ்லிம் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய குழுவும் செயற்பட்டது. இதன் பலனாக, முஸ்லிம் சட்டத்தரணிகள் தொப்பியணிந்து நீதிமன்றில் ஆஜராவது சட்டபூர்வமானது.
இதனைத்தான் நாம் ஒற்றை வரியில் ‘துருக்கித் தொப்பிப் போராட்டம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி இலங்கை வரலாற்றிலும் கூட முஸ்லிம்கள் இவ்வாறுதான் தமது கலாசார அடையாளங்களையும், அடிப்படை உரிமைகளும் தக்க வைத்துள்ளனர். இங்கே போராட்டம் என்பது ஆயுதங்களை அல்லது வன்முறைகளை, அடிப்படைவாத சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட முன்னெடுப்புக்கள் அல்ல. முட்டாள்தனமான அரசியல், சமூக நகர்வுகளும் அல்ல. மாறாக, சாத்வீக வழிமுறையிலமைந்த நுட்பமான நகர்வுகளையே குறிப்பிடுகின்றது என்பதை கவனிக்க.
அரசியல் இயலாமை
முஸ்லிம் கட்சிகளோ, தேசியத் தலைவர்களோ இல்லாத 100 வருடங்களுக்கு முன்னரான அன்றைய காலத்தில் துருக்கி தொப்பிப் பிரச்சினையை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் முஸ்லிம்கள் கடந்து சென்றிருக்க முடியும். ஆயினும், இப்போது தொப்பியை விட்டுக் கொடுக்க சம்மதித்தால், நாளை இன்னுமொரு அடையாளத்தை, உரிமையை பறிப்பதற்கான சூழல் கட்டமைக்கப்பட்டு விடும் என்ற யதார்த்தத்தை அன்றைய முஸ்லிம் தலைமைகள் தெளிவாக முன்னுணர்ந்து கொண்டார்கள்.
சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பற்றிய புரிதல் இல்லாத பெருந்தேசிய அரசியற் சூழமைவில், ஆக்கபூர்வமான செயற்பாடற்ற முஸ்லிம் அரசியல் களமும், முஸ்லிம்களிடையே உருவாகிவரும் மத அடிப்படையிலான மாற்றுக் கருத்துக்களும், அரசியல் கட்சிகள் மற்றும் பிரதேச அடிப்படையிலான பிளவுகளும் ஒற்றுமையின்மையும் இச் சமூகம் இன்று பல உரிமைகளை இழப்பதற்கான நிகழ்தகவுகளை அதிகரித்திருக்கின்றன.
தமிழர்களை அடக்கி ஒடுக்கியதைப் போன்று அடுத்த சிறுபான்மை இனமான முஸ்லிம்களையும் ஒரு கை பார்த்துவிடும் வேட்கை நாட்டுப்பற்றாளர்கள் என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டிருக்கின்ற சிங்கள கடும்போக்காளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. இருப்;பினும், தமிழர்கள் இன ரீதியாகவே ஒடுக்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் மத ரீதியாக குறிவைக்கப்பட்டிருக்கின்றனர். உலகளாவிய முஸ்லிம் விரோத சக்திகளும் இதனையே அவாவி நிற்கின்றன.
இந்தப் பின்னணியில், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அளுத்மக, கண்டி கலவரங்கள், இளம் பிக்கு ஒருவரின் பொய்யான வாக்குமூலத்தை நம்பி மேற்கொள்ளப்பட்டதாக இப்போது தெரிய வந்திருக்கின்ற மினுவாங்கொடை வன்முறைகள் என்பவற்றுக்கு மேலதிகமாக, முஸ்லிம்களின் கலாசார, மத அடிப்படையிலான உரிமைகள் பலவும் மறுதலிக்கப்பட்டுள்ளன அல்லது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இதில் கடைசிதான் ஜனாஸா எரிப்பு விவகாரம். இது ஆரம்பமும் அல்ல, முடிவும் அல்ல.
பல தரப்பும் புறக்கணிப்பு
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நிலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கையின் 22 இலட்சம் முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை வெளிப்படையாகவே தட்டிக் கழிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள், சுகாதாரத் துறை, தேசியவாதிகள் மட்டுமன்றி நீதித்துறை என 4 கட்டமைப்புக்களால் இவ்வுரிமை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது பட்டவர்த்தனமானது.
பெருந்தேசியவாதத்தை அடியொற்றிய ஆட்சிச் சூழல், உயிர்ப்போடு இருக்கின்ற இனமேலாதிக்க சிந்தனை, கடும்போக்காளர்களின் பிரசாரங்கள் மட்டுமன்றி இணக்க அரசியல் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் காத்திரமற்ற சில அணுகுமுறைகளும் இந்த உரிமையைக் கூட பெற முடியாத வக்கற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
குறிப்பாக, ஆளும் பொதுஜனப் பெரமுணவுக்கு எதிராக ஐந்தாறு வருடங்கள் அரசியல் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், அக்கட்சிகளின் எம்.பி.க்களது அரசியல் போக்குகள் தோல்வி கண்டிருக்கின்றன.
அதேநேரம், தற்போதைய ஆட்சியாளர்களிற்கு துதிபாடியதுடன் ஜனாஸா எரிப்புக்கு எதிராக போராடுவோம் என்று உணர்பூர்வமாகக் கூறிய தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் கோரிக்கை, ராஜபக்சக்களின் ஆஸ்தான சட்ட அறிவுரைஞராக இருந்து தேசியப் பட்டியல் எம்.பி.யாகிய நிதி அமைச்சர் அலி சப்ரி எடுத்த முயற்சி மற்றும் ஆளும் தரப்பிலுள்ள எம்.பிக்களின் வேண்டுதல்கள் எல்லாம் முகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன.
அத்துடன், 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முன்னதாக ஜனாஸா எரிப்பு போன்ற முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வைப் பேரம்பேசிப் பெறாமல், ‘நாம் ஆதரவளிப்பதன் பயனை முஸ்லிம் சமூகம் விரைவில் அடைந்து கொள்ளும்’ என்று அறிக்கை விட்ட அந்த ஆறேழு எம்.பி.க்களின் அரசியலும் முஸ்லிம் மக்கள் மன்றத்தில் தலைகுப்புற விழுந்து கிடக்கின்றது.
ஆக மொத்தத்தில், ஜனாஸா நல்லடக்கம் விடயத்தில் இந்த நிமிடம் வரைக்கும் ஆளும், எதிர்த்தரப்பிலுள்ள எல்லா முஸ்லிம் அரசியல் தலைமைகளும், அரசியல்வாதிகளும் தோல்வி கண்டிருக்கின்றனர் அல்லது வெற்றியடையவில்லை. அதுமட்டுமன்றி, முஸ்லிம்களின் உரிமைசார் கோரிக்கை எல்லா மட்டங்களிலும், பல கட்டங்களாக மறுதலிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் மக்களிடையே பெருங் கவலையை உண்டுபண்ணியிருக்கின்றது.
முதலாவது மறுப்பு
எல்லா சமூகக் கட்டமைப்பிலும் பிறப்புக்கும் இறப்புக்கும் விசேட முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் அவை இரண்டுமே வாழ்வில் எல்லோருக்கும் பொதுவானதும் நிச்சயிக்கப்பட்டதும் ஆகும். அந்த வகையில் உலக முஸ்லிம்கள் மரணிப்போரின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி நிலத்தில் நல்லடக்கம் செய்வதே வழக்கமாகும்.
முஸ்லிம்கள் மட்டுமன்றி, கத்தோலிக்கர்களில் கணிசமானோரும் புதைப்பதையே விரும்புவதாக குறிப்பிடலாம். ஏன்? சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் கூட உடனடியாக எரிப்பதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றார்களா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. அண்மையில், தென்னிலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த சிங்கள நபரின் உடலை தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை இதற்கொரு சாட்சியாகக் கொள்ளப்படலாம்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிப்போரின் உடல்களை தகனம் செய்யவோ ஆழமாக புதைக்கவோ முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் மார்ச் மாதத்திலேயே உத்தியோகபூர்மாக அறிவித்து விட்டது. உலக சுகாதார ஸ்தாபனம் என்பது விவசாயிகள், வர்த்தகர்கள் அல்லது அரசியல்வாதிகளின் சங்கம் அல்ல. உலகின் ஒவ்வொரு நாடும் பற்றிய பின்புலத்தையும் துறைசார் அறிவையும் கொண்ட ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபுணர்களின் கட்டமைப்பாகும்.
ஆனால், என்ன நடந்தது?… ஆரம்பத்தில் எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வழிகாட்டல் குறிப்புக்களை இணைத்தில் பிரசுரித்திருந்த சுகாதார அமைச்சு, முதலாவது முஸ்லிமான கொரோனா நோயாளி இறந்த சில மணிநேரத்தில், ‘எரிக்கவே முடியும்’ என திருத்திய புதிய வழிகாட்டல் குறிப்பொன்றை வெளியிட்டது. இதன்மூலம் அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை முதலாவதாக மறுக்கப்பட்டது.
இரண்டாவது மறுப்பு
அதன் பிறகு, கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடட அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கமைய முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி தருமாறு அரசாங்கத்தை கோரினர். முஸ்லிம்கள் பெரிதாக வாக்களிக்காத ஆத்திரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் அதனை பெரிதாக காதில் வாங்கிக் கொள்ளாமல், எரிக்கவே வேண்டும் என்றனர்.
இதன்மூலம் இரண்டாவது கட்டமாக இவ்வேண்டுதல் நிராகரிக்கப்பட்டது. நிலத்திற்குக் கீழால் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதாக சுகாதார துறையினர் கூறுகின்றனர். எனவே எம்மால் அடக்கம் செய்வதற்கு அனுமதி தர முடியாது என்றே அரசாங்கம் கூறியது என்பதை அதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால், 180 இற்கு மேற்பட்ட நாடுகளில் பரவாத கொரோனா வைரஸ் இலங்கையின் நிலத்தடியில் மட்டும் பரவும் என்பது எந்த அடிப்படையிலானது? அதற்கான விஞ்ஞான பூர்வமான சாத்தியங்கள் என்ன? என்பதை அரசாங்கம் ஆதரபூர்வமாக முஸ்லிம் சமூகத்திற்கோ ஏனைய நாட்டு மக்களுக்கோ தெளிவாக எடுத்துக் கூறியதாக நினைவில்லை.
அதுமட்டுமன்றி, உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களின் அறிவையும் மிகைத்த அந்த உள்நாட்டு நிபுணர்கள் யார் என்பதையும் சுகாதார அமைச்சு வெளிப்படுத்தவில்லை. அப்படியென்றால், நிபுணர்கள் சொல்வது சரி என்றால், மருத்துவ அதிகாரிகள் சங்கம் புதைக்கவும் முடியும் என ஏன் அறிக்கை வெளியிட்டது? ஏன் இப்போது அவர்கள் மௌனம் காக்கின்றனர்? என்ற வினாக்களுக்கு விடை கிடைக்கப் போவதே இல்லை.
மூன்றாவது மறுப்பு
இந்த நிலையிலேயே, முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவுடன் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய அரசாங்கம், ஜனாஸா எரிப்பு விடயத்தில் சற்று மனம் இரங்கி வந்தது. அமைச்சர் அலி சப்ரியின் அயராத முயற்சியின் பலனாக அமைச்சரவையில் இவ்விவகாரம் சாதகமான கண்ணோட்டத்துடன் கலந்துரையாடப்பட்டது. நல்ல செய்தி வரும் என முஸ்லிம்கள் நம்பினர்.
ஆயினும், இது பற்றிய தகவல் வெளியாகியவுடன் இனவாதிகளும், போலி தேசப் பற்றாளர்களும், காவியுடைதாரிகளும் இவ்விடயத்தை கையில் எடுத்தனர். தமிழர்களி;ன் அபிலாஷைகள் உள்ளடங்கலாக சிறுபான்மையினரின் உரிமைசார்ந்த விடயங்களில் மூக்கை நுழைத்து, எந்தத் தீர்வும் கிடைக்காமல் குட்டையைக் குழப்பும் இனவாதிகள் மற்றும் அச் சிந்தனையில் ஊறித் திளைத்த ஓரிரு அறிவாளிகள் இதற்கெதிராக குரல் எழுப்பினர்.
இந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது என்று அதிகமான சிங்கள நிபுணர்கள் கூறினர். அவர்கள் நன்றிக்குரியவர்கள். ஆயினும், சிங்கள மக்களிடையே இருக்கின்ற பயம், சடலங்களை எரிக்கும் விடயத்தில் கத்தோலிக்க சமூகம் மௌனம் காக்கின்றமை, தற்போதிருக்கின்ற நாட்டுச் சூழல் ஆகியவற்றை தமக்கு சாதமாக பயன்படுத்தி இவ்விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மேற்படி கற்பிதங்களை நம்பிய ஒரு தொகுதி சிங்கள மக்களால் முஸ்லிம்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத நிலை தோன்றியுள்ளது.
நான்காவது நிராகரிப்பு
இது இவ்வாறிருக்க, கடைசி முயற்சியாக முஸ்லிம்கள் நீதிமன்றத்தை நாடினர். இரு முஸ்லிம் கட்சிகள் சார்பிலும், குரல்கள் இயக்கம் போன்ற சிவில் அமைப்புக்களின் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. என்.சுமந்திரன் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலரும் இம்மனுக்களின் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் மன்றுக்கு வர முடியாத காரணத்தால், அவருடைய கனிஷ்ட சட்டத்தரணியான றவூக் ஹக்கீமின் மருமகன் ஆஜரானமையும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தமை வேறு கதை
மேற்படி 11 மனுக்கள் கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதன்முதலாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மறுநாளும் பரிசீலனை தொடர்ந்த நிலையில், இம்மனுக்களை (விசாரிப்பதில்லை என்ற அடிப்படையில்) உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தில் ஒரு நீதியரசர் இம்மனுக்களை நிராகரிப்பதற்கு உடன்படாத சூழ்நிலையிலும் இவ்வறிப்பை உயர்நீதிமன்றம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றின் தீர்மானத்தை நாம் விமர்சிக்க முடியாது. ஆயினும், ஜனாஸா எரிப்பானது மனுதாரர்களின் (முஸ்லிம்களின்) உரிமைகளை பாதிப்பதாக கருதுமிடத்து உயர்நீதிமன்றம் அந்த மனுமீதான விசாரணைக்கு அனுமதி அளித்திருக்கும். இதுதான் வழமையாகும்;. ஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலும் எவ்வித காரணமும் சொல்லாமலும் தள்ளுபடி செய்துள்ளமையானது அதில் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை என்பதையே குறிப்புணர்த்தவதாக அமைகின்றது.
இது முஸ்லிம்களுக்கு பெரும் மனவருத்தமும், ஏமாற்றமும் ஆகும். எல்லோரும் உதவி கேட்பதற்காக கடைசியாக இறைவனிடம் அல்லது ஆக உயர்ந்த ஒருவரிடம் போய் நிற்பார்கள். அவ்வாறு, எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்களி;ன் உரிமைக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாலேயே உயர்நீதிமன்றத்தை நாடிச் சென்றனர். எவ்வகையிலும் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களின் மனதில் இருந்தது.
ஆனால், இம்மனுக்கள் விசாரிக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டதால் முஸ்லிம்களின் இறுதி நம்பிக்கையும் வீண்போயுள்ளது. நீதி தேவதையும் நம்மை கைவிட்டு விட்டார் என்று முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. சமகாலத்தில், சிங்கள முற்போக்காளர்களும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கைச் சூழலில் இதுவெல்லாம் சகஜனமானவையே. ஆயினும், உயர்நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையிலேயே மேற்படி மனுக்களை தள்ளுபடி செய்திருக்கின்றது என்ற போதிலும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தே தீர வேண்டும் என்று நினைத்திருப்பவர்களுக்கு இது மறைமுகமாக ஒருவித உற்சாகத்தை கொடுத்துள்ளதாக தெரிகின்றது. அதாவது, இதனை அடிப்படையாக வைத்து தமது செயலை அவர்கள் நியாயப்படுத்த முனைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
அரசின் பொறுப்பு
எனவே, எல்லா கட்டமைப்புக்களாலும் முஸ்லிம்களின் கோரிக்கை தட்டிக் கழிக்கப்பட்டதால் மீண்டும் அரசாங்கத்திடமே செல்ல வேண்டிய அல்லது போராட வேண்டிய நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனலாம். இந்நிலையிலேயே, கடந்த சில தினங்களாக ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடன்படுவதில்லை என்ற நூதன போராட்டத்தை சில முஸ்லிம் குடும்பங்கள் முன்னெடுத்திருக்கின்றன. இந்த துணிச்சலை பாராட்ட வேண்டும்.
ஆனால், அரசாங்கம் அவ்வுடல்களை அரச செலவில் எரிக்கப் போவதாக அறிவித்ததுடன், சில ஜனாஸாக்கள் இதுவரை தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது. எனவே, இம்மக்கள் எதற்காக இதைச் செய்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல். இதனை ஏட்டிக்குப் போட்டிபோல கருதி மேற்படி நூதனப் போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு எல்லா தரப்பினராலும் தொடராக மறுதலிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் அரசாங்கம் மிகக் கவனமாகவும் பொறுப்புக்கூறலுடனும் கையாள வேண்டும். தமிழர்களின் இனப் பிரச்சினை இதற்கு நல்ல உதாரணமாகும்.
தமிழ் சமூகத்தின் சாதாரண உரிமைக் கோரிக்கையை நியாயபூர்வமாக உள்நாட்டில் உறுதிப்படுத்த தவறியதனாலேயே தமிழ் மக்கள் இன்று சர்வதேச நாடுகளுக்கு தமது பிரச்சினையை கொண்டு சென்றிருக்கின்றனர். அது அரசாங்கத்திற்கு ஜெனிவா மனித உரிமை பேரவை உள்ளிட்ட பல அரங்குகளில் பெரும் தலையிடியைத் தோற்றுவித்திருக்கின்றது. எனவே, முஸ்லிம்கள் விடயத்திலும் ஆட்சியாளர்கள் அவ்விதம் செயற்பட்டு விடக் கூடாது.
உண்மையில், அனைத்து உடல்களையும் எரிப்பது என்ற முடிவை மாற்றி, முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது என்று ராஜபக்சக்கள் திடசங்கற்பம் பூண்டுவிட்டார்கள் என்றால், அதை செய்து முடிப்பதற்கு இந்த இனவாதிகள் எல்லாம் ஒரு தடையே இல்லை. இந்த அரசாங்கம் நினைத்தால் எதனையும் செய்யலாம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த அரசியல்தானே!
– ஏ.எல். நிப்றாஸ் (வீரகேசரி – 06.12.2020)