ஜனாதிபதியைத் தெரிவுசெய்தல்
———————————————-
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி என்பது மிகமுக்கி பதவியாகும். அந்த ஜனாதிபதி ஒரு இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கமுடியுமா? அல்லது சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கவேண்டுமா?
இலங்கை போன்ற ஒரு நாட்டில் ஒரு சமூகம் 70 விகிதத்திற்குமேல் இருக்கின்றபோது 50% தாண்டும் பெரும்பான்மை என்பது ஒரு சமூகம் தீர்மானிக்கும் நிலையில் இருக்கும்போது ஏனைய சமூகங்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதை இலங்கையில் நாம் அனுபவரீதியில் கண்டுகொண்டிருக்கின்றோம்.
தற்போது புதிய யாப்பிற்காக ஆலோசனை கோரியிருக்கிறார்கள். இந்நிலையில் ஜனாதிபதித் தெரிவில் சகல சமூகங்களையும் கட்டாயமாக உள்வாங்கப்படும் ஏதாவது ஒரு முறையை நாம் பிரேரிக்க முடியுமா? ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது வேறுவிடயம்.
அவ்வாறாக இருந்தால் அது எந்தமுறை? இது தொடர்பாக நாம் சற்று சிந்திப்பதற்காகவாவது முயற்சிக்கக்கூடாதா?
இந்தப்பின்னணியில் உலகின் இரு முக்கிய நாடுகளின் ஜனாதிபதித் தெரிவுமுறையில் உள்ள சில முக்கிய அம்சங்களைப் பார்த்துவிட்டு இலங்கை விடயத்திற்கு வருவோம்.
அமெரிக்க முறை
————————-
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையைப் பொறுத்தவரை அமெரிக்கா மிகப்பிரதானமான நாடாகும். ஆனால் அமெரிக்காவில் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி தெரிவாவதில்லை; என்பது அண்மைய அமெரிக்கத் தேர்தல்மூலம் பலரும் அறிந்திருக்கின்றனர். அங்கு ‘தேர்தல் கல்லூரி முறை’ என்கின்ற ஒன்று இருக்கின்றது. அதாவது அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இருந்தும் ( மற்றும் கொலம்பியா மாவட்டம்) 100 செனட்டர்கள் உட்பட 538 பிரதி நிதிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களில் 270 பேர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவரே ஜனாதிபதியாவார்.
இந்த 538 அங்கத்தவர்களும் “தேர்தல் கல்லூரி அங்கத்தவர்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தேர்தலுக்கு முன்பே தாம் தெரிவுசெய்யப்படும்போது எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பார் என்பதைத் தெரிவிப்பார். வாக்குச் சீட்டில் இவர்கள் ஆதரிக்க அறிவிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளரது பெயர்தான் இருக்கும். அதற்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
எனவே, நேரடியாக ஜனாதிபதியைத் தெரிவுசெய்பவர்கள் இந்த தேர்தல் கல்லூரி அங்கத்தவர்களே என்றபோதும் மறைமுகமாக மக்களே ஜனாதிபதியைத் தெரிவுசெய்கின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்தின் வாக்காளர் தொகைக்கேற்ப தேர்தல் கல்லூரி அங்கத்தவர்கள் தொகை ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒவ்வொரு 10 வருடங்களுக்கொருமுறை சனத்தொகைக் கணக்கெடுப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாறுபடும்.
அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 48 மாநிலங்களைப் பொறுத்தவரை (Maine, Nebraska ஆகிய இரு மாநிலங்களைத்தவிர) எந்த வேட்பாளர் அதிகூடிய வாக்குகளை அம்மாநிலத்தில் பெறுகின்றாரோ அவருக்கே அம்மாநிலத்தின் மொத்தக் கல்லூரி வாக்குகளும் கிடைக்கும். இதனை “winner-takes-all” system என அழைக்கிறார்கள்.
இந்தத் தேர்தல்முறையை ஆழமாக ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. நமது நாட்டிற்கு இதிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதாவது அம்சங்கள் இருக்கிறதா? என்பதுதான் நோக்கமாகும்.
ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தவை இணைந்துதான் அமெரிக்கா என்றொரு நாடு உருவானது. ஆரம்பத்தில் அது ஒரு Confederation ஆக இருந்தது. அப்பொழுது மாநில அரசாங்கங்களுக்கே அதிக அதிகாரம் இருந்தது. பின்னர் அது Federation ஆக மாறியது. இதில் மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் அதிகரித்தது.
(சமஷ்டி தொடர்பாக கடந்தகாலங்களில் நான் எழுதிய ஆக்கங்களில் இவை சம்பந்தமாக விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது.)
இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி அங்கங்களாகக் கருதப்பட்டு அந்த மாநிலத்தின் வாக்குகள் வேட்பாளர்களுக்கிடையில் பிரிக்கப்பட்டாலும் அம்மாநிலத்தில் யார் அதிகவாக்குகளைப் பெறுகின்றாரோ அவர் அம்மாநிலத்தில் வெற்றிபெற்றவராகக் கருதப்பட்டு அம்மாநிலத்திற்கு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கு என்ன பங்கு வழங்கப்பட்டிருக்கின்றதோ அம்முழுப்பங்கும் அந்த வேட்பாளருக்கு வழங்கப்படும். உதாரணமாக, மொத்த 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் 20 வாக்குகள் குறித்த ஒரு மாநிலத்திற்குரியதென்றால் அந்த 20 வாக்குகளும் அம்மாநிலத்தில் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு வழங்கப்படும்.
சுருங்கக்கூறின் மக்கள் வாக்குப்பலம் எதுவாக இருந்தபோதும் மாநிலப்பலம் யாருக்குக் கிடைக்கின்றதோ அவர்தான் ஜனாதிபதியாக வருவார்.
இம்முறைமைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு இருக்கின்றது. இம்முறைமை ஜனநாயக விரோதமானது. ஏனெனில் ஒரு வேட்பாளர் அதிக வாக்குகளைப்பெற்றும் தெரிவுசெய்யப்பட முடியாத நிலையை இது தோற்றுவிக்கின்றது; என்பது அவர்களது கருத்தாகும்.
ஐந்து தடவைகள் அதிகப்பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்கள் ஜனாதிபதியாக முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதாவது, 1824 ( இத்தேர்தல் சற்று வித்தியாசமானது). 1876, 1888, 2000, 2016 ம் ஆண்டுத் தேர்தல்களில் இந்நிலைமை ஏற்பட்டது.
இவற்றில் நமது காலத்தில் 2000மாம் ஆண்டு அல்கோர் 48.4% வாக்குகளைப்பெற்றும் 47.9% வாக்குகளைப்பெற்ற புஷ் தான் ஜனாதிபதியாக வரமுடிந்தது. அதேபோல் 2016இல் 48.2% வாக்குகளைப்பெற்ற ஹிலரி கிளின்டன் தோல்வியடைய 46.1% வாக்குகளைப்பெற்ற ட்ரம்ப் தான் ஜனாதிபதியாக முடிந்தது. எனவேதான் இம்முறைமையை ஜனநாயக விரோதம் என்கிறார்கள்.
அதேநேரம், இதனை ஆதரிப்பவர்கள் இது சிறிய மாநிலங்களினதும் மக்கள் ஐதாக வாழும் பிரதேசங்களினதும் நலன்களைப் பாதுகாக்கின்றது; என்று கூறுகிறார்கள்.
இது இலங்கைக்குப் பொருந்தாது; ஆனாலும் கோட்பாடு பொருந்தும்
——————————————————————
இது இலங்கைக்குப் பொருந்தாது. ஏனெனில் ஏழு மாகாணங்களில் ஒரு சமூகம் அதிகப் பெரும்பான்மையாக இருக்கின்றது. இன்னுமொரு மாகாணத்தில் ஒரு சிறுபான்மை தனிப்பெரும்பான்மையாக இருக்கின்றது. கிழக்கில் மூன்று சமூகங்களும் அண்ணளவாக சமமாக இருக்கிறது.
இந்நிலையில் “winner-takes-all system” கொண்டுவரப்பட்டால் பெரும்பான்மை சமூகத்திற்கு அது இன்னும் சாதகமாகிவிடும். ஆனால் இதற்குப் பின்னால் இருக்கின்ற கோட்பாடு இலங்கைக்கு மிகவும் பொருந்தும்.
அதாவது, அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் மக்கள் மறைமுகமாக தனித்தனி பிராந்திய சமூகங்களாகக் ( Regional Community) கருதப்பட்டு அவர்களது பிரந்தியத்தில் ( மாநிலத்தில்) யாருக்குப் பெரும்பான்மை கிடைக்கின்றதோ அவரை அப்பிராந்திய சமூகம் அங்கீகரித்ததாக கொள்ளப்படுகிறது. இதில் முக்கியமானது ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு தனித்தனி அங்கங்களாக கருதப்படுவது.
அதற்குக் காரணம் ஒரு காலத்தில் அவர்கள் தனித்தனி நாடுகளாக இருந்தார்கள். எனவே, அவர்கள் தனித்தனி தேசியங்களாகும் ( Nations)
இலங்கையில் அமெரிக்காவைப்போன்று பிராந்திய சமூகங்கள் இல்லாதபோதும் இனரீதியான சமூகங்கள் ( ethnic communities) வாழ்கிறார்கள். இவர்களுக்குள் “தேசியமாக” அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இருக்கின்றது. இந்த இனத்துவ சமூகங்கள் தொடர்ந்துவந்த ஆட்சியாளர்களால் துருவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
எனவே, தேசிய ஒற்றுமைக்கு இந்த அங்கங்களின் ஒற்றுமை இன்றியமையாதது. இந்தப்பின்னணியில் தனிநபர்களுக்குப் பதிலாக இந்த சமூகங்கள் இணைந்து ஒரு ஜனாதிபதியை உருவாக்குவதற்கான ஒரு முறைமையைப்பற்றி நாம் சிந்திக்கமுடியுமா? ( வாக்களிப்பது தனிநபர்கள்தான், ஆனாலும் அது சமூகங்களை பிரதிபலிக்கவேண்டும்)
அடுத்த பதிவில் தென்னாபிரிக்க முறையை ஆராய்ந்தபின் இது தொடர்பாக தொடர்ந்து ஆராய்வோம்; இன்ஷாஅல்லாஹ்.
( தொடரும்)