புத்திஜீவிககள் தலைமையிலான ஆட்சியை முன்னெடுப்பதாக குறிப்பிட்டு ஆட்சியை கைப்பற்றியவர்கள் ,வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக ஆற்றில் மந்திர நீர் அடங்கிய பானையை எறிந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் கடந்த வருடத்தின் இறுதியில் விதைத்த விதைக்கான பயிரையே இவ்வருடம் அறுவடை செய்கின்றனர். சுபீட்சமான ஆட்சியினை முன்னொடுப்பதாக கூறியவர்களின் ஆட்சியில் இதுவரையில் எவ்வித சுபீட்சமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களின் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டு ஆட்சி அமைத்தவர்கள் ,கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்குமாறு குறிப்பிட்டு மந்திர நீர் நிரப்பப்பட்ட பானையை ஆற்றில் எறிந்து வருகின்றனர். இவ்வாறான மந்திர நீரை எறிவதற்காகவா சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்?
ஆரம்பத்தில் பௌத்த மதத்தை காண்பித்து மக்களை ஏமாற்றினார்கள், பின்னர் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள். அதன் பிரதிபலன்களையே தற்போது நாடு எதிர்நோக்கி வருகின்றது. தற்போது பௌத்தமத தீர்த்தத்திற்கும் அவப் பெயரை பெற்றுக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர்.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சராக தெரிவுச்செய்யப்பட்டு இதுவரையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு கட்டில் ஒன்றை கூட பெற்றுக் கொள்ளமுடியாமல் போயுள்ள நிலையில் ,காற்றினால் பரவும் வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நீரில் மந்திர நீர் அடங்கிய பானையை எறிந்து வருகின்றார்.