நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளியான புதிய பறவை திரைப்படத்தில் வரும் கோபால் – லதா கதாபாத்திரங்கள் பிரபலமானவை. கிளைமேக்ஸ் காட்சியில் இருவருக்கும் இடையில் இடம்பெறும் சம்பாசணைகள் பிற்காலத்தில் நகைச்சுவையாக மாற்றப்பட்டதும் உண்டு. அந்தப் பாணியில் முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கத் தோன்றுகி;ன்றது.
‘அப்படியென்றால் கடந்த பல வருடங்களாக முஸ்லிம் சமூகத்திற்காகவே இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம் என்று சொன்னதெல்லாம் பொய்யா லதா? அவர்கள் சர்வாதிகாரிகள் என்றும் இவர்கள் முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றுவார்கள் என்று சொன்னது நடிப்பா ? சொல்லு லதா சொல்லு..’ என்று கேட்க வேண்டியுள்ளது. இந்தக் கேள்வியைக் கேட்காமல் இக் கட்டத்தை கடந்து செல்ல முடியாதுள்ளது.
இங்கு, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. அதேபோல் அதற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் சொல்லவில்லை. அதனை ஆதரிக்காத எம்.பி.க்கள், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் கடந்த காலங்களில் எம்.பி.க்களாக பதவி வகித்தோர் என கிட்டத்தட்ட சமூகத்தை பேய்க்காட்டி, பகடைக் காயாக்கியே காலகாலமாக அரசில் செய்து கொண்டிருக்கின்ற எல்லோருக்குமே விதிவிலக்கற்று இக்கேள்வி பொதுவானது.
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் கூறுவதற்கு ஏதாவது காரணங்களையும் கற்பிதங்களும் கிடைக்கும் என்றால், எந்த முடிவையும் எடுப்பார்கள். தமக்கு தேவையென்றால் ஒன்றை சரி என்பார்கள். தேவையில்லை என்றால் அதில் பிழை இருப்பதாகச் சொல்வார்கள். இதனை அரசியல் வியூகம், சாணக்கியம் என்று வேறு விளக்கம் சொல்வார்கள். 20இற்கு ஆதரவளித்தது சரியா பிழையா என்பது ஒருபுறமிருக்க, அதற்கு முன்னரே இவ்வாறான குத்துக்கரணங்களை முஸ்லிம் சமூகத்தின் மேய்ப்பர்கள் செய்திருக்கின்றார்கள் என்பதாலேயே இவ்விமர்சனத்தை பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது.
தாம் ஆதரிக்கும் முஸ்லிம் தலைவர்கள் வானத்தில் இருந்து இறங்கியவர்கள் போலவும், அவர்கள் எது செய்தாலும் சரி என்றும் கண்மூடித்தனமாக நம்புகின்ற அரசியல் ஆதரவாளர்கள், தமது எம்.பி.க்கள் சமூகத்துக்காகவே செயற்படுகின்றார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் எதனையும் தட்டிக் கேட்காமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமக்கள், பள்ளிவாசல் நிர்வாகங்கள், உலமா சபை, படித்த சமூகம், புத்திஜீவிகள் இதற்கெதிராக கேள்வி கேட்கும் வரை இதுதான் தொடர்ந்து கொண்டிருக்கப் போகின்றது.
மாறும் நிலைப்பாடுகள்
உலக ஒழுங்கின்படி, அரசியல் நிலைப்பாடுகள் எல்லாமே நீடித்து நிலைத்திருப்பவை என்று சொல்ல முடியாது. அது எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை இலங்கை தேசிய அரசியலிலும் நாம் கண்டிருக்கின்றோம்.
1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன இரண்டாம் குடியரசு யாப்பைக் கொண்டு வந்ததில் இருந்து அதில் உள்ள நிறைவேற்றதிகாரம் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்காக அதனை எதிர்த்துவந்த சுதந்திரக் கட்சிக் காரர்களே இன்று ஆளும் தரப்பில் இருந்துகொண்டு, ஜனாதிபதிக்கான அதிகாரங்களை அதிகரிக்க வழிகோலும் 20 இனை கொண்டு வந்தனர்.
நிறைவேற்றதிகாரத்தை அறிமுகப்படுத்திய ஐ.தே.கட்சியினரே பின்னரே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 2015இல் 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னின்றனர்.
இதுபோல, முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளும் மாறியிருக்கலாம்.
அப்படியென்றால் 20ஆவது திருத்தத்தில் உள்ள சாதக பாதகங்களை மக்களுக்கு விளக்கியிருக்க வேண்டும். நாட்டில் ஒரு அரசியலமைப்பு திருத்தம் அல்லது சட்டமூலம் கொண்டு வரப்பட்டால் அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலில் தாம் விளங்கிக் கொண்டு பின்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அப்படியான அபூர்வங்கள் முஸ்லிம் அரசியல் பரப்பில் இதுவரை இடம்பெற்றது கிடையாது.
மாறாக, ஆளும் தரப்பில் இருந்தால் ஆதரிப்பது எதிரணியில் இருந்தால் எதிர்ப்பது அல்லது ஆட்சியாளர்களுடன் உறவு என்றாலோ அல்லது சுய பேரங்களின் அடிப்படையிலோ ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாடிக்கையாக இருந்து வருகின்றது. இதில் அவர் இவர் என்று எவரும் விதிவிலக்கல்லர்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமோடு இணைந்து 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்க அக்கட்சி எம்.பி.க்களில் யாரும் தயாரில்லை. மக்கள் காங்கிரஸின் எம்.பி.க்களில் முஸாரப் மட்மே தலைவர் றிசாட் பதியுதீனோடு நின்று 20 இனை எதிர்த்து விட்டு, அதில் உள்ளடங்கும் ஒரு சரத்தை ஆதரித்தார்.
முஸ்லிம்களுக்கு பாதிப்பா?
முஸ்லிம் சமூகம்அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நேரடியாக முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமான பாதிப்புக்கள் எதனையும் கொண்டு வரும் எனச் சொல்ல முடியாது. இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனங்களின் மக்களின் வாழ்க்கை, அரசியல் மீது எவ்விதமான சாதக, பாதக தாக்கத்தை ஏற்படுத்துமோ அதையே முஸ்லிம்களும் சந்திப்பர். அந்த வகையில் பார்த்தால், முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரிப்பதில் தப்பில்லை என்று வைத்துக் கொள்வோம்.
இந்த ஆட்சியாளர்களே இன்னும் சில காலத்திற்கு கோலோச்சப் போகின்றார்கள். ஏன் நாம் அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து நிலையின் அடிப்படையிலேயே எதிரணியில் இருந்த முஸ்லிம் எம்.பி.க்கள் ஆறுபேர் இத் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்திருக்கின்றார்கள் என்று கருத இடமுண்டு.
இது முஸ்லிம் கட்சிகளின் தீர்மானம் என்றால் ஏன் தலைவர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும். ஒரு கட்சிக்குள் ஏன் இரட்டை நிலைப்பாடு என்ற கேள்வி எழுவது நியாயம்தானே? அப்படியென்றால், ஒன்றில் இரு தரப்பையும் சமாளிக்கும் பாணியிலான முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு சாத்தியம்குறைவு என்று மக்கள் கருதுவதாலேயே, முஸ்லிம் எம்.பி.க்கள் ஆளும் தரப்புடன் பேரங்கள் பேசி வாக்களித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன. பணத்திற்காகவும் அமைச்சுப் பதவியை எதிர்பார்த்தும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் விளக்கமறியலில் இருப்பதால் இதுபற்றிய அவரது கருத்துக்கள் வெளியாகவில்லை. ஆனால் மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் விளக்கமளித்துள்ளார். தான் ஒரு சூழ்நிலைக்கைதியாக மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நிலைமைகளை அவர் முன்னரும் எதிர்கொண்டார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறுகின்ற கருத்துக்கள் வேறு விதமாகவுள்ளன.
எனவே இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் இது விடயத்தில் திட்டமிட்டுச் செயற்பட்டிருந்தாலும் அல்லது எதிர்கால அனுகூலங்களை கருத்திற் கொண்டு முடிவு எடுத்திருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
ஆனால், ஜனாஸா எரிப்பு விடயம் சம்பந்தமாகவோ அல்லது வேறு முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சினை சம்பந்தமாகவோ எவ்வித உடன்படிக்கையையும் மேற்கொள்ளாமலேயே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் உடன்படிக்கை செய்துள்ளோம் என்று சொல்லும் அவர்களிடம், நீங்கள் கடந்த காலங்களில் ஆட்சியாளர்களுடன் செய்த உடன்படிக்கைகளுக்கு என்னவானது என சொல்லச் சொல்லுங்கள்.
இந்தப் பின்னணியில், 20 இற்கு ஆதரவளித்ததை நியாயப்படுத்தவும் முடியும். அதேபோன்று அது தவறான முடிவு என்று விவாதிக்கவும் முடியும். எதிர்க்கட்சியின் விமர்சனங்களோ அல்லது முஸ்லிம் எம்.பிக்கள் வெளியேற்றப்பட்டதோ பெரிய பிரச்சினை இல்லை எனக் கருதலாம். அதேபோன்று எம்மிடம் விளக்கம் கேட்பதற்கு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளுக்கு உரிமை இல்லை என்று கூறலாம். இன்னும் சில நாட்களில் முஸ்லிம் சமூகமும் வழக்கம் போல இவ்விவகாரத்தையும் மறந்து விடும்.
மக்களை மாட்டிவிட்டமை
அதுவெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இந்தக் கட்டுரை அதுபற்றிப் பேச முனையவும் இல்லை. கடந்த காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கும் நேரடியாக முஸ்லிம்களுக்கும் பாதமான பல சட்டமூலங்களையே 3 முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் எம்.பி.க்களும் ஆதரித்ததை நாம் மறந்து விடவில்லை. அந்த வகையில், அரசாங்கத்தோடு இணைந்து போவதே பாதுகாப்பதானது என்ற மனோநிலை முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்ற காலப்பகுதியில் 20 இற்கான ஆதரித்தது ஒரு பெரும் குற்றமும் அல்ல.
ஆனால், இங்கிருக்கின்ற பிரச்சினை முஸ்லிம் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சுய அரசியலுக்காக முஸ்லிம் சமூகத்தை கேடயமாகவும், பகடைக்காயாகவும் பயன்படுத்துவதும், தமக்கு அவசியமான போது மக்களைப் பலிகொடுத்துவிட்டு பல்டி அடித்துவிடுவதுமான கேடுகெட்ட அரசியலே இங்குள்ள பிரச்சினையாகும். ஆதைப் பற்றி பேசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஏனென்றால் இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
நல்லாட்சியின் செயற்றிறன் இன்மையும், மைத்திரி – ரணில் அதிகார பனிப்போருமே 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றியடைவதற்கு ஏதுவாக அமைந்தது. மைத்திரியை போலவே திடீரென களத்திற்குள் குதித்த சஜித் பிரேமதாசவும் வெற்றிபெறுவார் என்று மு.கா.வும் ம.கா.வும் கருதியது பிழையில்லை. ஆனால், ராஜபக்சக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்ததும் பிரசாரத்தில் தவிர்க்க முடியாததுதான். ஆனால், அதனை ஒரு மிதமான அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் செய்திருக்க வேண்டும்.
அதன்பிறகு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜனப் பெரமுண வெற்றிபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டன. எனவே இவ்வேளையிலாவது ராஜபக்சக்களுக்கு எதிரான பிரசாரங்களை அளவோடு மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து, ஒரு சர்வாதிகார ஆட்சியே நடைபெறும் என்ற பாணியில் பகிரங்கமாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மறுபுறத்தில், றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான பிரசாரங்களைச் சந்தைப்படுத்தியே பொதுஜனப் பெரமுண கட்சியும் சிங்கள மக்களிடம் வாக்குத் தேடியது. ஊயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள், இரு முஸ்லிம் கட்சிகள் சஜித்தோடு இணைந்திருந்தமை என்பவை மொட்டுவின்பால் சிங்கள மக்கள் எழுச்சி கொள்வதற்காக கனகச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டன.
இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் இலாபம் கருதிய இந்தப் பிரசாரங்களின் காரணமாக பெரும்பான்மை மக்களில் கணிசமானோர் முஸ்லிம் சமூகத்தை, ஒரு காலத்தில் தமிழர்களைப் பார்;த்தது போல பார்த்தனர். முஸ்லிம்களும் சிங்கள மக்களை ஒருவித உள்ளச்சத்துடனேயே எதிர்கொள்ள நேரிட்டது. இது உண்மையில் அப்போது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் காட்டி சிங்கள மக்களின் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஆட்சியாளர்களும், அவர்களைக் காட்டிப் பயமுறுத்தியே ஆட்சியாளர்களுக்கு எதிரான கூடைக்குள் வாக்குகளை விழச் செய்த முஸ்லிம் கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளமை அரசியலில் சகஜமானதே. ஆயினும், இது விடயத்தில் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதே கவனிப்பிற்குரியது.
உடைந்த பிம்பம்
முஸ்லிம் சமூகத்திற்கு தாம் செய்த சேவைகள், பெற்றுக்கொடுத்த உரிமைகளைச் சொல்லியே முஸ்லிம் அரசியல்வாதிகள் வாக்குக் கேட்க வேண்டியிருந்தது. ஆனால் அப்படியான சரக்கு எதுவும் கையில் இல்லாத காரணத்தால், மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கு ராஜபக்சக்களை சர்வாதிகாரிகளைப் போல விமர்சித்தனர். ஆனால் இன்று அந்த பிம்பத்தை அவர்களே உடைத்துள்ளனர்.
20 இனை ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் ஏன் 19 இற்கு ஆதரவளித்தார்கள் எனத் தெரியவில்லை. அதேபோல், இப்போது ஆட்சியாளர்களை நோக்கி நெருங்கி முஸ்லிம் எம்.பி.க்கள் நெருங்கிச் சென்றிருப்பது நல்லதே. ஆயினும், அப்படியென்றால் ஆகஸ்ட் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறும் வரைக்கும் அவர்கள்தான் பொருத்தமானவர்கள் என அவர்களுக்கு விளங்கவில்லையா, இல்லையென்றால், ஏன் ராஜபக்ச சகோதரர்களை மிக மோசமான ஆட்சியாளர்களாக பிரதிவிம்பப்படுத்த வேண்டும் என நிறைய கேள்விகள் எழுகின்றன.
இதேவேளை, முஸ்லிம் எம்.பி.க்களை இந்தப் பக்கமும் எடுக்க மாட்டோம். அவர்களது ஆதரவு எங்களுக்குத் தேவையும் இல்லை என்று கூறிய ஆட்சியாளர்களுக்கு, இப்போது முஸ்லிம் எம்.பி.க்கள் ஆபத்தில் உதவும் நண்பனாக தோன்றியது எங்ஙகனம் என்ற கேள்வியும் எழாமலில்லை. எல்லாவற்றுக்கும் விடை, அரசியல் யதார்த்தம் என்பதே.
எவ்வாறிருப்பினும், 20 இற்கு ஆதரவளித்ததால் முஸ்லிம்கள் பற்றிய பார்வை சிங்கள மக்கள் மத்தியில் சற்று குறைவடையும் எனவும் அரசியல் விவகாரங்களில் கெடுபிடிகள் குறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கலாம்.
ஆளும் தரப்பு முஸ்லிம் கட்சிகள் விடயத்தில் சற்று மென்போக்கை கையாளலாம் என்று வைத்துக் கொண்டாலும் மறுபுறத்தில், முஸ்லிம் கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டால் தொப்பி புரட்டிகள், விலைபோகின்றவர்கள் என்ற விமர்சனம் மேலெழுந்துள்ளது. இது உண்மையில் முஸ்லிம் சமூகத்தை பெரும் தர்மசங்கடத்தில் தள்ளிவிட்டுள்ளது.
மக்களுக்கான அரசியல்
எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் அது ஹக்கீமாக இருந்தாலும் சரி, றிசாட்டாக இருந்தாலும் சரி, அதாவுல்லா என்றாலும் சரி அல்லது முஸ்லிம் கட்சிகளில் உள்ள ஏனைய எம்.பிக்கள் மற்றும் பெருந்தேசியக் கட்சிகளில் உள்ள எம்.பி.க்கள் என்றாலும் சரி தமது அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது. நமக்கு ராபக்சவும், சஜித்தும், இனியாராவது ஒரு சிங்கள தலைவர் வந்தால் அவரும் ஒன்றுதான் என்ற அடிப்படையில் சிந்தித்து மிகக் கவனமான அரசியலைச் செய்ய வேண்டும்.
அதைவிடுத்து, தமது அரசியல் நிலைப்பாட்டை சரி எனக் காண்பிப்பதற்காக மக்களை பகடைக்காய்களாக பாவிப்பதாலும், பின்னர் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதாலுமே முஸ்லிம் அரசியல் பற்றிய ஏளனமான பார்வையிருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தனித்துவ அடையாள அரசியலாக இருக்கும் என்ற நம்பிக்கைகள் குறைவடைந்து விட்டன. ஆகவே, அவ்வாறில்லாவிட்டாலும் முஸ்லிம்களுக்கான அரசியலாகவாவது இருக்க வேண்டும். ஒரு பெருந்தேசியக் கட்சிக்கு முழு ஆதரவை வழங்கிக் கொண்டு, மற்றுமொரு பெரும்பான்மைக் கட்சியோடு பகைமை பாராட்ட வேண்டியதில்லை. அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்து அரசியல் செய்யும் திறன் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இல்லை என்பதால் ஒரு நடுவுநிலைமையான அரசியல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மாறாக மக்களை பகடைக்காயாக பயன்படுத்தும் பேய்க்காட்டல் அரசியலைச் செய்யக் கூடாது.
மக்களை மையாகக் கொண்ட முன்மாதிரி அரசியலைச் செய்தால், பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் மன்றத்தில், ‘இரவில் படுக்கையை நனைத்த சிறுவன் மாதிரி’ தலைகவிழ்ந்து நிற்க வேண்டிய தேவை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஏற்படாது.
– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 2020.11.01)