பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பட்டி (வயது 47) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு அருகே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியரை கொலை செய்த 18 வயது வாலிபரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இதற்கு காரணம் என்றும் அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக கொலையாளியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்சில் உள்ள முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் மெக்ரான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தினார். இதில் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து களையெடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தின் முடிவில் பேசிய அதிபர் மெக்ரான் “ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும்” என ஆவேசமாக தெரிவித்தார்.