பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாரத பிரதமரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இரா. சம்பந்தன் கூறினார்.
எவ்வாறாயினும், தற்போது பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக பாரத பிரதமரை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், விரைவில் இருதரப்பு கலந்துரையாடலை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி காணொளி கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என பாரத பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.
Tnx- news1st