அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பம் என்பது உண்மையே, ஆனாலும் அரசாங்கம் கொண்டுவரும் 20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என கனேடிய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் மற்றும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. மீனவர்களின் பாதுகாப்பு, மற்றும் தொழில் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும், தொடர்ந்தும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் இலங்கைக்கு பலம் சேர்க்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன.
எனினும் கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குறித்த இழப்பு வீதம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. எனவே அவ்வாறான திட்டங்களை இலங்கையிலும் முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும், அதற்காக கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் எமது மீனவர்களுக்கும் வழங்க வேண்டும் என கனேடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.