“800” திரைப்படத்தின் கதாநாயகனாக முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி…

{"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1602755990719","subsource":"done_button","uid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1602755990709","source":"other","origin":"gallery"}

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படும் “800” என்ற திரைப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் தொடர்பாக முத்தையா முரளிதனுக்கு எதிராகவும் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் ஆதரவாகவும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

“800” திரைப்படத்தின் கதாநாயகனாக முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாக இந்தியா, இலங்கை உள்பட பல நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சர்ச்சைகளுக்கு அப்பால், இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய முத்தையா முரளிதரன், உலக அளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஒரு தமிழனாக விளங்கி வருகிறார்.

எனினும், முத்தையா முரளிதரன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழியில் பேசுகின்றமை, தமிழர்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஒரு அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.

அதுமாத்திரமன்றி, இலங்கையின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளின்போது, முத்தையா முரளிதரன் மற்றும் அவரது குடும்பத்தினர், யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் சேர்ந்து பயணித்தமையும், ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், ‘நான் முதலில் இலங்கையன்… அதன் பின்னரே தமிழன்” என்று முத்தையா முரளிதரன் கூறிய கருத்து, அண்மையில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை அவதானிக்கலாம்.

முத்தையா முரளிதரனின் இந்த கருத்தானது, அண்மை காலமாக மீண்டும் ஒரு சர்ச்சையை சமூக வலைதளங்களில் தோற்றுவித்திருந்தது.

முத்தையா முரளிதரனால் வெளியிடப்பட்ட இந்த கருத்தை, விஜய் சேதுபதி தனது திரைப்படத்தில் கூறுவாரா? எனவும் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், டிவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற பெயரில் லட்சக்கணக்கானோர் கருத்துகளை பதிவிட்டு இலங்கை தமிழருக்கு ஆதரவான உணர்வையும், எதிர்ப்பையும் பதிவிட்டு வருகிறார்கள். எனினும், விஜய் சேதுபதியோ முரளிதரனின் நேரடி தரப்போ இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து வெளியிடவில்லை. அதே நேரம், கடந்த வாரம் நடிகர் விஜய் சேதுபதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், முத்தையா முரளிதனின் வரலாறு படத்தில் தானும் அங்கமாக இருப்பதில் பெருமைப்படுவதாக கூறியிருந்தார்.

இவ்வாறான சர்ச்சைகளின் பின்னணியில், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் “800” திரைப்படத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுமார் 2 வருட காலத்திற்கு முன்னரே முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் இடம்பெற்ற சுவாரஸ்யங்களை, பட தயாரிப்பு குழு பதிவு செய்து கொண்டதுடன், அந்த கால பகுதியிலிருந்தே திரைப்படத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முத்தையா முரளிதரனின் குடும்பத்தினர் தெரிவிப்பதாக அறியக்கிடைக்கின்றது.

 

Tnx- BBC