முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவால் இட்ட கையொப்பத்தில் மாற்றங்கள்…?

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1602695793542"}

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு அமைய இராணுவ புலனாய்வு அதிகாரிகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இட்ட கையொப்பத்தில் மாற்றங்கள் காணப்படுவதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (14) அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கிய போதே செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவின் ஓய்வூப்பெற்ற அதிகாரி டிலஞ்சன் உபசேன தெரிவித்த கருத்துக்கு பதிலை பெற்றுக்கொள்ளவே முன்னாள் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் டிலஞ்சன் உபசேனவை 2015 செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் 90 நாட்களுக்கும் அதிகமாக காலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்க அனுமதித்தமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டு அனுமதித்த ஆவணம் உதய ஆர்.செனவிரத்னவிற்கு காண்பிக்கப்பட்டது.

அப்போது அவர் குறித்த கையெழுத்தை பார்க்கும் போது வேறுபட்டுள்ளதை காண முடிவதாக கூறினார்.

இதன்போது 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் கையொப்பத்தை சாட்சியாளரின் கவனத்திற்கு ஆணைக்குழு அதிகாரிகள் முன் வைத்தனர்.

அந்த கையொப்பம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடையது என உதய ஆர்.செனவிரத்ன உறுதிப்படுத்தினார்.

இதன்போது வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் யோசித ராஜபக்ஸ இன்று காலை அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்ததாக  செய்தியாளர் தெரிவித்தார்.

கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் அதாவது சி.எஸ்.என் நிறுவனம் ஆரம்பித்த போது நிதி மோசடி மற்றும் அரசு சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தான் கைது செய்யப்பட்டு 45 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சியம் வழங்கவே அவர் வருகைத்தந்தாக தெரிவிக்கப்படுகின்றது.