அமீரகத்தின் போக்குவரத்து கொள்கையின் அடிப்படையில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 25 சதவீத வாகனங்கள் தானியங்கி முறையில் இயக்கப்பட உள்ளது. இதில் துபாயை தொடர்ந்து சார்ஜாவிலும் தற்போது தானியங்கி பயணிகள் வாகனம் செயல்பாட்டுக்கு வருவது உறுதியாகி உள்ளது.
அபுதாபியில் உள்ள அரசு மஸ்தார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தானியங்கி வாகனம் சார்ஜா பல்கலைக்கழக நகரில் இயக்கப்பட உள்ளது. மஸ்தார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வாகனத்தை பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வந்தது. அதனை அடுத்து சார்ஜா பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்த வாகனம் முதல் முறையாக அந்த பல்கலைக்கழக நகரில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
போலீஸ் துறை ஒத்துழைப்புடன் பல்கலைக்கழக நகரில் ஓட்டுனர் இல்லா பயணிகள் வாகனத்தை வெள்ளோட்டம் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யலாம். முப்பரிமாணத்தில் உணரக்கூடிய கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிரில் உள்ள சுற்றுப்புறத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு மிகவும் பாதுகாப்பாக இந்த வாகனம் செல்லும். இந்த ஓட்டுனர் இல்லா வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் பாதையை மிகச்சரியாக தேர்வு செய்து தானாக செல்லும் திறன் கொண்டது. பேட்டரியால் இயங்க கூடியது என்பதால் சுற்றுச்சூழலுக்கு புகை உள்ளிட்ட மாசுபாடுகளை இது ஏற்படுத்துவது இல்லை.
அதிகபட்சமாக 15 பேர் அமர்ந்து செல்லலாம். மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் உள்ளே அமரவும் இதில் வசதி உள்ளது. ஆட்கள் வந்தால் நின்று தானாக கதவை திறந்து இந்த வாகனம் ஏற்றி செல்லும். சாலையின் எதிரில் உள்ள தடைகளை அறிந்து பாதுகாப்பாக செல்ல தொழில்நுட்பம் உள்ளது.
சார்ஜா பல்கலைக்கழக நகரில் உள்ள சாலைகளில் தற்போது இந்த ஓட்டுனர் இல்லா தானியங்கி பயணிகள் வாகனம் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது, மேலும் விரைவில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என பல்கலைக்கழக பொது இயக்குனர் காலித் பின் புத்தி அல் ஹாஜ்ரி தெரிவித்தார்.