அரசின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளது – சஜித் பிரேமதாச

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1602610502370"}

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அரசுக்குப் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

20ஆவது திருத்தச் சட்ட வரைவில் திருத்தம் எதனையும் மேற்கொள்ளாமல் அதை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மட்டும் நிறைவேற்றலாம் என்று அரசு எண்ணியது. அந்த எண்ணம் இன்று தவிடு பொடியாகியுள்ளது.

குறித்த சட்ட வரைவில் உள்ள சரத்துக்கள் அனைத்தையும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல்கள் தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரங்கள், ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்கல், நாடாளுமன்றக் கலைப்புக்கான ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஆகிய நான்கு சரத்துக்களை நாடாளுமன்ற அனுமதியுடன் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த நான்கு சரத்துக்களையும் நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது அரசுக்கு நீதித்துறை வழங்கியுள்ள சாட்டையடியாகும்.

எனினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு மாற்றங்களைச் செய்தாலும் அந்தச் சட்ட வரைவை நாம் எதிர்த்தே தீருவோம்.

ஏனெனில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தற்போது அவசியமற்றது. அதிலுள்ள மேலும் பல சரத்துக்கள் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை. எனவே, 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.