இங்கிலாந்தில், கடுமையான மூன்று முக்கிய தடைகளை அமுல்படுத்துவது குறித்த அறிவித்தலை இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று வெளியிடவுள்ளார்.
இங்கிலாந்தில் நேற்று மாலைவரை 603,716 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியும், 42,825 பேர் உயிரிழந்தும் உள்ள நிலையில், பயணத் தடைகளையும், கொரோனா அவதான வலையங்களுக்குள் கழியாட்ட விடுதிகள், மதுபானசாலைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை மூடுவது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளது.
இன்று காலை நடைபெறவுள்ள அவசரகால கோப்ரா மாநாட்டை தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
புதன்கிழமை மாலை 5 மணி முதல், இந்த தடைகள் அமுல் படுத்தப்படவுள்ளது.
இதன் முதல் கட்டமாக இங்கிலாந்தில் வடமேற்கில் உள்ள நூற்றுக்கணக்கான கழியாட்ட விடுதிகள் நான்கு வாரங்களுக்கு மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒரே இரவில் தங்குவதும் கொரோனா அவதான வலையங்களுக்கு வெளியே பயணம் செய்வதும் அதே காலத்திற்கு தடை செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வேலை, கல்வி அல்லது சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் செய்வதற்கு உள்ளூர்வாசிகள் தங்கள் பகுதிகளிலிருந்து மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் அன்றைய நாள் முடிவதற்குள் தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டும்.
பரீட்சார்த்த நடவடிக்கையாக குறித்த தடைகள் முதல் ஒரு மாதத்திற்கு அமுல்படுத்தப்பட உள்ளன. எனினும் இதனை தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்கள் வரை விதிகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.