மன அழுத்தத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் மன நலத்துடன் உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகும். மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகளை செய்வதன் மூலம் அது தொடர்பான அபாயங் களில் இருந்து விடுபடலாம். தினமும் சுமார் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். உடல்ரீதியாக சுறுசுறுப்புடன் இருப் பது மூளையின் செல்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உதவும். மன ஆரோக்கியமும் வலுப்படும்.
கடற்கரை, நதி அல்லது ஏரியின் கரைப்பகுதியில் சூழ்ந்திருக்கும் மணல் பரப்பில் நடப்பது மன நலனுக்கு சாதகமாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் நிறுவனம் விறுவிறுப்பான நடைப் பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. கடல் போன்ற நீல நிற நீர்நிலைகளின் மணல் பரப்பில் தினமும் சுமார் அரை மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அலைகளின் ஒலி, நீலநிற நீர்பரப்பு, அமைதியான சூழல் போன்ற சுற்றுச்சூழல் அம்சங்கள் தாமாகவே மனநிலையை மேம் படுத்தி நிம்மதியாக உணர வைக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் வெறும் காலுடன் நடப்பது அதிக நன்மைகளை வழங்குவதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
கடற்கரை நடைப்பயிற்சி மற்றும் நகர்ப்புற நடைப்பயிற்சி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டறியும் பொருட்டு ஆய்வுக்கு உட்பட்டவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை ஆய்வுக்குழுவினர் பரிசோதித்திருக்கிறார்கள். இதுகுறித்து ஆய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மார்க் நியுவென்ஹுய்சென் கூறுகையில், “நகர்ப்புற சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுடன் ஒப்பிடுகையில் நீல நிற நீர்நிலைகளின் மணல் பரப்பில் நடந்து செல்பவர்களின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டு அறிந்தோம். தொடர்ச்சியாகவும், நீண்டகாலமாகவும் இந்த இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நடைப்பயிற்சி விஷயத்தில் மற்ற இடங்களைவிட நீல நிற நீர் கொண்ட மணல் பரப்புகள் சிறந்தவை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்” என்கிறார்.
உடல் இயக்கம் மற்றும் உளவியல் செயல்பாடுகள் சுற்றுச்சூழலின் தன்மையை பொறுத்து மாறுபடுகின்றன என்பதையும் ஆய்வுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.