மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் மிரட்டல் துடுப்பாட்டம்… டெல்லியிடம் படுதோல்வி அடைந்த பெங்களூர்
ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செயதது.
அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தை அளித்த பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி பெங்களூர் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 23 பந்தில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 42 ரன்கள் விளாசி சிராஜ் பந்து வீச்சில் வெளியேறினார். அதேபோல் மற்றொரு வீரரான ஷிகர் தவான் 28 பந்தில் 32 ரன் குவித்து உடானா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். 25 பந்தில் 3 பவுண்டரில் 2 சிக்சர் உள்பட 37 ரன் எடுத்த நிலையில் பண்ட் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 இக்சர்கள் உள்பட 53 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. பெங்களூர் தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 197 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதேபோல் 13 ரன் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் விராட் கோலி சற்று நிலைத்து நின்று ஆடி 43 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் ரபாடாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுதோல்வியடைந்தது.டெல்லி தரப்பில் அந்த அணியின் ரபாடா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.