கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க புதிய பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க உலகமெங்கும் பரவலாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் கருவிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து புதிய பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.இதுபற்றிய தகவல்களை அவர்கள் பி.எல்.ஓ.எஸ். பயாலஜி பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
இந்த பரிசோதனை முறை, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் பின்பற்றப்படுகிற 3 படி நிலைகளில், ஒரு படி நிலையை தவிர்க்கிறது. அதே நேரத்தில் 92 சதவீதம் துல்லியமான முடிவைத்தருகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முறையில் பரிசோதித்த 215 மாதிரிகளில் 30 மாதிரிகள் மட்டும் எதிர்மறையானவை (நெகட்டிவ்) என்றும் மற்றவை பாசிட்டிவ் (நேர்மறையானவை) என்றும் கண்டறியப்பட்ட மாதிரிகளை இந்த பரிசோதனை முறையின்கீழ், விஞ்ஞானிகள் பரிசோதித்து பார்த்தனர்.
அதில் பாசிட்டிவ் என ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் கண்டறியப்பட்ட மாதிரிகளில் 92 சதவீத மாதிரிகளை புதிய பரிசோதனை முறை சரியாக அடையாளம் கண்டது. எதிர்மறையான முடிவைத்தந்த 30 மாதிரிகளிலும் 100 சதவீதம் துல்லியமான முடிவை தந்துள்ளது. இந்த புதிய பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமையேற்ற வெர்மாண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜேசன் பாட்டன் கூறுகையில், “ இது ஒரு சாதகமான முடிவு. நீங்கள் சரியான சோதனைக்கு செல்லலாம்” என கூறினார்.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் 3 படிகள் உள்ளன.
1. மூக்கு அல்லது தொண்டை சளிமாதிரியை துணியில் எடுத்து திரவம் உள்ள குப்பியில் வைக்க வேண்டும். துணியில் இருந்து வைரஸ் திரவத்துக்கு மாறி விடும்.
2. அந்த திரவத்தின் சிறிதளவு மாதிரியை எடுத்து ரசாயனங்கள் உதவியுடன் வைரஸ் மரபணுக்கள் (ஆர்.என்.ஏ.) பிரித்தெடுக்கப்படுகின்றன.
3. அந்த வைரஸ் மரபணுக்கள் பிற ரசாயன திரவங்களை பயன்படுத்தி பல மடங்காக பெருக்கப்படுகின்றன.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய முறையில் துணியில் எடுக்கப்படுகிற மூக்கு அல்லது தொண்டை சளி மாதிரி, 2-வது படிக்கு செல்லாமல் நேரடியாக 3-வது படிக்கு செல்கிறது. இதனால் நேரமும், செலவும், மனித வளமும் மிச்சப்படுத்தப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.