அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உலகளவில் பல தலைவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வரிசையில் 74 வயது டிரம்பும் இணைந்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய ஏப்ரல்-மே மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனாவில் பாதிக்கப்பட்டார். வீட்டில் தனிமையில் சில நாட்கள் இருந்த போரிஸ் ஜான்சன் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை முறையில் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. தீவிர மருத்துவக் கண்காணிப்புக்குப் பின்னர் ஜான்சன் குணமடைந்தார்.
தான் மட்டுமல்ல, மக்களையும் முக கவசம் அணியாதீர்கள் என்று முரட்டுத்தனமாகப் பிரச்சாரம் செய்து வியக்க வைத்தவர் பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ.
மக்களை அதிகமாகக் கூட்டிவைத்து சமூக இடைவெளியின்றி பிரச்சாரம் செய்து மருத்துவர்களால் போல்சனாரோ விமர்சிக்கப்பட்டார். இறுதியில் போல்சனாரோவையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போல்சனாரோ தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து, அதன்பின் முக கவசம் அணியத் தொடங்கினார்.
கடந்த ஜூன மாதம் ஹோண்டுராஸ் ஜனாதிபதி ஜூவன் ஓர்லாண்டே ஹெர்னான்டஸ், மற்றும் அவரின் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 15 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஜனாதிபதி ஓர்லாண்டே கொரோனாவில் இருந்து மீண்டார்.
கவுதமாலா நாட்டின் அதிபர் அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டிக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால், வீட்டில் இருந்தவாறே அரசுப் பணிகளைக் கவனித்து சில நாட்களி்ல குணமடைந்தார்.
இதேபோல், பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ஜீன்னி அனிஸ், டோமினிக் குடியரசின் புதிய ஜனாதிபதி லூயிஸ் அபிநடர் மற்றும் ஈரானில் பல முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.