இறுதிவரை போராடிய கொல்கத்தா – மார்கனின் அபார ஆட்டம் வீண்போனது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு செய்தது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், பிரித்வி ஷா களமிறங்கினர். சிறிய மைதானம் என்பதால் தொடக்கத்தில் இருந்து பஞ்சம் இல்லாமல் ரன்கள் வந்து கொண்டிருந்தது.தவான் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது.

பிரித்வி ஷா 66 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அய்யர் 38 பந்தில் 88 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்துள்ளது.இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 3 ரன்னில் அவுட்டாகினார். ஷுப்மான் கில் 28 ரன்னிலும், ரசல் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

 

ஓரளவு பொறுப்புடன் ஆடிய ரானா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் வெளியேறினார். அப்போது கொல்கத்தா 13 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.அடுத்து இறங்கிய மார்கன் அதிரடியாக ஆடினார். அவருக்கு திரிபாதி ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் கொல்கத்தா வெற்றியை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

சிறப்பாக ஆடிய மார்கன் 44 ரன்னில் அவுட்டானார். மார்கன் – திரிபாதி ஜோடி 31 பந்தில் 78 ரன்கள் குவித்து அசத்தியது. திரிபாதி 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது