அல்லாஹ் வாக்குறுதி செய்த நன்மைகளை இவ்வுலகில் பெற்றுக்கொள்வோம்..!

நமக்கு ஏற்படும் துன்பங்களை பொறுத்துக்கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினால், தங்கத்தை உருக்கி அழுக்கு நீக்கி சுத்தம் செய்வது போல், நம் பாவங்கள் களையப்படும்.

ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே என்ற கொள்கையை நிலைநாட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கடுமையாக போராடினார்கள். அவர்களது சொல்லிலும், செயலிலும் இருந்த சத்தியத்தை உணர்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு எதிராக வாள் ஏந்தி போர்புரிய எதிரிகள் திரண்டு இருந்தனர். அல்லாஹ்வின் கட்டளைப்படியே அனைத்து தர்ம யுத்தங்களிலும் நபிகளாரும், அவரது தோழர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். அதுபோன்ற ஒரு போர்க்களம் தான் உஹது போர்.

அல்லாஹ்வின் அருளால் உஹது போரில் நபிகளாரின் படைகளுக்கு வெற்றி கிடைத்தது. எதிரிகள் புறமுதுகிட்டு ஓடினர். போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற பொருட்களை சேகரிப்பதில் நபித்தோழர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உஹது மலையின் உச்சியில் நின்று ‘எதிரிப்படைகள் திரும்பி வருகிறார்களா?’ என்று கண்காணித்துக்கொண்டிருந்த நபிகளாரின் படையைச்சேர்ந்த வில்வித்தை வீரர்கள் இதைப் பார்த்தனர். போர் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் அவர்களும் மலையில் இருந்து இறங்கி போர்க்களத்தில் சிதறிக்கிடந்த பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.

 

அப்போது, எதிரிகள் திரும்பி வந்து நபிகளாரின் படைகளை பின்புறமிருந்து தாக்கினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத நபித்தோழர்கள் நிலைகுலைந்து போனார்கள். படைகள் அங்கும் இங்குமாக சிதறின, பெரும் குழப்பம் நிலவியது. தாறுமாறாக வீரர்கள் வெட்டி கொல்லப்பட்டனர்.

அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். தலையில் பெரும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பல் ஒன்றும் உடைக்கப்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் நபிகளின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டார். இதைக்கேட்டு நபிகளார் துடித்துப் போனார்கள்.

துக்கம் சூழ்ந்த அந்த சூழ்நிலையில் அல்லாஹ் இறைச்செய்தியை இறக்கி வைக்கின்றான்.

“(நபியே!) நீர் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருப்பீராக! மேலும், உம்முடைய இந்தப் பொறுமை அல்லாஹ்வின் பேருதவியினால்தான் கிடைக்கின்றது. அவர்களின் செயல்கள் குறித்து நீர் வருந்த வேண்டாம். அவர்களின் சூழ்ச்சிகளைக் குறித்து நீர் மனம் நொந்து போகவும் வேண்டாம்”. (திருக்குர்ஆன் 16:127).

நபிகளார் மனம் புண்பட்டிருந்த அந்த நேரத்தில் அல்லாஹ், ‘நபியே! நீங்கள் பொறுமையைக் கையாளுங்கள்’ என்கின்றான். மனிதர்கள், மனதாலும், எண்ணங்களாலும் பலவீனமானவர்கள். எனவே அல்லாஹ்வின் உதவியின்றி பொறுமை சாத்தியப்படாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றான். நிகழ்வின் யதார்த்தத் தையும், விதியின் வலிமையையும் சொல்லிக்காட்டிவிட்டு, ‘எதிரிகளின் சூழ்ச்சியைப்பற்றி கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு பக்கபலமாய் உள்ளேன்’ என்று இந்த திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் ஆறுதலும் சொல்கின்றான்.

பின்னர் அல்லாஹ் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நபிகளாருக்கு வெற்றியையும் வழங்கினான்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம், ‘நமக்கு ஏற்படும் துன்பங்களை பொறுத்துக்கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினால், தங்கத்தை உருக்கி அழுக்கு நீக்கி சுத்தம் செய்வது போல், நம் பாவங்கள் களையப்படும். அல்லாஹ் வாக்குறுதி செய்த நன்மைகளை இவ்வுலகில் பெற்றுக்கொள்வோம், மறுமையில் சொர்க்கத்தைப் பெற்றுக்கொள்வோம். ஏனென்றால் அத்தகைய பொறுமையாளர்களோடு தான் அல்லாஹ் இருக்கின்றான். அந்த பொறுமையாளர்களோடு அல்லாஹ் நம்மையும் சேர்த்தருள்வானாக’, ஆமின்.