ஹக்கீமின் வியூகத்திற்கு துணை நின்றதனால் தங்களது MP யை இழந்து நிற்கும் சம்மாந்துறை ?

 

சம்மாந்துறை மண் பா.உறுப்பினரை தவற விட்டமைக்கு மு.காவினரே காரணமாகும். சம்மாந்துறையில் இருந்து 18 000 வாக்குகள் டெலிபோனுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பா. உறுப்பினர் கிடைக்கவில்லை. இதனை விடவும் கூடுதலான வாக்களித்தால் தான் பா. உறுப்பினர் கிடைக்குமா…? இந்த வாக்கெண்ணிக்கை ஒரு பா.உறுப்பினரை பெறுவதற்கான வியூகம் அமைக்க போதுமான வாக்கெண்ணிக்கை.

சற்று சிந்தியுங்கள்…

சம்மாந்துறை மண் பா.உறுப்பினரை இழந்தமைக்கு, மு.காவின் வேட்பாளர்களான ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோருக்கு சம்மாந்துறையில் இருந்து பெருமளவான விருப்பு வாக்கு சென்றமையை காரணமாக குறிப்பிடுவதை அவதானிக்க முடியும். தற்போது ஹரீஸ், பைசால் காசிமுக்கு சம்மாந்துறையில் வாக்கு சேகரித்த சிலர் துரோகிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விடயங்களே சம்மாந்துறை மண் பா.உறுப்புரிமையை தவற விட்டமைக்கு மு.காவினரே காரணம் என்பதற்கான போதிய சான்று.

இப்போது விடயத்துக்கு வருவோம்…

இம் முறை மு.காவின் தலைவர் அம்பாறையில் வகுத்த வியூகத்தின் படி மு.காவின் விருப்பு வாக்குகள் மூவருக்கு அளிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அப்படி மூவருக்குள் பகிரப்படாது போயிருந்தால், சிங்கள ஒருவர் பா.உறுப்பினர் தெரிவாகியிருப்பார். இது யாவரும் அறிந்த உண்மை. சம்மாந்துறையில் இருந்து ஹரீஸ், பைசால் காசிமுக்கு வாக்களித்தவர்கள், வாக்கு சேகரித்தவர்கள் துரோகிகள் அல்ல. அவர்களே தேர்தல் பற்றிய கள அறிவும், சமூக சிந்தனையுடையவர்களுமாகும் ( மு.பா.உறுப்பினர் மன்சூருக்கு வாக்களிக்காது, ஹரீஸ், பைசால் காசிமுக்கு வாக்களிக்குமாறு கூறியவர்களை மாத்திரமே துரோகியாக குறிப்பிட முடியும் ).

சம்மாந்துறையில் இருந்து ஹரீஸ், பைசால் காசிமுக்கு வாக்களித்தவர் துரோகி என்றால், மு.காவினர், தங்களது விருப்பு வாக்குகளை கட்டாயம் மூவருக்கு வழங்க வேண்டுமென வழிகாட்டிய மு.காவின் தலைவர் ஹக்கீம் மாபெரும் துரோகியல்லவா?

இம் முறை மு.காவின் தலைவர் ஹக்கீமின் வியூகம் வெற்றியளிக்க வேண்டும் என சம்மாந்துறை மக்கள் செயற்பட்டதாலேயே சம்மாந்துறை மண் பா.உறுப்புரிமையை இழந்திருந்தது என்பதே உண்மை. இதனை யாரும் சொல்ல மாட்டார்கள்.

முதலில் இந்த தேர்தலின் முடிவுகளை வைத்து ஆராய்ந்து, அது சொல்லியுள்ள விடயங்களை ஆராய்வோம். அதுவே எதிர்வரும் தேர்தல்களில் நாம் நேரான பாதையில் பயணிக்க வழி காட்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.