நேர்மையானவர்களுக்கும், போலிகளுக்குமிடையிலான போட்டியே இத்தேர்தலாகும் – பழனி திகாம்பரம்

(க.கிஷாந்தன்)

” நேர்மையானவர்களுக்கும், போலிகளுக்குமிடையிலான போட்டியே இத்தேர்தலாகும். எனவே, நேர்மையானவர்களை, சேவை செய்தவர்களை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் கடமையாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நல்லதண்ணி மறே தோட்டத்தின் கெடஸ் பிரிவில் 11.07.2020 அன்று பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

 

” வில்லை எடுத்துக்கொண்டு போருக்கு போவது போல, இந்த தேர்தல் தர்ம யுத்தம் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு தர்ம யுத்தம் ஒன்றும் கிடையாது. மக்களுக்கு நேர்மையாக சேவை செய்த அரசியல் வாதிகள் யார், ஏமாற்றியவர்கள் யார் என்பதை அறிந்து, நேர்மையானவர்களுக்கு வாக்களிக்கும் தேர்தலாகும்.

இத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுப்போம் என்றார்கள். நடக்கவில்லை. ஜனாதிபதி வாங்கி தருவார் என்றார்கள், இப்போது ஜனாதிபதியே ‘பல்டி’ அடித்துவிட்டார். இதனை நாங்கள் சுட்டிக்காட்டினால், 50 ரூபா எங்கே என்று கேட்கின்றனர். அதனை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தேன். அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால், மலையகத்தில் இருந்த அமைச்சரும், பெருந்தோட்டத்துறை அமைச்சரும் இணைந்து ஆப்புவைத்து விட்டனர்.

எது எப்படியோ கடந்த நான்கரை வருடங்களில் மக்களுக்கு சேவை செய்துள்வோம். இவ்வாறு சேவைகளை செய்துவிட்டே வாக்குகேட்டு வந்துள்ளோம். எனவே, நாங்கள் தோல்வியடைந்தால் அது மக்களுக்கு ஏற்படும் தோல்வியாகும். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சிலர் போட்டியிடுகின்றனர். இதற்கு அரசாங்கமும் துணைநிற்கின்றது. எமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமெனில் தொலைபேசிக்கு வாக்களிக்கவேண்டும். சிலர் வாக்குகளைப் பெறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர். மக்கள் அதனை நம்பக்கூடாது.” – என்றார்.