மு .கா, தனது வெற்றிக்காக முஸ்லிம்களை பலி கொடுக்கும் விடயத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது

*ஞானசார தேரர் பௌத்த நாடென நிரூபிக்க வாக்களிக்க கோரினால் இனவாதம். மு.கா அம்பாறையை முஸ்லிம்களது மாவட்டமென நிரூபிக்க கோரினால்…?*

இலங்கை முஸ்லிம்கள் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களை இந்த ஆபத்தான நிலைக்கு கொண்டு வந்ததில், எமது முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் பெரும் பங்குள்ளது என்பது கசப்பான உண்மை. இன்னும் முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளும் விதமான செயற்பாடுகளை முன்னெடுப்பது சிறிதும் ஏற்கத்தகுந்ததல்ல . முஸ்லிம்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு கோசமே, அம்பாறை மாவட்டத்தை டெலிபோன் வென்று, அம்பாறையை முஸ்லிம்களது மாவட்டமென நிரூபிக்கும் மு.காவின் கோசமாகும் ( இது தர்க்க ரீதியிலும் பல முரண்பாடுகளை கொண்டுள்ளது ).

தற்போது மு.கா அம்பாறையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனை சரி செய்ய தூக்கியுள்ள கோசமே, அம்பாறை மாவட்டத்தை டெலிபோன் வென்று, அம்பாறை முஸ்லிம்களது மாவட்டமென நிரூபிக்கும் மு.காவின் கோசமாகும். மு.கா கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் கொடுத்த ஆணையை உரிய முறையில் பயன்படுத்தியிருந்தால், ஏன் இந்த குறுக்கு வழிச் சிந்தனைகள்? என்ன மக்கள் ஆணை தான் மு.காவினருக்கு கிடைக்கவில்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, பிரதி அமைச்சு, இராஜாங்க அமைச்சு, முதலமைச்சர், மாகாண அமைச்சர் எல்லாமே இருந்தன. இவை அனைத்தும் கிடைத்தும் மக்களை திருப்தி செய்ய முடியவில்லையென்றால் நீங்கள் மக்களை ஆள தகுதியற்றவர்களே!

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பௌத்த நாடு என்பதை நிரூபிக்கவும், சிறு பான்மையின மக்களது பேரம் பேசும் சக்திக்கு எதிராகவும் பேரின மக்களை பேரின சக்திகள் ஒன்று கூட அழைத்திருந்தன. இந்த அழைப்பை ஏற்றிருந்த பேரின மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துமிருந்தனர். அத் தேர்தலில் பௌத்த மதகுருக்கள் நேரடியாக மக்களை வழி நடாத்தியுமிருந்தனர். *அன்று ராஜபக்ஸ அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதற்காக பயன்படுத்திய குறுக்கு வழியே இதுவாகும். அதற்குள் மக்கள் அகப்பட்டுக் கொண்டனர். இது இனவாத சிந்தனையை அடிப்படையாக கொண்டிருந்ததால் பிழையென்ற விடயத்தை நாம் எல்லோரும் உணர்ந்திருந்தோம். *இது பிழையென்றால், இன்று மு.கா செய்து கொண்டிருப்பது என்ன?*

அவர்கள் இலங்கை நாட்டை பௌத்த நாடாக நிரூபிக்க ராஜபக்ஸவினருக்கு வாக்களிக்க கோரினார்கள். இவர்களோ அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களது மாவட்டமாக நிரூபிக்க டெலிபோனுக்கு வாக்களிக்க கோருகின்றனர். இவ்விரண்டுக்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா? அவர்கள் செய்தது பிழையென்றால், இன்று மு.கா முன்னெடுக்கும் பிரச்சாரமும் பிழை தானே! முதலில் நாம் இனவாத சிந்தனையிலிருந்து விழிக்க வேண்டும். பிறகே நாட்டை திருத்த செல்ல வேண்டும். *நாம் இனவாதிகளாக இருந்து கொண்டு இனவாதத்தை ஒழிக்க முடியுமா?*

சிறுபான்மை கட்சிகள், தாங்களே இலங்கை நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகள் என சிறுபான்மை மக்களிடையே கூவித்திருந்தன. இதனை வைத்து ராஜபக்ஸ அணியினர் செய்த பிரச்சாரம் பேரின மக்களிடத்தில் எடுபட்டது. அச் சிந்தனையை பௌத்த மக்கள், தங்களது உள்ளத்தில் எடுத்ததில் சிறுபான்மை கட்சிகளின் செயற்பாடுகளும் ஒரு காரணமாக அமைந்திருந்தது என்பதை ஏற்றேயாக வேண்டும். அச் சிந்தனையை பௌத்த மக்கள் ஏற்றுக்கொண்டமையால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பௌத்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சிறுபான்மை மக்களின் ஆதரவில்லாமல் ஆட்சியை நிறுவி இருந்தனர். இது சிறுபான்மை சமூகத்திற்கு பெரும் எச்சரிக்கையான செய்தி.

இப்போது அம்பாறையை முஸ்லிம் மாவட்டமாக நிரூபிக்க போவதாக மு.காவினர் கூறுகின்றார்கள். *கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவை வெற்றி பெறச் செய்ய பயன்படுத்திய இனவாத உத்தியை இவர்களும் முயற்சித்து பார்க்கப் போகிறார்கள். மு.காவின் இந்த முயற்சியில், மு.காவினர் வெற்றியடைந்தாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி முஸ்லிம் சமூகம் பெரும் விலை கொடுக்க நேரிடும். *முஸ்லிம்கள் தனி நாடு கேட்கும் முயற்சியா என்பது போன்ற சிந்தனைகள் பேரின மக்களிடையே எழுந்துவிடலாம். எழுந்தால்…?*

ஏற்கனவே அம்பாறையில் முஸ்லிம்களின் இருப்பு பல வழிகளில் சவாலுக்குள்ளாகியுள்ளது. இது பற்றி நாம் விழிப்புணர்வடைய வேண்டும். எம்மிடையே இது தொடர்பான போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. இது தொடர்பில் மிக நிதானமாக காய் நகர்த்த வேண்டும். தண்ணீரினுள் நெருப்பை கொண்டு செல்ல வேண்டிய கதை தான் இது.

*இந் நிலையில் அம்பாறை முஸ்லிம்களது மாவட்டம் என்பதை நிரூபிக்க பாரிய ஆரவாரத்துடன் சென்றால், இம் மாவட்டத்தின் மீது இனவாதி பார்வை வேறு விதத்தில் இருக்கும்.* இன்று மு.காவினர் இலங்கை நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளின் மைக்கின் முன் நின்று இக் கதைகளை கூவிக் கொண்டிருக்கின்றனர். இதனை இனவாத ஊடகங்கள் தூக்கி பிடித்தால் என்னவாகும். இது இவர்களது மாவட்டமா, அதையும் பார்ப்போம் என சிந்தித்துவிடுவார்கள். அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களை சிறிய முஸ்லிம்கள் அதிகமாகவுள்ளனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எலி அறுக்கும், தூக்காது. மு.கா இனவாதத்தை தூண்டிவிடும். விளைவை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இது ஆபத்தான இனவாத கோசம். அம்பாறை என்பது மூவின மக்களுக்கும் சொந்தமான மாவட்டம் என்ற விடயத்தை வெளிப்படுத்தி, எமக்கு தேவையானவற்றை சாதிப்பதே பொருத்தமானது. அம்பாறை முஸ்லிம்களுடைய மாவட்டம் என்பதால் எதனையும் சாதித்துவிடப் போவதில்லை. சல சலப்பில்லாமல் பணியாரம் சுட வேண்டும். *மு.கா, தனது வெற்றிக்காக முஸ்லிம்களை பலி கொடுக்கும் விடயத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது.* உடனடியாக முஸ்லிம் புத்திஜீவிகள் இவ்விடயத்தில் கரிசனை கொள்ள வேண்டும்.

*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,*
*சம்மாந்துறை.*