ஆனால், அதே வாகனத்திற்கு பொறுப்பற்ற ஒரு சாரதியை பணிக்கு அமர்த்தி விட்டால், அந்த பயணம் முழுக்க நிம்மதியிருக்காது. அவர் சரியாக ஓட்டுகின்றாரா, பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பாரா என்ற பதற்றமே அப் பயணத்தை நாசமாக்கி விடும்.
சரியாகச் சொன்னால், முஸ்லிம்களின் அரசியல் பயணமும் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கின்றது. பொறுப்பற்றவர்களை சாரதிகளாகவும், பொருத்தமற்றவர்களை நடத்துனர்களாகவும் தெரிவு செய்யும் பெருந் தவறைச் செய்து விட்டு, இச் சமூகத்தின் அரசியல் தமது இலக்கைச் சென்றடையும் என்று முஸ்லிம் சமூகம் மடமைத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கின்றது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.
வாகனமே ஓட்டத் தெரியாத சின்னப் பிள்ளைகள், ‘எல் போட்’ போட்டு பழகுகின்றவர்கள், அல்லது மது அருந்தும் பழக்கமுள்ள பொறுப்பற்ற சாரதிகள், வீதி ஒழுங்குகளைப் பின்பற்றாதவர்கள்…… இப்பேர்ப்பட்ட பேர்வழிககளிடம் ஒரு பஸ் வண்டியைக் கொடுத்துவிட்டு, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இனிதே பயணத்தை மேற்கொள்ளலாம் என்று முஸ்லிம் வாக்காளப் பெருமக்கள் நினைத்து ஏமாந்து போவதையே காலகாலமாக காண முடிகின்றது.
அரசியல்வாதிகளின் பிழை
அரசியல் செய்வது என்பது வெளியில் இருந்து பார்ப்பது போல அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல. ஆயினும், ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூறுவது போல,அதை அவர்கள் மீது யாரும் திணிக்கவில்லை. அவர்களாகவே அதனைத் தெரிவு செய்கின்றார்கள் என்ற அடிப்படையிலும், மக்களே அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு, மாகாண சபைக்கு, உள்ளுராட்சி மன்றத்திற்கு அனுப்புகின்றார்கள் என்ற வகையிலும் மக்களுக்காக சேவையாற்றும் தலையாய பொறுப்பை அரசியல்வாதிகள் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் மேலோட்டமாக நோக்கினால் முஸ்லிம் சமூகப் பரப்பில் நடக்கின்ற அரசியல் பின்னடைவுகளுக்கு முழுக்க முழுக்க தலைவர்களும் தளபதிகளும்தான் காரணம் என்பதான ஒரு தோற்;றப்பாடு இருக்கின்றது. உண்மையில் அவர்களே இதற்குக் காரணமானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆழமாகப் பார்த்தால் இது விடயத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு சமூகமாக செய்த தவறுகள் பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது.
சமூகத்தின் பங்கு
ஏனெனில், அரசியல் பிரதிநிதிகள் யாரும் வானத்தில் இருந்து குதிப்பதில்லை, வேறு ஒரு தரப்பினரால் வலிந்து நியமிக்கப்படுவதும் கிடையாது. மக்கள்தான் அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அவர்கள் விரும்பினால் அரசியல் செயற்பாட்டுக் களத்திற்கு வரலாம் என்றாலும், பிரதிநிதித்துவ அரசியலுக்கு மக்களின் வாக்குகள் இன்றி, ஆதரவின்றி யாரும் தெரிவு செய்யப்பட முடியாது.
அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஒரு சில நல்லவர்கள் முன்வருவதைப் போலவே, பணத்தாசை பிடித்தவர்கள், பதவி வெறி கொண்டவர்கள், மோசடிக்காரர்கள், போதைப் பொருள் வர்த்தகத்திற்கு துணை நிற்பவர்கள், மது மற்றும் மாதுப் பிரியர்கள், ஏமாற்றுக் காரர்கள் என யாரும் வர முடியும்.
ஆனால், மக்கள்தான் அவர்களை உள்ளுராட்சி சபை உறுப்பினராக, மாகாண சபை அங்கத்தவராக, எம்.பி.யாக தேர்ந்தெடுக்க வேண்டும். யாரும் மந்திரத்தாலோ மாய ஜாலத்தாலோ வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே வைத்துக் கொண்டோ மக்கள் பிரநிதிகளாக வந்து விட முடியாது.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழர்கள், சிங்களவர்களுக்கும் பொருந்தும். இந்த உண்மையை அறிந்திருந்தும் மக்களாகிய நாம் மறந்து விடுகின்றோம். அந்த வகையில், குறிப்பாக ‘முஸ்லிம்களுக்கானது’ எனச் சொல்லப்படுகின்ற அரசியல் இன்று கெட்டுக் குட்டிச் சுவரானதில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் மறைமுகமாக பாரிய பங்கிருக்கின்றது என்ற யதார்த்த நிலை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் அரசியலில் நல்ல பல அரசியல்வாதிகள் இருந்திருக்கின்றார்கள். இன, மத பேதங்களுக்கு அப்பாலும் பிரதேசவாதத்தை கடந்தும் சேவையாற்றிய சிலரையும் அத்திபூத்தாற் போல் நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், இந்தப் போக்குகள் கடந்த இருபது வருடங்களில் மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது.
மேற்குறிப்பிட்ட பலவிதமான கெட்ட பண்புகளைக் கொண்டவர்கள் முஸ்லிம் அரசியல் பெருவெளியை நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் அல்லது ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள் எனலாம். முஸ்லிம் அரசியலின் பின்னடைவுக்கு இப்படியான தலைவர்களும் உறுப்பினர்களும் முக்கிய காரணிகளாவர்.
வெட்கம் கெட்டதனம்
நாம் கடந்த வார கட்டுரையில் விபரித்திருந்ததைப் போல, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கினார்கள். எமக்கு வாக்களித்தால் பெரும் அபிவிருத்திகளைச் செய்வோம் என்றும், முஸ்லிம்களின் உரிமைகளை வென்று தருவோம் என்றும் எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் பேசி மக்களின் வாக்குகளைக் கேட்டனர். மக்களும் வாக்களித்தனர் என்று வைத்துக் கொள்வோம்.
இவ்வாறு வழங்கப்பட்ட மிக முக்கியமான வாக்குறுதிகளில் 95 சதவீதமானவற்றை அவர்கள் நிறைவேற்றவில்லை. இப்படியிருக்கையில் மீண்டும் பழைய பல்லவியைப் பாடிக் கொண்டும், மக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் வாக்குக் கேட்டு வருகின்றார்கள் என்றால், அவர்களுக்கு பாடம் படிப்பிக்கும் முகமாக அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமா இல்லையா?
வெட்கப்பட்டால் அரசியல் செய்ய முடியாது. எனவே அரசியல்வாதிகள் ‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே’ என்ற எந்தக் கூச்சமும் இன்றி மீண்டும் மீண்டும் வாக்குக் கேட்டு வருவார்கள். அது அவர்களுக்கு பழகிப் போகும். ஆனால், சூடு சுரணையுள்ள ஒரு சமூகம் ஏமாற்றுக் காரர்கள், மோசமான அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிக்க முடியுமா? இல்லவே இல்லை.
ஆனால், முஸ்லிம் அரசியலில் பரவலாக அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. கட்சிக்காக, தலைவருக்காக, கட்சியை உருவாக்கியவருக்காக, பாடலுக்காக, உணர்ச்சிக்காக, அன்பளிப்புப் பொருட்களுக்காக, ஊருக்கு எம்.பி. வேண்டும் என்ற ஆசைக்காக, வேறு ஒருவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, இவரை விட்;டால் ஆள் இல்லை என்ற நினைப்பில்….. ஒவ்வொரு முறையும் முஸ்லிம் சமூகம் தமது தவறுகளை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது.
கேள்வி கேட்காமை
முஸ்லிம் அரசியல் தலைவர்களை தோழில் சுமந்தார்கள், முத்தமிட்டார்கள் என்று பெருமையடிப்பதைக் காண்கின்றோம். ஆனால், ஒரு அரசியல்வாதி அல்லது முன்னாள் எம்.பி. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமைக்காக, மக்களை ஏமாற்றியமைக்காக பொது மக்களால் வழிமறித்து நிறுத்தப்பட்டு நாக்கைப் பிடுங்குமளவுக்கு கேள்வி கேட்கப்பட்டது என்று எப்போதாவது கேள்விப்பட்துண்டா? அல்லது ஒரு அரசியல்வாதியின் மோசமான செயற்பாட்டுக்காக கட்சி நடவடிக்கை எடுத்ததாக அண்மைக்காலங்களில் செய்திகள் வந்ததுண்டா?
தமிழர் அரசியலை புடம்போட்டதில் பல்கலைக்கழக சமூகத்திற்கு பெரும் பங்குண்டு. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றன தமிழ் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, அரசியல்வாதிகளை நெறிப்படுத்துகின்றது. சிங்கள அரசியலும் பல்கலைக்கழகங்களை சரியாகப் பயன்படுத்துகின்றது என்பதை நாமறிவோம்.
ஆனால் முஸ்லிம்கள் சார்பான பல்கலைக்கழக சமூகமானது, தமிழ் பல்கலைக்கழக சமூகம் செய்ததில் நூற்றில் ஒரு பங்கைத்தானும் செய்யவில்லை. குறிப்பாக, மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் பெரும் எதிர்பார்ப்புக்களோடு உருவாக்கப்பட்ட ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2000ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு முஸ்லிம் அரசியலைப் பற்றி ஆய்ந்தறிந்து, அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் ஒரு சமூகப் பணியை தவறவிட்டிருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முஸ்லிம் அரசியலில் இப் பல்கலைக்கழகம் ஒரு வகிபாகத்தை எடுக்கத் தவறிவிட்டது என்பதே நிதர்சனமாகும்.
ஒரு சாரதி வாகனத்தை பிழையாக ஓட்டுகின்றான், ஒரு அரசியல்வாதி பிழையான அரசியலைச் செய்கின்றான் என்றால் அவனை நிறுத்தி அதுபற்றிக் கேள்வி கேட்காமல் ஒரு சமூகம் அவனுடன் இணைந்து பயணிக்கின்றது என்றால் அதன் அர்த்தம் என்ன? அவரது போக்கில் நாமும் உடன்படுகின்றோம் என்பதேயன்றி வேறொன்றுமில்லை.
இலங்கையில் எழுத்தறிவு 96 சதவீதத்திற்கும் அதிகமாகும். ஆனால், பாராளுமன்றத்தில் இருக்கின்ற கணிசமான எம்.பி.க்களுக்கு க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர தகுதிகள் கூட இல்லை என்று பகிரங்கமாகவே கூறப்படுகின்றது. இந்நிலையில், எழுத்தறிவும் பகுத்தறிவும் உள்ள மக்கள் மீண்டும் மீண்டும் இப்பேர்ப்பட்ட பேர்வழிகளை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கின்றமை கொஞ்சம் கூட நியாயப்படுத்த முடியாததாகும்.
எல்லோரும் பொறுப்பு
அந்த வகையில், முஸ்லிம் அரசியல் சீர்கெட்டுப் போனமைக்கு முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உலமா சபை, பள்ளிவாசல் நிர்வாகங்கள், பல்கலைக்கழக சமூகம், படித்த மாணவர் சமூகம், பணம் கொடுத்து விருதுகளும் பொன்னாடைகளும் பெறும் கூட்டம் தொடக்கம் கடைநிலை வாக்காளர்கள் வரை ….. கேள்வி கேட்காத ஒவ்வொரு தரப்பினருக்கும் இதில் பங்கிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த வகைக்குள் உள்ளடங்கும் முஸ்லிம் குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் தீவிர ஆதரவாளர்கள், பக்தர்கள் போல கண்மூடித்தனமாக ஆதரிக்கின்ற போராளிகள், முகநூல் சண்டியர்கள், அந்த அரசியல்வாதியினால் அனுகூலம் பெறுபவர்களை நாம் இங்கு சாதாரண மக்கள் என்ற வகுதிக்குள் உள்ளடக்கவில்லை. அவர்கள் வேண்டுமென்றால் தங்களது நேசத்திற்குரிய அரசியல்வாதியின் பிழைகளையும் கண்மூடித்தனமாக சரி எனக் கூறி ஆதரிக்கலாம். ஆனால் சாதாரண வாக்காளர்கள் அப்படிச் செய்ய முடியாது. அது சொந்தச் செலவில் சூனியம் வைத்தலாகும்.
அப்படிச் செய்ததன் விளைவையே இன்று முஸ்லிம் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மேடைகளில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கின்ற போது, போலி வாக்குறுதிகளை வழங்கும் போது கைதட்டி அவரை உற்சாகப்படுத்தாமல், கேள்வி கேட்கும் கலாசாரம் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
முஸ்லிம் சமூகத்தை மூலதனமாக வைத்து நடாத்தப்படுகின்ற அரசியல் தவறான பாதையில் செல்கின்ற போது, ஏமாற்று அரசியலைச் செய்கி;ன்ற போது அதனை முஸ்லிம் சமூகத்தின் ஓரிருவர் மட்டுமன்றி எல்லா மட்டத்தில் இருப்பவர்களும் குறிப்பாக, வாக்காளர்கள் தட்டிக் கேட்கத் தலைப்பட்டிருந்தால் அரசியல்வாதிகளுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கும்.
இப்படி அரசியல் செய்தால் மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடித்து விடுவார்கள் என்பதற்காகவே தம்மை சுய பரிசீலனை செய்ய நினைத்திருக்கலாம். ஆனால், மக்கள் ஏமாறுவதற்கு தயாராக இருக்கின்ற போது அவர்களுக்கு ஏமாற்றுவதற்கு என்ன தயக்கம் வேண்டிக் கிடக்கின்றது!
மீள் பரிசீலனைக் காலம்
இந்த நிதர்சனத்தை இலங்கை முஸ்லிம்கள் புரிந்து கொள்வது மட்டுமன்றி ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற அரசியலானது உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலாக உருவெடுக்காமல் போனமைக்கு, முஸ்லிம் மக்களாகிய நாமும் மறைமுகக் காரணமாக இருக்கின்றோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை அங்கத்தவர் என்பது இந்த சமூகத்தின் பிரதிநிதி என்பது மட்டுமல்ல. எமது பிரதிவிம்பமாகவும் இருக்க வேண்டும். அவர்களைக் கொண்டே அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகம் முன்னோக்கிச் செல்ல வேண்டியிருப்பதால், நமது தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எத்தகைய இலட்சணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும்.
நல்லதொரு சமூகத்தின் தலைவர், மக்கள் பிரதிநிதி மோசமான ஒரு ஆளாக, கேடுகெட்ட அரசியல் செய்பவராக இருக்க முடியாது. அப்படியான அரசியல்வாதிகளிடம் சமூகம் கேள்வி கேட்ட வேண்டும். அவர்களது பொறுப்புக்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது பற்றிய பொறுப்புக்கூறல் விளக்கத்தை கோர வேண்டும். இதில் திருப்தியான பெறுபேறுகளைப் பெறாத அரசியல்வாதி அவர் யாராக இருந்தாலும் காலதாமதமின்றி மக்கள் பாடம் புகட்ட வேண்டும். அதற்கு இது பொருத்தமான காலமும் ஆகும்.
அப்படிச் செய்தாலே இனியாவது இந்த அரசியலை கொஞ்சமாவது களையெடுப்புச் செய்து, சமூகத்திற்கு ஏற்ற அரசியலாக கட்டமைப்பதற்கான களநிலைமைகள் உருவாகும். இல்லையென்றால், இன்னும் மோசமானவர்கள் இந்த அரசியலுக்கு வருவார்கள். கெட்ட பண்புகள் அரசியலுக்கு ஒரு ‘தகுதியாக’ கொள்ளப்படும். அவர்களை நீங்களும் உங்களது பிள்ளைகளும் வாக்களித்து தெரிவு செய்வீர்;;கள். உங்கள் முட்டாள்தனத்தை தலையெழுத்து என்று சொல்லி நொந்து கொள்வீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.
ஆகவே, முஸ்லிம்களுக்கான அரசியலின் இன்றைய நிலைக்கு முஸ்லிம் பொது மக்களும் மறைமுகமாக முக்கிய பங்குதாரர்களாக இருக்கின்றோம் என்பதை நினைவிற் கொண்டு செயற்பட வேண்டும். தவறு செய்கின்ற அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். எந்;தத் தேர்தலிலும், மோசமான பேர்வழிகளை தோற்கடிக்கவும் நல்லவர்களை மட்டும் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யவும் முஸ்லிம்கள் முன்வரும் வரை இந்த இழிநிலை தொடரவே செய்யும்.
இந்தத் தேர்தல் காலத்தில் நமது அரசியல்வாதிகள் பற்றிய மீள் வாசிப்பொன்றை நிகழ்த்துங்கள். வாக்களிக்க முன்னதாக இந்தக் கட்டுரையை இன்னுமொரு தடவை வாசியுங்கள். இதற்கப்பால் மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை!
ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 28.06.2020)