உலக வங்கி நன்கொடையாக வழங்கிய 230 மில்லியன் பணத்திற்கு என்ன நடந்தது என்பதை அரசு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்கின்றார் – முன்னாள் பிரதமர்

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த தான் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால் மே மாத இறுதியில் நாட்டை வழமையான நிலைமைக்கு கொண்டுவந்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் நேற்று (07) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் நாளொன்றுக்கு ஐயாயிரம் வரையிலான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 24 ஆம் திகதி நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் 102 ஆக காணப்பட்டதாகவும் ஆனால் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்து, 11 உயிரிழப்புகளும் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.

தனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை 75,239 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அப்படி பார்த்தால் நாளொன்றுக்கு 690 பரிசோதனைகளே இடம்பெறுவதாக கூறினார்.

அதன் பிரதிபலனாகவே தற்போது கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளதாகவும், உரிய வகையில் பரிசோதனைகளை நடத்தியிருந்தால் தொற்றாளர்களை 500 க்குள் கட்டுப்படுத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அசியல் ரீதியான நன்மைகளை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாகவும், இதற்கு இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் நன்னொடைகளை பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

உலக வங்கி 230 மில்லியனை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்த அவர் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.