மகிந்தவை பிரதமர் வேட்பாளராக பொ.ஜ.ஐ.மு.வில் களமிறக்க திட்டம் !

 

downloadமகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக பொதுஜன ஐக்கிய முன்னணியில் களமிறக்குவதற்கான நடவடிக்கைகளை மகிந்த ஆதரவு தரப்பு முன்னெடுத்து வரும் அதேவேளை பொதுத்தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடாது சந்திப்பது குறித்து அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடி ஆராயவுள்ளனர்.

மகிந்த ஆதரவு தரப்பு மகிந்த ராஜபக்ஷவை பொதுஜன ஐக்கிய முன்னணியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட வைப்பதற்கான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ளனர். பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக மகிந்த ராஜபக்ஷ இருப்பதாலும் அக்கட்சி 1994 இல் உருவாக்கப்பட்டு இரு ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றிபெற்று மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளதாக இருப்பதாலும் மகிந்த ராஜபக்ஷவை அக்கட்சியில் களமிறக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லையென மகிந்த ஆதரவு தரப்பு தெரிவித்துள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளராக முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண இருப்பதால் இது குறித்து அவரிடம் தெரிவித்து ஆதரவு வழங்குமாறு கேட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் தந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது இவ்வாறிருக்க எதிர்வரும் பொதுத்தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடாது சந்திக்கும் நோக்குடன் அம்முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடிப் பேசவுள்ளனர். இந்தச் சந்திப்பு ஜனாதிபதியினதோ அல்லது முன்னாள் ஜனாதிபதியினதோ வீட்டில் நடைபெறாது கொழும்பில் பிறிதொரு இடத்தில் நடத்த ஐ.ம.சு. முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.  இக்கூட்டத்தின் போது மகிந்த ராஜபக்ஷவை ஐ.ம.சு. முன்னணியில் போட்டியிட வைக்க வேண்டுமென ஒரு பிரிவு கோரும் அதேநேரம் மறுபுறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக களமிறக்க முடியாது என கூறியுள்ளதால் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதேநேரம் சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக பெயரிட்டால் மகிந்த ராஜபக்ஷ ஆதரவளிக்கும் ஒரு நிலைவரம் தோன்றலாம். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கவேண்டும் என்ற நிலைமையில் இது குறித்தும் பேசப்படவுள்ளதாக ஐ.ம.சு. முன்னணி தரப்பு தெரிவித்தது. இதேவேளை மகிந்த ராஜபக்ஷவை ஐ.ம.சு.மு. பிரதம வேட்பாளராக களமிறக்கினால் தமிழ், முஸ்லிம் வாக்குகளை எதிர்பார்க்க முடியாது என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள சிறுபான்மை கட்சிகள் சிந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .