கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை பிரஜாவுரிமைக்கெதிரான வழக்கின் சாத்தியப்பாடுகள்

file image

வை எல் எஸ் ஹமீட்

மொட்டுவின் பெயரிடப்பட்ட வேட்பாளர் கோட்டாவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள, “அவர் இந்நாட்டுப் பிரஜையல்ல”; என்ற வழக்கின் தீர்ப்பு, வேட்புமனுத்தாக்கல் தினமான 7ம் திகதிக்குமுன் அவருக்குப் பாதகமாக வந்தால் அவர் போட்டியிடமுடியாது.

அவர் வெற்றிபெற்றால் போட்டியிடலாம். ஆனால் அடுத்த தரப்பு உயர்நீதிமன்றுக்கு மேன்முறையீடு செய்யலாம். மேன்முறையீட்டிலும் கோட்டாவே வென்றால் பிரச்சினை ஏதுமில்லை.

file image

தோற்றால்:
—————
அவருக்கு எதிராக தீர்ப்பு தேர்தல் முடிவடைவதற்குள் வந்தால் அது தேர்தலையோ அவரது வேட்புமனுவையோ பாதிக்காது. தேர்தல் முடிந்தபின் தேர்தல் ஆட்சேபனை மனு ( election petition) மூலம் அவரது தெரிவை செல்லுபடியற்றதாக்கலாம்.

அல்லது மேன்முறையீட்டுத் தீர்ப்பு தேர்தல் முடிவடைந்தபின் அவருக்கு எதிராக வந்தாலும் அதன்பின் ஒரு தேர்தல் ஆட்சேபனை மனுவைத் தாக்கல்செய்து அவரது தெரிவைச் செல்லுபடியற்றதாக்கலாம்.

அவ்வழக்கில் உயர்நீதிமன்றம் போட்டியிட்ட இன்னுமொருவர்தான் வெற்றியாளர்; எனவும் பிரகடனப்படுத்தலாம்; புதிய தேர்தலுக்கும் உத்தரவிடலாம். அது நீதிமன்றத்தைப் பொறுத்தது.

பிரதமர் இடைக்கால ஜனாதிபதி
——————————————
நீதிமன்றத் தீர்ப்பிற்கும் புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கும் இடைப்பட்ட காலத்திற்கு பிரதமர் பதில் ஜனாதிபதியாக இருப்பார்.

சிலவேளை மஹிந்த அச்சந்தர்ப்பத்தில் பிரதமராக இருந்தால் அவர்தான் பதில் ஜனாதிபதி. பதில் ஜனாதிபதியாக இருக்க சட்டத்தடை ஏதுமில்லை.

உயர்நீதிமன்றம் போட்டியிட்ட இன்னுமொருவர்தான் சரியாக தெரிவுசெய்யப்பட்டவர்; எனத் தீர்ப்பளித்தால் அவர் ஒரு மாதத்திற்குள் பதவியேற்க வேண்டும்.

மறுதேர்தலுக்கு உத்தரவிட்டால் அதிலிருந்து மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.