ஒருவர் நன்கு உடற்பயிற்சி செய்யும்போது, அவரது உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும், அவர் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறையும், காரணம், உடற்பயிற்சி அவரது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். அதேசமயம், பலருக்குத் தெரியாத விஷயம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன்மூலம் ஒருவர் தனது தினசரி அழுத்தங்களையும் சமாளிக்கலாம்.
உடற்பயிற்சியின் பிற உணர்வுப் பலன்கள் இவை:
ஒருவர் கட்டுக்கோப்பான உடலுடன் இருக்கும்போது, தன்னைப்பற்றி, தன் தோற்றத்தைப்பற்றிச் சிறப்பாக உணர்கிறார். சில உடற்பயிற்சி இலக்குகளை எட்டும்போது, சாதித்த உணர்வும் தன்னம்பிக்கையும் வருகிறது. உதாரணமாக, வாரம் இத்தனைமுறை உடற்பயிற்சி செய்யவேண்டும், எத்தனை வேலை வந்தாலும் இதைச் செய்தாகவேண்டும் என்று ஒருவர் தீர்மானிக்கிறார். அவர் அந்த இலக்கை எட்டிவிட்டார் என்றால், தன்னுடைய சாதனையை எண்ணி அவர் திருப்தியடைகிறார், இது அவருடைய நம்பிக்கையைத் தூண்டுகிறது.
ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, அவருடைய மனம் நேர்விதமாகச் சிந்திக்கிறது, அவர் தினசரிவாழ்க்கையின் கவலைகள் மற்றும் அழுத்தங்களை மறந்துவிடுகிறார். குறிப்பாக, வெளியே சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஒரு ஜாலியான விஷயம்; இதனால் பிறருடன் சமூகரீதியில் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது, இது ஒருவருடைய மனோநிலையை மேம்படுத்துகிறது.
இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவை, உடற்பயிற்சியின் சில பயன்கள்மட்டுமே; இவற்றைத் தொகுத்துச்சொன்னால், உடற்பயிற்சி ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறது. ஆனால், மக்களில் பலர் உடற்பயிற்சி என்றால் தயங்குகிறார்கள். காரணம், அவர்கள் உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்முக்குச் சென்று கடினமாக எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணிப் பயந்துவிடுவதுதான். உண்மையில், சும்மா நடப்பதும், ஜாக்கிங் ஓடுவதும்கூட உடற்பயிற்சிதான், அதனாலும் பல நன்மைகள் உண்டு.
இன்னொரு பிரச்னை, உடற்பயிற்சி செய்தால், தளர்ந்த மனோநிலை மாறும் என்பதைப் பலர் உணர்வதில்லை. மாறாக, மனோநிலை தளர்ந்திருந்தால் உடற்பயிற்சி வேண்டம் என்று தீர்மானித்துவிடுகிறார்கள். தனியே ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, தங்களைத்தாங்களே நொந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் இன்னும் மோசமாக உணர்வார்களேதவிர, அவர்களுடைய மனோநிலை மாறப்போவதில்லை. அதற்குப்பதிலாக, அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அவர்களது கவனம் சிதறும், மனோநிலையும் மேம்படும்.
“ஒருவர் மனம் தளர்ந்து இருக்கும்போது, கை, கால்களை அசைக்கவேண்டும், அது அவரது சக்தி நிலையை மேம்படுத்தும். ஆகவே, சும்மா மேலும் கீழுமாகக் குதித்தால், அதுகூட ஒருவருடைய மனோநிலையை மேம்படுத்தும். மது, சிகரெட் போன்ற பழக்கங்களை விட முயற்சி செய்கிறவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், அந்தப் பொருளின்மீது அவர்களுக்கு வருகிற தீவிர ஆசை குறைகிறது. குறிப்பாக, யோகாசனத்தால் பதற்றக் குறைபாடுகள், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியாவின் அறிகுறிகள் கட்டுக்குள் வரும் எனத் தெரிகிறது. டிமென்ஷியா போன்ற வயது தொடர்பான பிரச்னைகள் வருவதையும் உடற்பயிற்சி தாமதப்படுத்துகிறது. அதேபோல், குழந்தைப்பருவ மனநலப் பிரச்னைக்குக் காரணமான சில அம்சங்களைக் குறைக்க உதவுகிறது.
இன்றைக்கு மக்கள் உடல்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது குறைந்துவிட்டது, இனிவரும் ஆண்டுகளில் இது இன்னும் குறையும். நமது மூதாதையர்கள் கடினமாக உழைத்தார்கள், சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நாம் இயந்திரங்களை ஏற்றுக்கொண்டோம், மனித உழைப்பைக் குறைத்து, இயந்திரங்களின் ‘செயல்திறனை’ அதிகரித்தோம். உதாரணமாக, நாம் சிறிது தூரம்கூட நடப்பதில்லை, வாகனங்களை விரும்புகிறோம், படிகளில் ஏறுவதில்லை, லிஃப்ட்களைத் தேடுகிறோம், நமது பல்தேய்க்கும் பிரஷ்களில்கூட மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேசமயம், பதற்றம் மற்றும் மனச்சோர்வுப் பிரச்னை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இதனால் நமது பொது ஆரோக்கியமே கவலைக்குரியதாகிவிட்டது. ஒருவர் உடற்பயிற்சி செய்யாவிட்டால் அவருக்கு மனநலப்பிரச்னை வந்துவிடும் என்று சொல்ல இயலாது, ஆனால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறவர்களுடைய அழுத்த அளவு குறைந்து காணப்படும் என்பதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. அதிகம் வேண்டாம், தினமும் சிறிதுதூரம் நடந்தாலேபோதும், அப்படி நடப்பவருடைய வாழ்க்கைத்தரம் மேம்படும். இதற்காக எல்லாரும் நேரம் ஒதுக்கவேண்டும்.