கொழும்பு தாமரை கோபுரம் அமைக்க 2 பில்லியன் ரூபா பணம் சீன தேசிய இலக்ரேனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் இதை தவிர ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனம் ஒன்றிற்கோ எவ்வித பணமும் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரை கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்த போதும், அந்த 2 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.