அடி விழும்போது மட்டும் கொந்தளித்து விட்டு பின்னர் அமைதிகாக்கும் சமூகமாக எம்மை தலைவர் அஸ்ரப் வழிநடத்தவில்லை – அதாஉல்லா

FILE IMAGE

நூருள் ஹுதா உமர்

 

 ரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்களை வழங்கினார். அந்த விமானங்கள் தான் கொழும்பை தாக்கியழிக்க பயன்பட்டது என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 19வது வருட நினைவேந்தல் நேற்று (16) மாலை ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் வாவிக்கரை பூங்கா அருகில் இடம்பெற்ற போது அங்கு நினைவுரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

FILE IMAGE

அடி விழும்போது மட்டும் கொந்தளித்து விட்டு பின்னர் அமைதிகாக்கும் சமூகமாக எம்மை தலைவர் அஸ்ரப் வழிநடத்தவில்லை. அவர் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் இன்று வழிதவறி பயணித்துக்கொண்டிருக்கிறது. அஷ்ரபிற்கு மக்கள் வாக்களித்தது அவரின் அழகில் மயங்கியல்ல அவரின் ஆளுமையை கண்டே மக்கள் அவரை தலைவராக ஏற்று கொண்டனர். யானை அல்லது சு.க வில் யார் தேர்தல் கேட்டாலும் வாக்களித்த எம்.பியாக்கியவர்கள் கிழக்கு மக்கள். ஆனால் இப்போது அதிக முஸ்லிங்கள் பரம்பரைபரம்பரையாக வாழ்ந்த கிழக்கு மண் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியிருக்கிறது. 

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உறவுப்பாலமாக இருந்தவர் மறைந்த தலைவர் அஸ்ரப். அதனால் தான் அவர் நாட்டின் ஒற்றுமையை கருதி முஸ்லிம் காங்கிரஸை இல்லாமலாக்கி நுஆவை உருவாக்கினார். இன்று வீட்டு கூரைக்கு மேலால் எல்லை கேட்டு சண்டைபிடிக்கும் அளவுக்கு தமிழ் முஸ்லிம் உறவு சிதைந்து கிடக்கிறது. இப்போதைய தேவை சகல சிறுபான்மை மக்களும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டியதே. நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியில் எங்கும் சென்று வாழ முடியாது. ஒரே தேசத்தில் இலங்கையர்களாக நாங்கள் வாழ வேண்டும். 

தலைவர் அஸ்ரப் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டியதே எமது தேவையாக இருந்தது. கொள்கைகளுக்காக தலைவராக்கியவர் வேறு யாருடையதோ தேவைக்காக இயங்கிக்கொண்டிருக்கிறார். தலைவர் அஸ்ரப் ரணிலை ஏற்காதவர். ஆனால் ஹக்கீம் தலைவரானதும் செய்த முதல் வேலை ரணிலின் கட்சியை நிமிரச்செய்ய பாடுபட்டதே. யானைக்காரர்கள் தலைவருக்கும் இந்த சமூகத்திற்கும் செய்த அநியாயங்கள் ஏராளம்.

யுத்த வெற்றியை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கும் போது சரத் பொன்சேகாவை, ரணிலை, மைத்திரியை கொண்டுவந்து ஐ.தே.கட்சியை பலப்படுத்துவதை மட்டும் சிந்திக்கும் முஸ்லிம் தலைமைகள் தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பின் சுமந்திரன், சம்பந்தன் பேசுவது போன்று முஸ்லிங்களின் நலனுக்காக சிறிதளவும் பேசாமல் வாய்முடி மௌனியாக இருக்கிறார்கள். முஸ்லிம் சமூகமான நாம் எல்லாம் முடிந்தவர்களாக நடுத்தெருவில் இருந்துகொண்டிருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் தமிழர்களும், சிங்கள பெரும்பான்மையினரும் நிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிப்பதை விட முஸ்லிங்களின் விரோதியான ஐக்கிய தேசிய கட்சியை விழ்த்துவதே எமது இலக்காக இருக்க வேண்டும்.

அமெரிக்கா கொண்டுவரும் ஜனாதிபதிமுறை ஒழிப்பு, மாகாணசபை சட்டமூலம், போன்ற எத்தனையோ திட்டங்களுக்கு கைகளை உயர்த்தி முட்டாள்தனமாக அரசியல் செய்கிறார்கள். எமது காணிகள், துறைமுகங்கள் வேறு தேவைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்டு கபளீரம் செய்ய அமெரிக்காவின் சதி நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான சதிகளை முறியடிக்க சரியான தலைமை உருவாக்கப்படல் வேண்டும். தலைமை பிழைத்து வெளிநாட்டு ஆதிக்கம் கூடிவிட்டால் எமது நிலை என்னவாகும். முஸ்லிங்களாகிய எமக்கு சரியான தீர்மானம் வேண்டும். எமக்கு இப்போது தேவை சரியான யாப்பும், சரியான தலைமையுமே. 

ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும். துவேஷங்கள் நிறைந்து காணப்படும் இந்த காலகட்டத்தில் காமெடி தனமான முடிவுகளை எடுக்க கூடாது. சுயநலவுக்காக சொந்த இலாபத்துக்காக றிசாத் போன்றவர்கள் முடிவுகளை எடுத்துவிட்டு முஸ்லிங்களை பலிகொடுக்க முனையக்கூடாது. மக்கள் சரியான முடிவுகளை எடுக்கின்ற போது அவற்றை திசைதிருப்ப எத்தனிக்க கூடாது. தேசிய காங்கிரஸ் தலைமை மக்கள் விடயத்தில் தெளிவாக இருக்கிறது. முஸ்லிம் காங்கிரசின் பெயரை பாவித்து பாராளுமன்ற ஆசனத்தை பெற்றவர்கள் மக்களுக்கு செய்தவை ஒன்றுமில்லை. 

கடந்த ஏப்ரல் மாத குண்டுவெடிப்புக்கு பின்னர் எத்தனையோ பேர் நிலைகுலைந்துள்ளனர், அத்தனை பேர் தெளிவாகியுள்ளனர். மார்க்க விடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும். இறைவன் கூறியது போன்று இன்று அந்நியனை கொண்டு இஸ்லாம் போதிக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் சிங்கள எம்.பிக்களே இஸ்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்றார்.