முஸ்லிம் அரசியல்வாதிகள், இருக்கின்ற காலத்தையும் வீணடிக்கப் போகின்றார்களா?

 

(ஏ.எல்.நிப்றாஸ்)

பல வருடங்களுக்கு முன்னர் பதவியிழந்து, அரசியல் அதிகாரம் எதுவுமற்று தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் முன்னாள் அரசியல்வாதியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் நிறையச் சேவைகள் செய்தததாக அறிவேன்;. ஆனால் சமூகம் அவர் எதுவும் செய்யவில்லை என்பது போலதான் பேசிக் கொண்டிருந்தது. ஏனென்றால் முஸ்லிம்களின் முக்கிய அபிலாஷைகள் சிலவற்றை நிறைவேற்ற நினைத்துக் கொண்டிருக்கையில் பதவி பறிபோய்விட்டது.

அவருக்கு இன்னும் மக்களுக்கு நிறையச் சேவை செய்ய எண்ணமிருந்தது. இருப்பினும் எதிர்பாராத தருணத்தில் அரசியல் அதிகாரம் இழந்தமையால் அவற்றையெல்லாம் செய்ய இயலாமல் போய் விட்டது. ‘இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகள் அவ்வாறான மக்களின் அபிலாஷைகளை எல்லாம் கண்டு கொள்வதுகூட இல்லை, நம்மிடமும் அதிகாரம் இல்லாமல் போய்விட்டதே’ என்ற கவலை அவரை வாட்டிக் கொண்டிருந்தது ஞாபகத்தில் இருக்கின்றது.

இப்படி நிறைய முஸ்லிம் அரசியல்வாதிகள் அதிகாரமிழந்த பிறகு கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ‘பதவி இருந்த போது இதைச் செய்திருக்கலாமே, அதைச் செய்ய தவறி விட்டோமே’ என்று மனதுக்குள் எத்தனையோ பேர் குமுறிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் இந்தக் கவலையுடனேயே மரணித்தும் விட்டார்கள்.

இவ்வாறான கவலைப்பட்டு, மனதுக்குள் வேதனைப்படுவதற்கு இப்போது சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். தலைமை, அமைச்சு, எம்.பி. பதவிகள் தம்மிடம் இருக்கின்ற நேரத்தில் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான முக்கிய பிரச்சினைகளை தீர்க்காமல், தற்போது காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்ற எல்லா தலைவர்கள் மற்றும் தளபதிகளும் மேற்சொன்ன கவலையுடன்தான் தமது பிற்காலத்தைக் கழிப்பார்கள் என்று உள்மனது சொல்கின்றது.

‘முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினையில் ஒரு குறிப்பிட்ட விவகாரங்களைத் தீர்த்து வைத்தோம், இந்த சமூகத்தின் அரசியல் அபிலாஷையை நிறைவேற்றினோம், இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பங்கை உறுதிப்படுத்தினோம், தமது சமூகத்திற்கு பல வழிகளிலும் இழைக்கப்பட்டுள்ள அநியாயங்களில் ஒன்று இரண்டிற்காவது பரிகாரம் தேடிக் கொடுத்தோம், நமது ஆட்புலத்தை காப்பாற்றினோம், குறைந்தபட்சம் மக்கள் அளித்த வாக்குகளுக்காக மனச்சாட்சியுடனாவது நடந்து கொண்டோம் என்ற எந்தவிதமான திருப்தியும் இல்லாதவர்களாக 99 சதவீத முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது ஓய்வுகாலத்தை கழிக்கப் போகின்றார்கள் போலத் தெரிகின்றது.

பெரிய கைசேதம்

முற்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியுடன் நேரடியாக இணைந்து அரசியல் செய்தார்கள். பின்வந்த ஒரு சிலர் தமிழர் அரசிலோடும் உறவு கொண்டாடினர். அதற்குப் பிறகே தனித்துவ அடையாள அரசியல் எனும் தனிவழியில் முஸ்லிம்களின் அரசியல் (வடக்கு, கிழக்கில் இருந்து வியாபித்து) பயணிக்கத் தொடங்கியது.

ஆனால், முஸ்லிம்களுக்கு இனவாத நெருக்கடி, காணிப் பற்றாக்குறை போன்ற பல புதுப்புது நெருக்கடிகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கு மேலதிகமாக பல தசாப்தங்களாக புரையோடிப் போன எத்தனையோ பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன.

‘உரிமையை பெற்றுத் தருவோம்’ என்று கூறி முஸ்லிம் சமூகத்தின் மீட்பர்கள் போல மேடையில் தோன்றி காலகாலமாக வாக்குகளை சூறையாடுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளால் இப்படியான பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

தற்போது தட்டுத்தடுமாறி ஓடிக் கொண்டிருக்கின்ற மைத்திரி-ரணில் ஆட்சிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையப் போகின்றது. ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுடன், அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினைகளை தீர்;ப்பதற்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் முழுமூச்சாய் செயற்படவில்லை என்பது மிகப் பெரிய கைசேதமாகும்.

சரி, இப்போதாவது அதில் முக்கியமான சில பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக நேரத்தை செலவழிப்பதை விடுத்து, கோத்தபாயவை ஆதரிப்பதா, சஜித்தை ஜனாதிபதியாக்குவதா அல்லது முஸ்லிம் வேட்பாளரை களமிறக்குவதா என்பது பற்றி பேசுவதற்கும் சிந்திப்பதற்குமே காலத்தை செலவழித்துக் கொண்டிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகின்றது. ஆகவே, கடந்த காலங்களைப் போல முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதமிருக்கின்ற காலத்தையும் சமூகத்திற்கு பயன்படாத வகையில் வீணே கடத்தப் போகின்றார்களா என்ற கேள்விக்கு விடை காண வேண்டியிருக்கின்றது.

காலத்தை பயன்படுத்தல்

நேரத்தை உரிய முறையில் பயன்படுத்துதல் பற்றியும் காலத்தை வீணடித்தல் பற்றியும் உலக அறிஞர்கள் பல்வேறு அறிவுரைகளைச் சொல்லியிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி அனைத்து இனமக்களுக்குமே நேரம் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். இஸ்லாம் சமயமும் காலத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பல அடிப்படைகளிலும் வலியுறுத்தியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அல்லாஹ் (இறைவன்) புனித குர்ஆனில் பல இடங்களில் முக்கியமான விடயங்களை வலியுறுத்தும் போது காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் சத்தியமிட்டு அதனைக் கூறுகின்றான். இதுபோதாதென்று, ‘சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்தல் என்ற சமன்பாடு முஸ்லிம் அரசியல் பரப்பில் நீண்டகாலமாக ஒரு தாரக மந்திரம்போல கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கு பதவியும் அதிகாரமும் கிடைத்த காலத்தை சரியாகப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் எத்தனை பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கின்றார்கள்?
எது மீதம்?

பெருந்தேசியக் கட்சிகளுக்கு முட்டுக் கொடுத்தமை, அமைச்சுப் பதவிகளுக்காக சண்டை பிடித்தமை, பிரதியமைச்சுப் பதவிகளுக்காக காய்நகர்த்தியமை, தேசியப்பட்டியல் எம்.பி.க்காக பிடிவாதம் பிடித்தமை, யார் முஸ்லிம்களின் தலைவர் எனச் சண்டையிட்டமை என்பதைத் தவிர அதிக காலத்தை மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளை தீர்;ப்பதற்காக எத்தனைபேர்
முன்னின்றிருக்கின்றார்கள்?

எம்.பி. பதவிகளுக்குண்டான திர்வை விலக்குப் பத்திரங்கள் மற்றும் வாகனங்களைப் பெற்றமை, இணைப்பதிகாரிகளை நியமித்தமை, தமது அமைச்சில் கட்சிக் காரர்களுக்கு உயர் பதவி வழங்கியமை, அவர்களுக்கு வாகனம் கொடுத்தமை, எரிபொருளுக்கு நிதி கொடுத்தமை, ஒவ்வொரு ஊரிலும் கட்சி வளர்ப்பதற்கு உதவாக அமைப்பாளர்களை நியமித்தமை, ஊருக்கு இரு அணிகளை உருவாக்கியமை, பேஸ்புக் போராளிகளுக்கு தீனிபோட்டமை, தமக்கு தேவையான செல்வத்தை முடிந்தளவுக்கு சேர்த்துக் கொண்டமை என்பவற்றைத் தவிர, முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இப்பதவிகள் பாவிக்கப்பட்டுள்ளதா என்பதை தொப்பி அளவானவர்கள் சுய பரிசீலனை செய்து கொள்ளட்டும்.

அபிவிருத்தி அரசியலைப் பொறுத்தமட்டில் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கணிசமானோருக்கு தொழில்வழங்குதல், முஸ்லிம் சமூகத்திற்கு நீண்டகால அடிப்படையில் முதலீடாக அமையும் செயற்றிட்டங்கள் போன்றவற்றை சமூகம்சார் அபிவிருத்தி என்று குறிப்பிடலாமே தவிர, தமது அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தின் கிளை திறத்தல், சிலருக்கு தொழில்வழங்குதல் (அதில் சிலரிடம் தரகுக்கூலி பெறுதல்), குறுக்கு ஒழுங்கைகளுக்கு கொங்கிறீட் கொட்டுதல் போன்ற சின்னச்சின்ன வேலைகளை எல்லாம் பாரிய அபிவிருத்தி திட்டங்களாக காட்ட முனையக்கூடாது.

அபிவிருத்தி அரசியல் வேறு உரிமை அரசியல் வேறு. இவ்விரு அரசியலையும் மர்ஹூம் அஷ்ரப் சமாந்திரமாக முன்கொண்டு சென்றார். இன்று, ‘இரண்டும்கெட்டான்’ தன்மையான ஒருவித அரசியல் வியாபாரத்தையே பலர் சமூகத்தின் பெயரால் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த இலட்சணத்தில் முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு சிந்திக்க நேரமேது!?

ஆவணம் இல்லை

உரிமைசார் அரசியலின் ஊடாக இலங்கை முஸ்லிம்களின் அபிலாஷைகள், நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளை தீர்ப்பதில்லை என்று நாம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது, அப்படியான என்ன பிரச்சினை இருக்கின்றது? முஸ்லிம்கள் நன்றாகத்தானே இருக்கின்றது என்று ஒரு சில அரசியல்வாதிகளும் அவர்களது ‘கோயாபல்ஸ்’களும் கேள்வி கேட்க ஓடி வருவதை அனுபவத்தினூடாக கண்டிருக்கின்றோம்.

ஆகவே, இன்றிருக்கின்ற முஸ்லிம் எம்;.பி;.க்கள் மட்டுமன்றி செயற்பாட்டு அரசியலில் இருக்கின்ற 95 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள என்னவென்ற தெளிவு இல்லை என்பதே இது உணர்த்துகின்றது. நீண்டகால பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, குறைந்தபட்சம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ன என்பதை பட்டியலிட்டு ஆவணப்படுத்தி வைத்திருக்கின்ற அரசியல்வாதிகள் மூன்று நான்கு பேர் மாத்திரமே.

கேட்டால்…. தம்மை முஸ்லிம்களின் தலைவர்கள் தளபதிகள் என்பார்கள். அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர்கள் என்பார்கள். சிரேஷ்டமானவர்கள், அறிவாளிகள், சாணக்கியர்கள், எல்லாம் தெரிந்த வித்தகர்கள் என்று சொல்வார்கள்.

ஆனால், முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை பட்டியலிட்டு விபரியுங்கள் என்று கேட்டால், ஒரு அறிக்கையை சமர்ப்பியுங்கள் என்று கோரினால்…. வுpடைதெரியாத பள்ளிச் சிறுவன் போல முகத்தை பார்ப்பார்கள். அந்த விபரங்களை அதன்பிறகுதான் திரட்டத் தொடங்குவார்கள். யாருக்கு கோபம் வந்தாலும் இதுவே யதார்த்தமாகும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற மிகப் பிரதானமான பிரச்சினைகளில் இனவாதமும் இப்போதும் பயங்கரவாதமும் முக்கிய இடம்பெறுகின்றது தான். ஆனால் நீண்டகாலப் பிரச்சினை என்று வரும்போது காணிப் பிரச்சினையே முதன்மையானதாக சொல்லலாம். அத்துடன் இனவாதம், பயங்கரவாதம் பற்றி நிறைய எழுதியும் விட்டோம்.

அந்த வகையில் பார்த்தால், இலங்கையில் முஸ்லிம்களின் இன விகிதாசாரத்திற்கு அமைய நில உரிமை இல்லை. இப்பிரச்சினை நாட்டின் எல்லாப் பாகங்களிலும் காணப்படுகின்றது என்றாலும் வடக்கு,கிழக்கில் அதிலும் குறிப்பாக கிழக்கில் காணி உரிமைத்துவ விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக, பல்லாயிரக்கான ஏக்கர் காணிப் பிணக்குகளும் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாதுள்ளன.

காணிப் பிரச்சினை

கிழக்கில் முஸ்லிம்கள் சனத்தொகை அடிப்படையில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகும். உலக சமவாயச் சட்டங்களின் அடிப்படையில் பார்த்தால் சனத்தொகைப் பரம்பலின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு காணி கிடைக்க வழி இருக்க வேண்டும். ஆனால் சுமார் 5 சதவீதமான காணிகளே கிழக்கு முஸ்லிம்களுக்கு சொந்தமாக உள்ளன.

இன விகிதாசாரத்திற்கு அமைவாக காணிப்பங்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் வலியுறுத்துகின்ற சமகாலத்தில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையிலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் காணிகளுக்கு சட்டபூர்வ உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பல வருடங்களுக்கு முன்னமே பரிந்துரைத்துவிட்டது. ஆனால் எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை.

எனவே, இன விகிதாசாரப்படி கொடுக்கப்படாவிட்டாலும் நியாயமான அளவுக்காவது காணிகள் கிடைக்க வேண்டும். இதன் அர்த்தம் ஏனைய இனங்களிடம் இருந்து காணிகளை பறித்துக் கொடுப்பது அல்ல. காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதுடன், அரச காணிகளை சட்ட முறைப்படி வழங்க ஏற்பாடு செய்வதுமாகும்.
இதேவேளை, காணிப் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளும் வடக்கு கிழக்கில் இருக்கின்றன.

இவ்விரு மாகாணங்களிலும் சுமார் 2 இலட்சம் ஏக்கர் தொடர்பான காணிப் பிரச்சினைகள் உள்ளன. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மிகப்பிந்திய மிகச் சரியான தரவுகள் இல்லை என்றாலும், சுமார் 75ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிப் பிரச்சினைகள் உள்ளதாக ஒரு தகவல் கூறுகின்றது.

ஒரு பதச்சோறாக அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், வட்டமடு, வேகமாகம், கிரான்கோவை, கிரான்கோமாரி. ஒலுவில் அஷ்ரப் நகர், பொன்னன்வெளி, கீத்துப்பத்து பாவாபுரம், அம்பலம் ஓயா, ஹிங்குராணை ஆகிய இடங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.

பொன்னன்வெளி, அம்பலம்ஓயா, கீத்துப்பத்து, லகுகலை, பாலையடிவட்டை கிரான்கோமாரி தொடக்கம் நுரைச்சோலை, அம்பலத்தாறு, ஓமரங்காய், சேனைக்கண்டம், சேலவட்டை, வேலாமரத்துவெளி, சியத்தரவட்டை, பொன்னன்வெளி என முஸ்லிம்களின் பல்லாயிரக்காணக்கா ஏக்கர் தொடர்பான காணிப் பிணக்குகளின் பட்டியல் நீள்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சுமார் 22 கிலோமீற்றர் நிலப்பரப்பிற்குள், சனத்தொகை அடிப்படையில் சிறுபான்மையாக வாழ்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்கு கூட அவர்களது சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் இல்லை. மறுபுறத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட, பிரகடனப்படுத்தப்பட்ட, பறிபோன காணிகள் பற்றிய பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இம்மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. வாகரை,, கள்ளிச்சை, புணானை மேற்கு, வாகனேரி. காரமுனை போன்ற கிராமங்களில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகன் இன்னும் தீர்க்கப்படவில்லை.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்திலும் 42 வீதமாக காணப்படுகின்ற முஸ்லிம்களின் இனப் பரம்பலுக்கு ஏற்றாற்போல் காணிகள் இல்லை. கிண்ணியா, பதவிசிறிபுர, குச்சவெளி, மூதூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் காணிப்பற்றாக்குறை காணப்படுவதுடன் கரிமலையூற்று தொடங்கி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காணிப் பிரச்சினையுள்ளது.

இதேபோன்று, வட மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு பல்லாயிரம் ஹெக்டேயர் கணக்கிலான காணிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான காணிப் பிரச்சினை இதில் முதன்மையானது எனலாம். இது தவிர ஆக்கிரமிப்புக்கள், சுவீகரம், வர்த்தமானி ஊடாக பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப் படுத்தப்பட்டமை, போன்ற காரணங்களாலும் வடமாகாண முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இவையும் தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரச தேவைக்காகவும், வனவளம், இராணுவ முகாம், தொல்பொருள் மையங்கள், புனித வலய பிரகடனம் என்ற பெயரிலும், அதேபோன்று பிற சமூகங்களால் கையகப்படுத்தப்பட்டும் தமது பூர்வீக காணிகளை உரிமை கொண்டாட முடியாத நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப காணிகளை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே இந்தக் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடுபடுவதுடன், இனவிகிதாசாரப்படி காணிகள் கிடைக்க குரல் கொடுக்கவும் வேண்டும்.

ஏனைய பிரச்சினைகள்

இதேவேளை, அக்கரைப்பற்று நுரைச்சோலை கிராமத்தில் சவூதி அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான 500 வீட்டுத் திட்டத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். மாயக்கல்லி தொடக்கம் கரிமலையூற்று வரை முஸ்லிம் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு தீர்வு காணப்பட வேண்டும். பள்ளிவாசல்கள், புனித குர்ஆன் உள்ளடங்கலாக முஸ்லிம்களின் இன மத அடையாளங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதை உடன் நிறுத்த வேண்டும். ஒலுவில் கடலரிப்பு போன்ற வாழ்வியல் பிரச்சினைகளுக்கு வாக்குறுதிகள் மட்டும் தீர்வாகாது.

திகண, அம்பாறை, அளுத்கம மற்றும் குருணாகல் கலவரங்களால் உயிர், உடமைகளை இழந்த முஸ்லிம்களுக்கு முழுமையான நஷ்டஈடு உடன் சென்று சேர வேண்டும். நாட்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டால் முஸ்லிம்களின் என்னென்ன விடயங்களை அதில் உறுதிப்படுத்த வேண்டும் என்ற வரைபை அரசாங்கத்திடமும் களமிறங்கும் வேட்பாளர்களிடமும் முன்வைக்க வேண்டும். இப்படி இன்னும் எத்தனையோ காரியங்களைச் செய்யாமல்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.

இவ்வாறான, முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளில் முக்கியமானது எதனையாவது இந்த அரசாங்கத்திடம் முன்வைத்து மீதமிருக்கின்ற காலத்தில் பெற்றுக் கொள்ள முஸ்லிம் தலைவர்களும் தளபதிகளும் முன்வர வேண்டும்.

அதில் ஒன்றிரண்டைத்தானும் செய்து முடிக்காமல், யாரும் முஸ்லிம் சமூகத்திடம் வாக்குக் கேட்டு வரக் கூடாது.

மீதமாக இருக்கின்ற காலத்தையும் வீணடித்தால், உங்களது அரசியல் வாழ்க்கைக்குப் பின்னரான அந்திம காலத்தில் உங்களது மனச்சாட்சியே உங்களைக் கொன்று விடும் என்பதையிட்டு பயந்து கொள்ளுங்கள்.

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசாி 25.08.2019)