கல்முனையின் எல்லையை விட்டுக்கொடுக்க முடியாது என்கின்றார் YLS . ஹமீட்

கல்முனையின் எல்லையை விட்டுக்கொடுக்க முடியாது
=======================

வை எல் எஸ் ஹமீட்

கல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது.

கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது.

அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது.

இலங்கையிலேயே முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பெருநகரம் இதுவாகும். இதனால்தான் இது முஸ்லிம்களின் தலைநகரமென்றும் தென்கிழக்கின் முகவெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது.

பிரச்சினை என்ன?
————————-
கல்முனையில் எதுவுமே கேளாத முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு பதட்டம்? ஏனெனில் கல்முனையின் ஒரு பிரதான பாகத்தைத் தமிழர்கள் கேட்கிறார்கள். அதுதான் பிரச்சினை. ஏன் கேட்கிறார்கள்? இங்குதான் நமது கவனம் ஆழப்படுத்தப்பட வேண்டும்.

கல்முனைக்கு அருகே பாண்டிருப்பு, மணற்சேனை, சேனைக்குடியிருப்பு, திரவந்தியமடு என்ற நான்கு தமிழ் கிராமங்கள் உள்ளன. இவற்றில் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பைத்தவிர ஏனையவை மிகவும் சிறிய கிராமங்கள். மேலும் பெரிய நீலாவணையில் ஒரு சிறிய தொகைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

இக்கிராமங்கள் ஒன்றோடொன்று நிலத்தொடர்பற்றவை. காரணம் இவற்றிற்கிடையில் முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன.

இக்கிராமங்களை இணைத்து அவர்களுக்கொரு பிரதேச செயலகம் தேவை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நிர்வாகப்பிரிவின்கீழும் தாங்கள் வாழக்கூடாது; என்ற இனவாத மனப்பாங்குதான் இத்தேவை எழுவதற்கான காரணமானபோதிலும் அதை வழங்குவதில் முஸ்லிம்களுக்கு ஆட்சேபனை எதுவும் கிடையாது.

அவ்வாறாயின் என்ன பிரச்சினை?
——————————————

கல்முனைக்கு வெளியேயுள்ள இவ்வூர்களை இணைத்து உருவாக்கப்படுகின்ற செயலகப்பிரிவுக்கு முத்தாய்ப்பாக முஸ்லிம்களின் தலைநகரான கல்முனையின் பிரதான பகுதிதேவை.

அதாவது கல்முனைக்கு வெளியேயுள்ள நிலத்தொடர்பற்ற சில தமிழ்க்கிராமங்களை இணைத்து உருவாக்கப்படக் கோருகின்ற செயலகப்பிரிவை அலங்கரிக்க முஸ்லிம்களின் இதயத்தின் ஒரு பெரும்பகுதியை உடைத்து அவர்களுக்கு கொடுக்கவேண்டும். எஞ்சிய பாதியை ( குடியிருப்புப்பகுதி) முஸ்லிம்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக்கோரிக்கையை நியாயப்படுத்த அவர்கள் முன்வைக்கும் வாதம் என்ன?
———————————————————

இரண்டு வகையான வாதங்கள். ஒன்று; கல்முனையின் வர்த்தகமையப்பகுதியின் கிழக்குப்புறத்தே சுமார் ஐயாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அதேவாறு கணிசமான முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்; என்றபோதிலும் அத்தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக மொத்த வர்த்தக கேந்திர மையத்தையும் அவர்களுக்குத் தாரைவார்க்க வேண்டும்.

இதற்கு சமூக நீதிக்காக போராடும் தமிழ்த்தலைவர்களும் ஆதரவாகும். ஏனெனில் 12% வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சிப் பிரதேசம் தேவை; முஷ்லிம்களுக்கு ஒரு மாநகரம் கூட இருக்கக்கூடாது; என்ற கொள்கையில் அவர்கள் எல்லாம் உறுதியாக இருக்கிறார்கள்.

அடுத்த வாதம்: இதுதான் இவர்களது பிரதான வாதம்
————————————————————-
அதாவது கல்முனையின் எல்லை 1897ம் ஆண்டின் அரச வர்த்தமானியின்படி வடக்கே தாளவட்டுவானும் தெற்கே சாய்ந்தமருதுமாகும். இந்த எல்லையின் வடக்குப் பக்கம் முஸ்லிம்களின் பிரதான வர்த்தக மையைமும் தெற்குப்பக்கம் முஸ்லிம் மக்களின் குடியிருப்பும் இருக்கின்றது.

மத்தியில் உள்ள வீதி தரவைப்பிள்ளையார்வீதி என அழைக்கப்பட்டு தற்போது கடற்கரைப்பள்ளிவீதி என அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இவ்வீதியில் ஒரு சில தமிழ்க்குடும்பங்கள் இருந்தன. பிரதானவீதியின் மறுபக்கம் தரவைப்பிள்ளையார் கோயில் இருக்கின்றது. அக்காலத்தில் அதிகாரிகள் தமிழர்களாகவே இருந்ததனால் இப்பெயரை இலகுவாக சூட்டிவிட்டார்கள்.

இவர்களது வாதம் இந்த தரவைப்பிள்ளையார் கோயில்தான் கல்முனையின் எல்லை. கல்முனைக்குடி என்பது வேறான தனியூர். 1946ம் ஆண்டு பட்டினசபை உருவானபோது கல்முனையோடு தொடர்பற்ற வேறு ஊரான கல்முனைக்குடியை கல்முனையுடன் இணைத்து கல்முனையின் எல்லையை சாஹிறா கல்லூரி வீதிக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள்.
எனவே, கல்முனை தரவைக் கோயில்வீதியுடன் முடிவடைகிறது. அங்கு ஐயாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள்; எனவே கல்முனை எங்களுக்கு சொந்தமானதாகும்; என்பதாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினாலும் அதற்கான எந்த ஆவணரீதியான நிரூபணமும் அவர்களிடம் இல்லை. இருக்கவும் முடியாது. ஏனெனில் 1897ம் ஆண்டு என்பது 1946ம் ஆண்டைவிட 49 ஆண்டுகள் முந்தியதாகும். அதாவது 1897ம் ஆண்டிலிருந்து சாஹிறாகல்லூரிவீதி கல்முனையின் எல்லை என்று அரச வர்த்தமானி சொல்லும்போது 1946ம் ஆண்டுதான் கல்முனைக்குடி கல்முனையுடன் சேர்க்கப்பட்டது; என்ற வாதம் எவ்வாறு எடுபடமுடியும்?

கல்முனையுடன் கல்முனைக்குடிக்கு தொடர்பில்லையாயின் எவ்வாறு கல்முனைக்குடி எனப்பெயர் வந்தது?

உண்மையில் கல்முனையின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வடக்குப் பகுதியை வர்த்தக கேந்திர நிலையமாக்கினார்கள். மக்கள் வாழும்பகுதி என்பதனால் பேச்சு வழக்கில் அப்பகுதி கல்முனைக்குடியிருப்பு என அழைக்கப்பட்டது.

காலப்போக்கில் தமிழ் அதிகாரிகள் குறிச்சி விடயத்தில் கல்முனைக்குடி என்ற சொல்லை உட்புகுத்தினாலும் அதுவும் கல்முனையின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது.

எனவே, கல்முனையின் எல்லை தரவைக்கோவில் வீதி என்பதற்கு எதுவித சட்டபூர்வ ஆதாரமுமில்லாத நிலையில் ஏதோ ரயில்வே திணைக்களம் “கல்முனை” என்ற பெயர்ப்பலகையை தரவைக்கோயில் வீதியில் நட்டார்களாம்; அதனை முஸ்லிம்கள் பிடுங்கிக்கொண்டுபோய் சாஹிறா வீதியில் வைத்தார்களாம்; என்று கதை சொல்கிறார்கள்.

1897ம் ஆண்டிலிருந்து எல்லை சாஹிறாவீதி எனும்போது முஸ்லிம்கள் பெயர்ப்பலகையை பிடுங்கத்தானே செய்வார்கள் பிழையான எல்லையில் நட்டால்.

எனவே, அவ்வாறு பிடுங்கி நட்டது உண்மையானால் அதுவும் சாஹிறா வீதிதான் கல்முனையின் எல்லை என்பதற்கு ஓர் அத்தாட்சியாகும். ரயில்வே திணைக்களம் எல்லை தீர்மானிப்பதற்குப் பொறுப்பான நிறுவனமா? முதலில் இது உண்மையா எனத் தெரியாயது. வாய்மூலக் கதையைத் தவிர ஆதாரம் எதையும் அவர்கள் காட்டவில்லை.

உண்மையென வைத்துக்கொண்டாலும் சிலவேளை தமிழ் ரயில்வே அதிகாரிகள் அவ்வாறு செய்திருக்கலாம். அப்பிழையை, இவர்கள் கூற்றுப்படி அப்போதே முஸ்லிம்கள் பெயர்ப்பலகை பிடுங்கி சாஹிறாவீதியில் நட்டதன்மூலம் திருத்திவிட்டார்கள். எனவே, கல்முனையின் எல்லை உத்தியோகபூர்வமாக 1897ம்ஆண்டிலிருந்து தெற்கே சாஹிறாவீதி, வடக்கே தாளவட்டுவட்டுவானாகும்.

இதற்கு மாற்றமாக உரிமைகோருவதாக இருந்தால் 1897ம் ஆண்டிற்குமுன் வித்தியாசமான எல்லை இருந்தது; என்பதற்கான உத்தியோகபூர்வ அரச ஆவணங்கள் காட்டப்படவேண்டும். காட்டுவார்களா?

ஒருவாதத்திற்கு அவ்வாறு இருக்கின்றது; என்று வைத்துக்கொண்டாலும் 120 வருடங்களுக்குமேல் உத்தியோகபூர்வமாக தற்போதைய எல்லை இருக்கும்போது அதை மாற்றமுனைவது ஏற்புடையதா?

அவ்வாறு ஆதாரம் எதுவுமில்லாமல் கதைகளைச் சொல்லி முஸ்லிம்களின் தலைநகரை அபகரிக்க அனுமதிக்கமுடியுமா?

மட்டுமல்ல, இங்கு இன்னும் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். ஒன்று: 1897ம் ஆண்டு வெள்ளையராட்சி சாஹிறாக்கல்லூரிவீதியை கல்முனையின் எல்லையாக வர்த்தமானிமூலம் வரையறுத்திருக்கின்றது; என்றால் அதற்குமுன் நீண்டகாலமாக அதுதான் கல்முனையின் எல்லையாக நடைமுறையில் இருந்திருக்க வேண்டும். அந்த எல்லையைத்தான் அரசு பிரகடனம் செய்திருக்க வேண்டும்.

இரண்டு: அன்று அரச உயரதிகாரிகளாக தமிழர்களே அதிகமாக இருந்தார்கள். எனவே, நிர்வாகரீதியில் பெரும்பான்மையான தமிழ் அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராகவா எல்லைபோட்டார்கள்? அன்றைய யதார்த்தத்தைத்தானே அவர்கள் எல்லையாக வரையறை செய்திருக்க வேண்டும்.

எனவே, கல்முனையின் எல்லை கேள்விக்கப்பாற்பட்டது. ஆகக்குறைந்தது உத்தியோகபூர்வமாக 120 ஆண்டுகளுக்குமேல் இருந்துவருவது. கல்முனைக்கு வெளியேயுள்ள ஊர்களை இணைத்து ஒருவாக்கப்படும் ஒரு செயலகத்திற்கு 5000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கல்முனையின் பெரும்பகுதியை, பிரதான பகுதியை ஏன் தாரைவார்க்க வேண்டும்? அது எந்தவகையில் நியாயம்? இதை ஏன் தமிழ்த்தலைவர்கள் புரிந்துகொள்ளமுடியால் இருக்கிறார்கள்? அல்லது புரிந்தும் இனவாதமா?

முஸ்லிம்கள் கல்முனையை எந்தவொரு முஸ்லிம் ஊருடனும் இணைத்துக்கேட்கவில்லை. அதேநேரம் கல்முனையை உடைத்து எந்தவொரு தமிழ் ஊருக்கும் அல்லது செயலகத்திற்கோ, சபைக்கோ தாரைவார்க்கவேண்டிய தேவையுமில்லை.

கல்முனை, கல்முனையாக இருக்கட்டும். கல்முனைக்கு வெளியேயுள்ள ஊர்களை இணைத்து அவர்களுக்குத் தேவையான செயலகத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்.

கல்முனையை கல்முனையாக வைத்திருக்க சக்தியில்லாமல்தான் நமது அரசியல் வாதிகள் போராடுகிறார்கள் இவ்வளவு காலமாக அனைத்து நியாயங்களும் நமது பக்கம் இருந்தபோதும்.

சில தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக எதுவித நியாயமுமற்றமுறையில் கல்முனையை உடைத்து கல்முனைக்குவெளியேயுள்ள ஊர்களுடன் இணைப்பதற்காக எதிர்க்கட்சியில் இருக்கும் த தே கூ இனது கோரிக்கை அவ்வளவு பலமாக இருக்கிறது

கல்முனையை யாருடனும் இணைக்கவேண்டாம்; விட்டுவிடுங்கள்; என்ற முஸ்லிம்களின் நியாயமான நிலைப்பாட்டை உறுதிப்படுத்த ஆட்சிப்பங்காளிகளான முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது.

இந்நிலையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக எத்தப்பக்கத்தாலாவது விட்டுக்கொடுத்து பிரச்சினையை முடித்துவிட சிலர் துடிப்பதுபோலும் தெரிகிறது.

நீங்கள் அமைச்சுப் பதவியெடுப்பதற்காக கல்முனையை கூறுபோட்டுக்கொடுத்துவிடாதீர்கள். கல்முனையை தனியாக எடுப்பதற்கு உங்களால் முடியவில்லை; என்றால் இருப்பதுபோல் இருக்க விடுங்கள். இன்ஷாஅல்லாஹ், அடுத்த தேர்தலின்பின் பாராளுமன்றம் செல்பவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

உள்ளூராட்சிசபை
————————-
மறுபுறம் பிரதேச செயலகத்தைப் பிரித்துத் தாருங்கள். உள்ளூராட்சி சபையில் சாய்ந்தமருதுவுக்கு தனியாக கொடுத்துவிட்டு நாம் ஒன்றாக இருப்போம்; என்றும் அவர்கள் கூறுவதாக அறியமுடிகிறது. சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை; என்பார்கள்.

அவர்கள் பிரித்துக்கேட்டால் பிரித்துக்கொடுக்க வேண்டும். இணைந்திருப்போம்; என்றால் இணைந்திருக்க வேண்டுமா? அவ்வாறென்றால் சாய்ந்தமருதுக்கு எப்போதோ தனியாக கொடுத்திருக்கலாமே!

அவர்களுக்குத் தெரியும்; சிலவேளை அடுத்த தேர்தல் பழைய முறையில் நடந்தால் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிகின்றபோது அவர்கள் ஒன்றுபட்டு வாக்களித்து ஒரு வாக்கு அதிகமாகப் பெற்றாலும் சபையைக் பைப்பற்றிவிடலாம்; என்பது.

சிலவேளை அது சாத்தியப்படவில்லையானால் அதன்பின் தனியாக உள்ளூராட்சி சபை கேட்பார்கள். அப்பொழுது மீண்டும் தரவைவீதி பிரச்சினையை கிழப்புவார்கள். இவர்களின் எந்தத் தந்திரத்திற்கும் நாம் பலியாக முடியாது.

கல்முனையைத் தனியாக விட்டுவிட்டு ஏனையவற்றை நியாயமாகப் பிரித்து மருதமுனை, நற்பிட்டிமுனை மக்களுக்கு ஒரு செயலகமும் தமிழர்களுக்கு ஒரு செயலகமும் வழங்குவதோடு, அப்பிரிவுகளுக்கு தனியான உள்ளூராட்சி சபையும் சாய்ந்தமருதுக்கான சபையையும் ஒருங்கே வழங்கி இப்பிரச்சினைக்கு ஒரேதடைவையில் தீர்வுகாண வேண்டும்.

எனவே, கல்முனைக்கு எதுவும் வேண்டாம். கல்முனைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ( அபிவிருத்தி வேறுவிடயம்)

கல்முனைக்கு அடுத்தவர்கள் பிரச்சினை தராதீர்கள். கல்முனையை கல்முனையாக இருக்க விட்டுவிடுங்கள்.