எனது சமூகத்தை அடகுவைத்து என்னை அமைச்சராக அலங்கரிக்க வேண்டிய தேவை எனக்கில்லை , ஜெயபாலனுக்கு பதில் சொன்னார் ஹரீஸ்

நான் ஏன் பதவியேற்கவில்லை,
நடிகர் ஜெயபாலன் ஐயாவுக்கான பதில்!

தமிழ், முஸ்லிம் நல்லெண்ண உறவிலும், எமது இரு சமூகத்திற்கான எனது அரசியல் பணியிலும் அக்கறையுடைய உங்களுடைய வேண்டுகோளுக்கு எனது பணிவான பதில்களை சமர்ப்பிக்கின்றேன் ஐயா!

 

நான் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிர்ச்சி தந்ததாக நடிகரும் எழுத்தாளருமான ஜெயபாலன் ஐயா கூறியுள்ளீர்கள்.

எங்கள் சமூகத்தின் தலைவர்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இனவாத அலையில் எங்கள் சமூகம் மூழ்கி இறந்து விடும் எனும் அச்சத்தின் உச்சத்தால் கூட்டு இராஜினாமா எனும் முடிவை நான் வழிமொழிய எல்லோரும் ஆமோதித்து அந்த முடிவை இறுதிமுடிவாக எட்டினோம். அத்தகைய நிலைபாடு அன்று அவசரமாக எடுக்காமல் விட்டிருந்தால் இன்று எமது நாடு மீண்டும் உதிரம் எழுதிய காவியமாக மாறியிருக்கும்.

எனது முடிவால் எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் கறையாகி விடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள் என கேட்டுள்ளீர்கள்.

பாலகனாக இருந்த நாள் முதல் இன்றுவரை ஒன்றாக பிணைந்து ஒரே வீதியில் உறவாடி தமிழ் உறவுகளை மதித்து பழகியவன் நான். எனது அமைச்சரவை நிதி ஒதுக்கீடு முதல் என் பிரதேச அரசியல் உரிமை வரை சகோதர தமிழ் மக்களின் பங்குகளை சரியாக பிரித்து, புரிந்துணர்வு கலந்து வழங்கிய ஏடுகள் இன்றும் ஆதாரமாக இருக்கிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அண்ணன் காத்தமுத்துவை பிரதி மேயராக்கிய சம்பவம் முதல் இந்த வருடம் செய்து முடிக்கப்பட்ட நவீன மின்விளக்கு அலங்காரம் வரை அதன் தொடர்ச்சியாகவே எஞ்சியுள்ளது.

நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள். என்கிறீர்கள்

அதனை நான் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் எனது சமூகத்தை அடகுவைத்து என்னை அமைச்சராக அலங்கரிக்க வேண்டிய தேவை எனக்கில்லை என நினைக்கிறேன். அமைச்சர் பதவி எடுப்பதை விட போராட்ட களத்தில் திடமாக போராடி உரிமைகளை மீட்டெடுக்க விரும்புகிறேன்.

அமைச்சை விட பாதிக்கப்பட்டு அநாதரவாக இருக்கும் என் சமூகம் கனதியானது. எனது சக்தியினால் முடிந்த பல சேவைகளை தொடர்ந்தும் நான் செய்துகொண்டே இருக்கிறேன்.எனது பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் ஒளிமயமாக்க சிறிய தடைகள் பெரிதாகி நிற்கிறதாக உணர்ந்தாலும் அது விரைவில் நீங்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள் என்கிறீர்கள்.

எனது இந்த விடுதலை இயக்கம் முஸ்லிங்களின் உரிமைகளை போராடி வெல்ல உருவானது. சறுக்கல்கள் இருக்கிறது என்பதனால் அதுவே உண்மையாகிடாது. காலம் கனிந்து விடியல் உதிக்கும். ஆறுதலினால் சாதிக்க முடியும் என்பது ஜாம்பவான்கள் நிரூபித்து சென்ற பாதை. அதில் என் பாதங்களை ஊன்றி பதித்துள்ளேன். தலைவர் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் நான் எப்போதும் நேராகவே பயணிக்கிறேன். எனது ஆலோசனைகள், கருத்துக்களை பிரதித்தலைவராக எப்போதும் முன்வைப்பதில் நான் பின் நிற்பதில்லை.

பெரும் தலைவர் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் எங்களை சரியாக புரிந்து புடம் போட்டுள்ளார் என நம்புகிறேன். கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து ஏனைய முஸ்லிம் கட்சிகளுடனும் பேசி கட்சியை முஸ்லிம் கூட்டமைப்பாக மேம்படுத்த உழையுங்கள் எனும் உங்கள் ஆலோசனையே என் மக்களின் கனவும், தாகமுமாக இருக்கிறது. அது மெய்ப்படும் நாள் அண்மித்து வருவதாக உணர்கிறேன். கடந்த கால சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமை எனும் குடையின் கீழ் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் அது நீடித்து உங்கள் ஆசை மட்டுமல்ல எமது நாட்டு முஸ்லிங்களின் கனவும் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கையாக மலர்ந்துள்ளது. அதுவே இப்போதைய தேவையாகவும் உள்ளது.
.
கல்முனைத் தாயின் மூன்று பிள்ளைகளான கல்முனை, சாய்ந்தமருது முஸ்லிம்களுடனும் கல்முனை வடக்கு தமிழர்களுடனும் சமரசம் செய்து கொள்ளுங்கள் என்கிறீர்கள்.

நான் அவர்களுடன் தோழமையுடன் பழகும் ஒருவன். தொப்புள்கொடி உறவுகளுடன் சண்டையிட்டு ஆனபலன் எதுவுமில்லை. சிறந்த வர்த்தகர்களின் ஒருவராக இருந்த என் தந்தை என்னை சட்டத்தரணியாக அழகு பார்த்துள்ளார். அரசியலுக்கு நான் உழைக்க வரவில்லை. என்னுடைய கல்முனை மக்களுக்கும், இலங்கை முஸ்லிங்களுக்கும் பாதிக்கப்படும் தமிழ் மற்றும் மலையக மக்களுடைய உரிமைக்குரலாகவே நான் என்னுடைய அரசியல் பயணத்தை வழிநடத்தி செல்கிறேன்.

முஸ்லிம்களின் கனவான அகண்ட தென்கிழக்கு மாகாணத்துக்கான போராட்டத்தை முன்னெடுங்கள். நாங்களும் தமிழர்களை திரட்டி துணை வருகிறோம். எனும் உங்கள் செய்தி இனிமையாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது. இப்படியான செய்திகளை உங்களை போன்ற புத்திஜீவிகள் முன்வந்து முன்மொழிவதில் சந்தோசமாக இருந்தாலும் சில அரசியல் அனாதைகளின் நிலைப்பாடுகள் கவலை தருகிறது.

இன்ஸா அல்லாஹ் அந்த பயணத்தில் எப்போதும் உறுதியுடன் பயணிப்போம் உங்களை போன்றவர்களின் உதவியுடன்.

நன்றி

உங்கள் தம்பி
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் (பா.உ.)
பிரதி தலைவர், ஸ்ரீ.ல.மு.க.
20.07.2019

 

An appeal to Honorable H. M. M. Harees
மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு வேண்டுகோள்.
– வ.ஐ.ச.ஜெயபாலன்
.
மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு. தாங்கள் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிற்ச்சி தருகிறது. அத்தகைய நிலைபாடு எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு கறையாகிவிடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள். நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.
.
ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள். கட்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து என்னைய முஸ்லிம் கட்ச்சிகளுடனும் பேசி கட்ச்சியை முஸ்லிம் கூட்டமைப்பாக மேம்படுத்த உழையுங்கள். இது உங்கள் கடமை.
.
கல்முனைத் தாயின் மூன்று பிள்ளைகளான கல்முனை, சாய்ந்தமருது முஸ்லிம்களுடனும் கல்முனை வடக்கு தமிழர்களுடனும் சமரசம் செய்துகொள்ளுங்கள். அமைச்சராகி கல்முனையின் மூன்று சகோதரகளுக்கும் நற்பணி ஆற்றுங்கள். முஸ்லிம்களின் கனவான தென்கிழக்கு கரையோர மாகாணத்துக்கான போராட்டத்தை முன்னெடுங்கள். நாங்களும் தமிழர்களை திரட்டி துணை வருகிறோம். இதுதானே உங்கள் கனவு.
.
நீங்கள் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனையின் மூன்று சகோதரர்களையும் சக வாழ்வால் இணைக்கவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.