அன்புடன் பஷீருக்கு ,எமது மக்களுக்காக நான் சிதைந்து போவதனையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

அன்புடன் சகோதரர் பஷீர் சேகுதாவுத் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்….

தங்களின் என் மீதான அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி செலுத்துகிறேன்.

தங்களின் கருத்துக்களில் உண்மைகளை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், தங்களின் சிந்தனைகளோடு என்னால் ஒத்துப்போக முடியாத விடயங்களையும், தங்களின் நம்பிக்கையில் இருந்து வேறுபடுகின்ற எனது நம்பிக்கை (ஈமான்) காரணமாக மேலெழுகின்ற சில விடயங்களையும் குறிப்பிட வேண்டிய அவசியம், எனக்கான ஆலோசனையினை பகிரங்கமாக தாங்கள் பதிவிட்டுள்ளதனால் எனக்கும் ஏற்பட்டுள்ளது.

கடந்த இருபது வருடங்களிற்கும் மேலாக, அரசியல் கள செயற்பாடுகள் மூலமாகவும், சமூகம் சார் செயற்பாடுகளுடாகவும் நேரடியாக எமது மக்களுக்காக செயற்பட்ட அனுபவம் எனக்கிருக்கிறது.

கடந்த சில நாட்களாக இராணுவ உடை தரித்தோரால் பொது மக்கள் தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தப்பட்ட பல சம்பவங்கள் எனது கவனத்திற்கு வந்தது.

தாக்குதலுக்குள்ளானவர்களில் நான் அறிந்த பலர் இருந்தனர். தாக்குதல்களும் தொடராக நடைபெற்றது. எமது பிரதேசத்தில் இராணுவத்தினர் தொடர்பான பிழையான பொது அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது. அதேவேளை தாக்கப்பட்டவர்களும் சட்டத்திற்கு முறனாக தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியது.

இருந்தபோதிலும், இவ்விடையம் தொடர்பான எனது பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் இன்று அக்கரைப்பற்று பொலிஸில் இராணுவத்தினருக்கும் எனக்குமிடையிலான கலந்துரையாடல் மிகவும் சுமூகமாக நடைபெற்றது. அவர்கள் தரப்பிலான தவறுகள் என்னால் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டப்பட முடியும் என்பது புரிந்து கொள்ளப்பட்டு, இராணுவத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு மக்களுடன் சுமூகமாக தங்களது கடமைகளை மேற்கொள்வது என்ற உடன்பாடுகளோடு அக்கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது.

என்னால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடென்பதும் அது தொடர்பான முகநூல் பதிவென்பதும், குறித்த செய்தி, இராணுவ மேலிடத்திற்கு தெரிவிக்கப்படவேண்டும் என்பதன் காரணமாகவேயன்றி தனிப்பட்ட பிரபலம் தேடிக்கொள்வதற்கானதல்ல. இவ்விடத்தில் சிங்கள இராணுவம், சிங்கள பொலிசார்; என்ற தங்களின் சொல்லாடலுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதனை தெரியப்படுத்துகிறேன்.

முஸ்லீம்கள் செறிவாக வாழும் எமது பிரதேச இளைஞர்களின் உணர்வு தொடர்பில் நான் அறிவேன். போக்குவரத்து பொலிசார் அதிக கெடுபிடிகளுடன் செயற்பட்டதற்கே அவர்கள் மீது கல்லெறித் தாக்குதல் நடாத்திய பல சம்பவங்கள் கடந்தகாலங்களில் பதிவாகியுள்ளது.

எவ்வாறு ஆயுதக்கலாசாரத்தில் ஈர்க்கப்பட இருந்த இளைஞர்களை முஸ்லிம் காங்கிரஸின் வரவு தடுத்து நிறுத்தியதோ அது போன்று, எமது இளைஞர்களை தூண்டி வன்முறைக்கிழுத்து பெரும் அத்துமீறலை எம்மீது கட்டவிழ்த்து விடும் நோக்கம் இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இருக்கலாம் என்ற அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களை சட்டரீதியாக செயற்பட தூண்டுவதும்கூட எனது முகநூல் பதிவுக்கு காரணமாகும்.

அதேவேளை நான் தௌஹீத் இயக்க உறுப்பினர் என்ற விடயம் உண்மை என்பதான உங்கள் கருத்து தவறானது. நான் எந்த தௌஹீத் இயக்கத்தின் உறுப்புரிமைக்கும் சொந்தக்காரனல்ல. ஆனால், தௌஹீத் என்ற ஓரிறைக் கொள்கை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்பதும், அதனை ஏற்றுக் கொள்ளாத யாரும் முஸ்லிமாக முடியாது என்பதும், அல்குர்ஆனும், நபிகளாரின் வாழ்க்கை முறையும் இஸ்லாத்தின் அடிப்படைகள் என்பதும், நபிகளாரின் தோழர்கள் அல்குர்ஆனையும், நபிகளாரின் உபதேசங்களையும் எப்படி புரிந்து செயற்பட்டார்களோ அவ்வாறு புரிந்து செயற்பட வேண்டும் என்பதும், ஒரு மனிதனுக்கு பிறப்பும் இறப்பும் ஒரு முறைதான் என்பதும் எனது ஈமானாகும். எனது நம்பிக்கையில் ஒருவேளை உங்களுக்கு மாற்றமான நம்பிக்கை(ஈமான்) இருக்கலாம்.

பாலமுனை பிரதேசத்தில் சுமார் 500 இளைஞர்கள் தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்றானின் வகுப்பில் கலந்து கொண்டதான தங்களின் குறிப்பு சரியானதாக இருக்கும் என்று நான் கருதவில்லை. இருந்தபோதும் இவ்வாறான செய்தியை தாங்கள் பகிரங்கமாக பதிவிட்டமையானது எமது சமூகத்துள் அச்ச உணர்வை மேலோங்கச் செய்யும் என்பதனையும் தாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான எமது மக்களின் அச்ச உணர்வு இல்லாமலாக்கப்பட்டு, அன்றாட வாழ்வு வழமைக்கு திரும்ப வேண்டும் என்பதில், மக்களோடு மக்களாக வாழும் நான் அதிக கரிசனையோடு, மக்களை தைரியப்படுத்தும் நோக்கத்திலும்தான் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்து, முகநூலிலும் பதிவிட்டேன்.

ஆனால் உங்களின் பதிவில் குறிப்பிட்ட ஸஹ்றானின் மடிக்கனணி மற்றும் வகுப்புக்கள் தொடர்பான விடயம் எமது பிரதேச மக்களை மீண்டும் அச்ச நிலைக்கு கொண்டு செல்லுமோ என அச்சம் கொள்கிறேன். அவ்வாறான விடயங்களை பகிரங்க பதிவில் தாங்கள் தவிர்த்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
இந்த நாட்டின் ஆட்சிக் கதிரையைப் பிடிக்க போட்டியிடும் தரப்புகளுக்கு இந்த அச்ச நிலை நாட்டில் நீடிப்பது தேவையான விடயமாகவுள்ளதனை புரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கின்றது. அதற்கு தூபமிடுவதாக தங்களின் பதிவு அமைந்து விடக்கூடாது.

அதேவேளை நமது உயிர், உடமை, மானம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதற்கெதிராக செயற்படுவது கடமை என்பதும் அந்த போராட்டத்தில் உயிர் நீத்தால் அது அழ்ழாஹ்வின் வழியில் உயிர் நீத்ததற்கு சமமானது என்பதும் எனது இ;ஸ்லாம் தொடர்பான நம்பிக்கையாகும். அந்த அடிப்படையிலுமே எனது பொலிஸ் முறைப்பாடு அமைந்திருந்தது.

சமயோசிதம், சாணக்கியம் என்ற வார்த்தை ஞாலங்களுக்குள் நமது சமூகத்தின் போராட்ட குணம் வெள்ளையடிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

கதிர்காமரை கொலைசெய்த சந்தேகத்தில் மட்டுமல்ல, நாட்டு மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் அதிபர் முர்ஸியும் அண்மையில் சிறைச்சாலையில் மரணித்திருந்தார். அடிமையாக செல்வத்தில் வாழ்வதனை விட போராடிச் சாகலாம் என்பது எனது நிலைப்பாடு.

இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களை புனைந்து எம்மை கஸ்டத்தில் ஆழ்த்துவதைப் பயந்து நாம் வாழாவிருப்பது சமயோசிதம் என்றால் அந்த சமயோசிதத்தினை சிதைத்து எமது மக்களுக்காக நான் சிதைந்து போவதனையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். இன்ஷா அழ்ழாஹ்.

நமது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் அழ்ழாஹ் பொருந்திக் கொள்வானாக…

ஏ.எம்.அன்ஸில்

Ex chairman

தம்பி அன்சிலுக்கு , மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் – பஷீர் சேகு தாவூத்

தம்பி அன்சிலுக்கு , மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் …