தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு

rauff hakeem

 

கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (19) சபையில் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

rauff hakeem

இலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு முன்னோடியாக களனிவெளி தாழ்நில அபிவிருத்திக்கு கூட்டுத்தாபனம் மற்றும் கல்லோயா தாழ்நில அபிவிருத்திக்கு கூட்டுத்தாபனம் போன்றவை இருந்தன. அவற்றை ஒன்றுபடுத்தி புதிதாக இந்த சித்தாந்தத்தை ஏற்படுத்தியதன் பின்னர், இப்பொழுது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சர் அனர்த்த முகாமைத்துவத்துக்கு உதவக்கூடியதுமான பல்வேறு புதிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

கல்லோயா திட்டத்தில் பல பிரச்சினைகள் தலைதூக்கியிருப்பதை நான் இங்கு நினைவூட்டியாக வேண்டும். அங்கு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பல பிரச்சினைகள் தோன்றின. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தாழ்நிலங்கள் தொடர்பில் உரிய வரைபடங்களை தயாரித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான தேவைப்பாடு உள்ளது. அந்த செயற்பாடு இப்பொழுது நிறைவு பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. ஆகையால், அதற்கான திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

குறிப்பாக பருவகால மழை வீழ்ச்சிக் காலங்களில் கல்லோயாவில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவி வருகின்றது. அவ்வாறான பிரதேசங்களில் நிலங்களை மீள்நிரப்பும்போது, காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த கூட்டுத்தாபனத்தின் நிபுணத்துவ அறிவை நன்கு பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக நன்மை பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

என்னைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்திலுள்ள தாழ் நிலங்கள் பற்றிய உரிய வரைபடங்களின் துணைகொண்டு விஞ்ஞான பூர்வமாக இந்த விடயம் சிறப்பாக கையாளப்படுவது முக்கியமாகும். ஏனென்றால், தாழ் நிலங்களை மீள்நிரப்புவது சட்டபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.

விசேடமாக அண்மையில் கல்முனை பிரதேசத்தில் நாங்கள் நீரியல் தொடர்பான ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தோம். கல்லோயா தாழ்நில பிரதேசத்தில் நாங்கள் மேற்கொண்ட நீரியல் ஆய்வின் மூலம் கல்லோயா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதுவரை மேற்கொள்ளப்படாத முயற்சிகளை விஞ்ஞானபூர்வமாக கையாண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கூடியதாக இருக்கின்றது.

காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகிவற்றின் ஊடாக கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் நகர அபிவிருத்தி திட்டங்களை தொடர முடியும்.

நகர திட்டமிடலுக்கு பொறுப்பான அமைச்சராக நான் இருந்தபோது, இதனை முன்னெடுக்க முடிந்தது. தற்பொழுது நான் அந்த அமைச்சை விட்டும் நீங்கியிருப்பதால், அமைச்சர் அதனை நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் திரட்டியுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். குறிப்பாக கல்லோயா தாழ்நில பிரதேசம் பருவ மழை காலத்தில் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. அது இதற்கான ஒரு காரணமாகும்.

அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரும் இன்னொரு விடயம், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பெருநகர பிரதேச பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாரிய நகர மீள்கட்டியெழுப்பும் செயற்திட்டமாகும்.

இந்த நகர மீளமைப்பு திட்டத்துக்கு அமைவாக கண்டியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேலும் பரவலாக்க வேண்டும். கண்டியோடு அண்மித்ததாக மஹியாவ, தெய்யன்னாவல முதலான பத்துக்கு மேற்பட்ட பிரதேசங்கள் வசதி குறைந்த மக்களின் வாழ்விடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வசதிகுறைந்த மக்கள் குடியிருப்புகள் நன்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளன.

நகரத்துக்குள்ள நிலப்பரப்பை அதிகபட்சம் பயன்படுத்தி அடுக்கு மாடிகள் கொண்ட வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த விடயத்தில் போதிய அவதானம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதன்பால் அமைச்சரின் கவனம் உரிய முறையில் செலுத்தப்பட வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கிறேன்.

அத்துடன் கொழும்பு, வேகந்த பிரதேசத்தில் தூர்ந்துபோய் மோசமான நிலையில் காணப்படும் தொடர்மாடி வீடுகளை இடித்து, அங்கு வாழ்ந்துவரும் மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி உரிய வசிப்பிட வசதிகளை செய்துகொடுக்க வேண்டியுள்ளது. இதன்போது அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத விதத்திலும், அவர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படாத விதத்திலும் தற்போதைய வாழ்விடத்துக்கு அருகிலேயே அவ்வாறான வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் பொறுப்பான அமைச்சரிடம் அன்பாக வேண்டிக்கொள்கிறேன்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்