கலாபூஷணம் மீரா.
பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.நஸீர் அம்பாரை மாவட்டத்தில் ஜனரஞ்சகமிக்கவராகத் திகழ்கின்றார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களின் நட்புக்குரியவராகவும் விளங்குகின்றார்.
இருளில் இருந்து கொண்டு கதையளக்கும் பழமை பேசுபவர்களை விட மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற கொள்கையில் பற்றுறுதியாகச் செயற்படுகின்றார்.
கடந்த 31ம் திகதி கல்முனையில் விழாவொன்றில் பங்குபற்றி விட்டு வெளியேறிச் சென்ற இவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அல்-ஹாஜ் றிஷாட் பதியுதீன் மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி ஆகியோர் சந்தித்துக் கொண்டபோது நஸீர் எம்.பியுடன் பூட்டிய கண்ணாடி அறைக்குள் இருந்து பேசிக் கொண்டார்கள்.இது சமூகம் தொடர்பான பிரச்சினைகளை மஸூறா அடிப்படையில் செயற்படுத்துகின்ற விடயமாகக் கூட இருக்கலாம்.
நேற்று தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்-ஹாஜ்.ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுடன் அட்டாளைச் சேனையில் இடம் பெற்ற முப்பெரும் விழாவொன்றிலும் பங்கு பற்றி அவருடன் சினேகபூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
தாம் பிறந்த மண்ணிலே தனக்கெதிரான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னாள் மாகாண அமைச்சர் அல்-ஹாஜ் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களுடனும் நாகரீகமான முறையில் நட்புறவோடும் பழகுவதும் இவரது பெருந் தன்மையைக் காட்டி நிற்கின்றது.
அண்மையில் நண்பர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பேசிக்கொண்டிருந்த போது நஸீர் எம்.பி தொடர்பாகப் பேச்சு வந்தபோது அவர் ‘நஸீர் நல்லவர்’ என்று கூறினார்.
கடந்த காலங்களில் அக்கரைப்பற்றுக்கு முன்னாள் மாகாண முதல்வர் வந்த விழாவொன்றில் வரவேற்பு பதாகையில் இவர் பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சகிப்பத் தன்மையோடு நஸீர் நடந்து கொண்டார். இன்று அதே நபர்கள் எம்பியின் உதவி ஒத்தாசைகள் நிதி ஒதுக்கீடு தொடர்பில் பாராட்டுகின்றனர். வன்மத்தை வன்மத்தாலன்றி சகிப்புத்தன்மையால் வெற்றி பெற்றவர் இவர்.
இதனால் தான் என்னவோ குளத்தில் தெத்துக் கொறட்டைகள் பலமாகச் சுழி விட்டுக் கொண்டிருந்த போதும்; செங்கம்பளம் விரித்து தன் படைகளுடன் வரும் விரால் நீர்கோலம் காண்பது போல் மக்கள் மனங்களை வென்று நஸீர் தனக்கான ஒரு படையணியைச் சேர்ப்பதில் முனைப்பாகச் செயற்படுகிறார்.
இவரிடத்தில் குறைகள் இல்லையென்று நான் சொல்ல வரவில்லை.அது யாரிடத்தில்தான் இல்லை.
நீண்ட காலம் பாராளுமன்ற அனுபவத்தைக் கொண்ட சிலர் எல்லாவற்றுக்கும் கட்சி நிறங்களையே நேர்முகங் செய்கின்றனர்.தூக்கி விட்டவர்களையும் துச்சமாக எண்ணுகின்றனர். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவலை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மக்காவுக்குச் செல்கின்றனர் சகோதரத்தை வலியுறுத்துகின்றனர்.கட்டிப்பிடிக்கின்றனர்-முஸாபா செய்கின்றனர்.அப்படிச் செய்பவரகள் ஊருக்கு விருந்தாளி வந்தால் ஓடி ஒளிகின்றனர்.
எங்களுக்குள் நாங்கள் நண்பர்கள்; மக்களுக்கு மத்தியில் நாங்கள் எதிரிகள்; மாற்றுக்கட்சிக்காறர்கள்; வேறு கொடிக்காறர்கள் ; நாங்கள் இணைந்தால் மக்களும் மாறி விடுவார்கள். ஆகவே நாங்கள் பகைவர்கள்; இதுதான் எங்கள் உலகம். நாங்கள் இருளில் மறையும் கறுப்பாடுகள்.