பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். சாகத்துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பஞ்சு மெத்தையாயிற்று.
அமைச்சர் ரிஷாதுக்கு வில்பத்து ஒரு தூக்கு மேடையாக வந்தாலும் அவர் சளைக்கப் போவதில்லை. 2012ஆம் ஆண்டிலிருந்து அடிக்கடி அவர் எதிர் கொள்ளும் சவாலும் இதுதான்.மக்கள் காங்கிரஸின் அரசியலை அடியோடு வீழத்த அவிழ்க்கப்படும் இந்த பரபரப்புகளால் சமூகத்தை மீள் இருத்தும் போராட்டத்தை அவர் கைவிடப்போதும் இல்லை.
ஜெனீவா அமர்வுகளை வைத்து பேரினவாதம் பிழைக்கின்றது.யுத்தம் வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் மஹிந்தவைச் சாடி தமிழ் தரப்புக்கள் பிழைக்கின்றன. ஆனால் வில்பத்து விஸ்வரூபமாக்கப்படுவதால் வடக்கில் மக்கள் காங்கிரஸ் பிழைப்பு நடத்தப்போவதில்லை, ஒடுங்கி ஓயப்போவதுமில்லை. இதுதான் அரசியல் கணக்கு. இதை அமைச்சர் ரிஷாதின் எதிரிகள் புரிவதில்தான் இருப்புக்கான போராட்டம் வீரியமடையப்போகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃபின் அரசியலும் ஒரு காலத்தில் ஓங்கி உயர்ந்தமைக்கு அவரது எதிரிகள் அவிழ்த்த சூழ்ச்சிகளே ஏணியாக உதவின. பிற சமூகத்தின்,அல்லது இனக்குழுக்களின் தீண்டல்களால் உரசப்படும் மற்றொரு சமூகம் அரசியலில் வீழ்ந்ததாக சரித்திரமில்லை. இற்றைக்கு ஆறு வருடங்களாக இந்த வில்பத்து அடிக்கடி வந்து போவதேன்?.
உண்மையில் அங்கு அரச காடுகள் அழிக்கப்பட்டதா? முஸ்லிம்கள் குடியேற்றப் பட்டனரா? “இல்லை” என மக்கள் காங்கிரஸ் தலைமையும் “ஆம்” என பேரினவாதிகள் சிலரும் போடும் தாளங்களின் எதிரொலிகள் பல்வகை அர்த்தங்களை அடையாளப் படுத்துகின்றன.பிரிவினைவாத யுத்தம் முடிந்து மூன்று வருடங்களாகப் பிறப்பிடம் புகும் விருப்பில் வட புல முஸ்லிம்கள் இருக்கவில்லை. இதற்கான சூழலை சிங்களப்பேரினவாதம் ஏற்படுத்தவில்லை, பயங்கரவாதச்சாயலும் இதற்கு வழியேற்படுத்தவுமில்லை.
மொத்தத்தில் மத்தளம் போல் முதுகிலும்,நெஞ்சிலும் அடிவாங்கிய வடபுல முஸ்லிம்களுக்கு 2012 இல் ஒரு நம்பிக்கை ஊட்டப்பட்டது.முப்பது வருடங்களாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த வடபுல முஸ்லிம்களின் தாயகப் பூமியில் இயற்கையை விஞ்சு மளவுக்கு காடுகள் ஓங்கி உயர்ந்திருந்தன. இயற்கை வனம் எது? நாம் வாழ்ந்த காணி எது? எங்கள் ஊரெது? என அடையாளம் காண்பதில் வளர்ந்து அடர்ந்த வனாந்தரங்கள் விரிசல்களை ஏற்படுத்தின.மறிச்சுக்கட்டி,பாலைக்குழி, கரடிக்குழி,கொண்டச்சி,முள்ளிக்குளம், சிலாவத்துறை, முசலி,வேப்பங்குளம்,பொற்கேணி மற்றும் இன்னோரென்ன கிராமங்கள் முப்பது வருடங்களாக வளர்ந்திருந்த வனாந்தரங்களால் பின்னிப் பிணைந்திருந்தன. இக்கிராமங்களை அடையாளம் காண்பதற்கான ஆரம்ப முயற்சிகளாகவே துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்குப் பின்னர்தான் மீள் குடியேற்றம். அமைச்சர் ரிஷாதின் சிந்தனையிலிருப்பது இதுதான். இச்சிந்தனையை ஒழித்துக்கட்ட வரிந்து கட்டி நிற்கும் இனவாதம் இயற்கை மீதும் தேசத்தின் வளங்கள் மீதும் பற்றுள்ளதாகக் காட்டி முஸ்லிம்களின் மீள் இருப்பை முறியடிக்க அடிக்கடி பறையடிக்கிறது. இத்தனைக்கும் இது அத்தனையும் மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேசங்கள். புத்தளம், அநுராதபுர மாவட்டங்களின் எல்லைகளுக்கு உட்பட்டு மன்னார் மாவட்டத்தின் எங்கோ தொலைவிலுள்ள ஓரங்களைத் தொட்டு நிற்பதே வில்பத்து இயற்கை வனாந்தரம்.
மன்னார் மாவட்டக் கிராமங்களை துப்புரவு செய்கையில் வில்பத்துவின் எங்கோ தொலைவிலிருக்கும் ஓரங்கள் சூறையாடப்படுவதாச் சொன்னாலும் பரவாயில்லை. வில்பத்தையே அழித்து முஸ்லிம் கொலனி உருவாக்கப்படுவதாகவே பௌத்த கடும் போக்குகள் கர்ச்சிக்கின்றன. இது எப்படிச்சாத்தியம் என்பதை எவரது மூளையும் ஏற்றுக்கொள்ளாது.இது பற்றி புரிய வைக்க இருபதுக்கும் மேலான ஊடக மாநாட்டை நடாத்தி நிலைமைகளை விளக்கியும் கடும்போக்கின் மனநிலையில் கரிசனை ஏற்படவில்லை.கரிசனை ஏற்படுவதற்கு குறுக்காக சில சிங்கள தனியார் ஊடகங்களும், ஒரு சில தனியார் இலத்திரனியல் தமிழ் ஊடகங்களும் நிற்கின்றன. அமைச்சரின் சேவையை விடவும் அதிகமாக வில்பத்து விவகாரத்தில் இவரின் பெயர் அடிபட்ட சம்பவங்களே அதிகமாகும். அந்தளவுக்கு சில ஊடகங்களில் இந்த விடயம் இடம்பிடிக்கிறதே. ஏன்? மக்களுக்குத் தேவையான எத்தனையோ விடயங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை வில்பத்து விவகாரத்துக்கு சில சிங்கள தனியார் ஊடகங்களும் ஒன்றிரண்டு தமிழ் தனியார் இலத்திரனியல் ஊடகங்களும் வழங்குவது ஏதொவொரு விவகாரத்தின் பின்னணியிலே.
வில்பத்து தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.பௌத்த கடும் போக்கின் வாதங்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை, துப்புரவு செய்யப்பட்டது விரட்டப்பட்ட முஸ்லிம்களின் காணிகளே எனத் தௌிவாகச் சொன்னது உயர் நீதிமன்றம். இன்றைய பிரதம நீதியரசர் நளின் ஜெயலத் பெரேராவும் தீர்ப்பு வழங்கப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இனமொன்றின் மீள் இருப்பை அழிக்க தனது மௌனப்படுக்கையைக் கலைத்துக் கொண்ட கடும்போக்கானது, அமைச்சர் ரிஷாதை விட்டு, விட்டு விரட்டுவதிலும் அடிக்கடி நீதிமன்றங்களை நாடுவதிலும் சளைக்கவில்லை. வெவ்வேறு நபர்களைக் கொண்டும் இனவாத சூழலியலாளர்களை வைத்தும் வழக்குகளை ஏற்றுவதில் விழிப்புடன் செயற்படும் பௌத்த கடும்போக்கு, வடபுல முஸ்லிம்களின் மனிதாபிமானத்தைப் புரிந்து கொள்ளும் நாட்கள் விரைவில் வரவேண்டும்.நிலைமைகளைப் புரிந்து கொண்டால் இந்நாட்கள் நெருங்கி விடும்.வில்பத்துவில் நடந்ததை ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கைகள் இது வரை வௌியிடப்படாததும் நிலைமைகளைக் கடுமையாக்கியுள்ளன. இந்த சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையில் என்ன உள்ளது என்பதை அறியும் உரிமை இது வரை மறுக்கப்படுவதாகவே உணரப்படுகிறது. ஒரு வேளை முஸ்லிம்களுக்கு சாதகமாக இந்த அறிக்கையுள்ளதால் இது மறைக்கப் படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
“2015 க்குப்பின்னர் வில்பத்துவில் ஒரு அங்குல நிலம் கூட எடுக்கப்படவில்லை” என ஜனாதிபதி சொல்வதிலும் “வில்பத்துவில் ஒரு அடி நிலமாவது எவராலும் அபகரிக்கப்படவில்லை” என சுற்றாடல் துறை இராஜங்க அமைச்சர் அஜித்மானப்பெரும கூறுவதிலும் சிறிய வித்தியாசங்கள் உள்ளன.
2015 க்கு முன்னர் வில்பத்துவில் நிலங்கள் எடுக்கப்பட்டிருக்கலாமென ஜனாதிபதி மறைமுகமாகச் சொல்ல வருவதாக வைத்துக் கொண்டால் யாரால் எடுக்கப்பட்டிருக்கும்? பாதுகாப்புக் காரணங்களுக்காக வில்பத்து வீதிகளின் இருமருங்கிலுமுள்ள காடுகளை படையினர் அழித்துள்ளனர்.போக்கு வரத்து இலகுக்காகவும் வீதியோரக்காடுகளில் பொருத்தப்படுட்டுள்ள வெடிபொருட்கள், கிளைமோர் குண்டுகளை அகற்றவும் படையினர் இக்காடுகளை அழித்திருக்கலாம். அதுதான் உண்மையும் கூட
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு அரை ஏக்கர் காணிகளும் முறைப்படியாக காணிக் கச்சேரிகள் நடாத்தப்பட்டு வழங்கப்பட்டவையே. ஐந்து ஏக்கர் சொந்தக்காரனுக்கும். பத்து ஏக்கர் காணிச்சொந்தக்காரனுக்கும்,எத்தனை ஏக்கர்களை வைத்திருந்தாலும் சமமாக எல்லோருக்கும் அரை ஏக்கர் காணிகளே வழங்கப்பட்டன. உலகில் சமவுடமை சரியாகப் பின்பற்றப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகத்தானிருக்கும். காணிகளில் வளர்ந்த காடுகளை அடையாளம் காணல், துப்புரவு செய்வதில் காலதாமதங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டதால் அவசரமாக எடுக்கப்பட்ட தீர்மானமே அரை ஏக்கர் காணிப்பங்கீடு.
இதைப்புரியாத கடும்போக்கே இனமொன்றின் மீள் இருப்பை அங்கீகரிக்க மறுக்கிறது.