பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் விளையாடும் கடாஃபி மைதானம் அருகே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் !

Pak-Gaddafi-blast__2422128f

லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது மைதானம் அருகே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி மற்றும் ஒருவர் குண்டுவெடிப்பில் பரிதாபமாகப் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இருப்பினும், பாகிஸ்தான் ஊடகங்கள் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானம் அருகே நேற்றிரவு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது மைதானத்தில் பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இரவு 9 மணியளவில் கல்மா சவுக் என்ற இடத்திலிருந்து ரிக்‌ஷாவில் வந்த நபர், தான் அணிந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக முதற்கட்டத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 4 பேர் அருகே உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குண்டுவெடிப்பு நடக்கவில்லை என்றும் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்ததாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

அதேபோல, பொலிஸாரும் குண்டுவெடிப்பு நடந்ததை இரவு வரை உறுதிப்படுத்தவில்லை. ரிக்‌ஷாவிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இறுதியாக, குண்டுவெடிப்பு நடந்ததை பாகிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் பர்வேஸ் ரஷீத் உறுதி செய்தார்.