பாகிஸ்தான் படைகள் திறன் வாய்ந்தவையாக உள்ளன என்கின்றார் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர்

இந்திய விமானிகள் இருவரை சிறைபிடித்துள்ளோம் என்றும், அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார்.

ஒரு விமானி காயமடைந்து சிஎம்எச் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவர் கூறினார். மற்றொரு விமானி கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

FILE IMAGE

இந்திய விமானியை சிறைப்பிடித்துள்ளதாக விவரிக்கும் ஒரு காணொளி காட்சியையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.

இந்திய அரசு இதுகுறித்து இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. பிபிசியும் சுயாதீனமாக இதனை உறுதிப்படுத்தவில்லை.

பாகிஸ்தான் விமானப் படை விமானம் காஷ்மீரில் உள்ள ஆறு இலக்குகளை குறிவைத்து தாக்கியதாகவும், இந்திய விநியோக கிடங்குகளை குறி வைத்து தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எஃப் -16 விமானங்களை பயன்படுத்தவில்லை

பாகிஸ்தான் விமானப் படையின் இரண்டு எஃப் -16 விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக கூறுவதை அவர் மறுத்தார். இன்றைய தாக்குதலுக்கு எஃப் -16 விமானங்களை பயன்படுத்தவில்லை என அவர் கூறினார்.

இந்திய விமான படையின் ஒரு விமானம் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் வீழ்ந்ததாகவும், மற்றொன்று இந்திய நிர்வாக காஷ்மீரில் வீழ்ந்ததாகவும் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறினார்.

பாகிஸ்தான் படைகள் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எனினும் தமது நோக்கம் அமைதிதான் என கூறியுள்ள ஆசிஃப் கஃபூர் ஊடகங்களும் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான்

இந்திய நிர்வாக காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் இவ்வாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 26ஆம் தேதி இந்தியா பயங்கரவாத முகாம்களை தாக்கியதாக கூறியதை அடுத்து இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது.

புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. அவர்களின் முகாம்களை குறி வைத்தே தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறுகிறது.

தோல்வி

இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கூறியது. ஆனால், பாகிஸ்தானி அதிகாரிகள் இந்தியாவின் விமானப் படை தாக்குதல் தோல்வி அடைந்ததாகவும், யாரும் கொல்லப்படவில்லை என்று தெரிவித்தனர்.

முன்னதாக பாகிஸ்தான் விமானப் படை இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அவர் டிவீட் செய்திருந்தார்.

இது குறித்து கருத்து பெற இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப் படை விமானம் காஷ்மீரில் விபத்திற்குள்ளானதில் இரு இந்திய விமானிகளும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர் என இந்திய நிர்வாக காஷ்மீரில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த விமானம் பாகிஸ்தான் விமானப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதை அவர்கள் உறுதி செய்யவில்லை.

விமான நிலையம்

இந்த இரண்டு நிகழ்வுகள் காரணமாக, ஸ்ரீநகரிலுள்ள காஷ்மீரின்  பிரதான விமான நிலையம் மற்றும் குறைந்தபட்சம்  மூன்று  அண்டை மாநிலங்களிலுள்ள விமான நிலையங்களை மூட உத்தரவிட்டுள்ளது இந்திய விமான படை.

செவ்வாய்க்கிழமை மாலை கட்டுப்பாட்டு எல்லை பகுதி என அறியப்படும் நடைமுறையில் உள்ள எல்லைப் பகுதியில் 12 -15 இடங்களில் பாகிஸ்தான்   வலுவான ஆயுதத்தாக்குதலில்  ஈடுபடத்துவங்கியது  என இந்திய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி தருவதற்காக இந்தியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. இதன் விளைவாக சிலர் உயிரிழந்தனர். புதன்கிழமை காலை வரை தொடர்ந்த துப்பாக்கித் தாக்குதலில்  ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகள் குறைந்தபட்சம் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் அப்பாவி பொதுமக்களா அல்லது ராணுவத்தைச் சேர்ந்தவர்களா என்பது தெளிவாக தெரியவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது. 

காஷ்மீரில் தொடர்ந்து சந்தேக தீவிரவாதிகளை தேடும் பணியை இந்தியா தொடர்கிறது. இரு நாடுகளும் காஷ்மீர் மலை பகுதியை தம்முடையதாக கோருகின்றன ஆனால் பகுதியளவையே நிர்வகிக்கின்றன. 

புதன்கிழமை பாதுகாப்பு படைகள் இரண்டு ஜெய்ஷ் தீவிரவாதிகளை துப்பாக்கிச் சூட்டில் கொன்றதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. 

-bbc-