“என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள்; பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்”

15373

இஸ்லாத்தில் பெற்றோருக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. அந்த மரியாதை இறைவனுக்கு அடுத்தபடியான இடத்தைப்பெறுகிறது. இறைவனுக்கு அடுத்த அந்தஸ்தில் வைத்து அழகு பார்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள் பெற்றோரே. இறைவனுக்கு அடுத்து நாம் அதிகம் கடமைப்பட்டுள்ளது நமது பெற்றோருக்கே.

இறைவணக்கத்திற்கு பிறகு சிறந்ததொரு வணக்கம், பெற்றோருக்கு செய்யும் உப காரமே ஆகும். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விரு வருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். அவ்விருவரையும் விரட்டாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக” (திருக்குர்ஆன் 17:23,24).

இந்த வசனத்தில் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய வணக்கத்தையும், பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உபகாரத்தையும் இறைவன் ஒரே நேர்கோட்டில் வைத்து பாவிக்கிறான். பெற்றோருக்குச் செய்யும் உபகாரமும் இறைவனுக்கு பிரியமானது என்பது இதனால் புலப்படுகிறது.

பெற்றோருக்குச் செய்யும் உபகாரம் என்ன?

இருவரோ, இருவரில் ஒருவரோ முதுமை அடைந்து விட்டால், அவ்விருவரின் செயல்களில் சில தடுமாற்றங்கள் நிகழும். அவர்கள் குழந்தையைப் போன்று மாறிவிடுகிறார்கள். கேட்பதில், பார்ப்பதில், பேசுவதில், நடப்பதில் என அனைத்திலும் பாதிப்புகள் வருகிறது. ஒட்டு மொத்தத்தில் வயது முதிர்ந்த பெற்றோர்களும் ஒருவிதத்தில் குழந்தைகளே.

சிறுநீர் கழிப்பதிலிருந்து நோய் பீடிக்கப்படுவது வரைக்கும் குழந்தைகளின் விஷயத்தில் அக்கறையுடன் கவனிக்கிறோம். குழந்தைகளை ‘சீ’ என்றோ, ‘சனியனே’ என்றோ திட்டுவது கிடையாது. தாயின் சேலையில் சிறுநீர் கழித்ததற்குத் தண்டனையாக எந்தக் குழந்தையும் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்படுவது கிடையாது.

வயது முதிர்ந்த பெற்றோருக்கு இதே நிலைமை ஏற்படும்போது மட்டும் ஏன் ‘சீ’ என்று சொல்கின்றோம்? வீட்டை விட்டு முதியோர் இல்லத்திற்கு ஏன் அனுப்புகிறோம்?, மரியாதைக்குறைவான வார்த்தையை ஏன் பிரயோகிக்கிறோம்?, ஏன் பணிவில்லாமல் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறோம்?, ஏன் அவர்களை சபிக்கிறோம்?

இன்று அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை நாளைக்கு நமக்கு ஏற்படாதா?

வயதான பெற்றோருக்குச் செய்யும் பேருபகாரம் அவர்களை வா, போ, சீ என்று கூறக்கூடாது. அவர்களை சுமையாக நினைத்து வீட்டை விட்டு துரத்தக்கூடாது. மரியாதையான வார்த்தையில் பேசி, அன்பு செலுத்தி பாதுகாக்க வேண்டும். அன்பு, பண்பு, பாசம், பணிவடக்கத்துடன் அவர்களிடம் நடக்க வேண்டும்.

நாம் குழந்தையாக இருந்தபொழுது நமது தேவை குறித்து அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தது போல், முதுமையான பருவத்தில் அவர்களுக்கு என்ன தேவையோ, அதுகுறித்து இறைவனிடம் நாமும் பிரார்த்திக்க வேண்டும்.

குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பலவீனமான பருவநிலைகள். அது பிறரைச் சார்ந்துள்ள பருவமாகும். குழந்தைகளுக்கு பெற்றோரின் தயவும், முதுமை அடைந்த பெற்றோருக்கு குழந்தைகளின் அரவணைப்பும் அவசியம் தேவை.

‘பலவீனமான நிலையில் உங்களை இறைவன் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்துக்குப் பின் பலவீனத்தையும், நரையையும் ஏற்படுத்தினான். அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்’. (திருக்குர்ஆன் 30:54)

‘நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்கு கிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா’? (திருக்குர்ஆன் 36:68)

இறைவன் விதித்த வணக்க வழிபாடுகளில் சிறந்ததும், முதன்மையானதும் தொழுகையே ஆகும். அத்தகைய தொழுகைக்குப் பிறகு சிறந்த செயல் பெற்றோருக்குச் செய்யும் நன்மையான காரியங்கள் ஆகும்.

இதுகுறித்து நபித்தோழர் இப்னுமஸ்ஊத் (ரலி) கூறுவதாவது:-

“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறை வனுக்கு மிகவும் பிடித்தமான செயல் எது?’ என கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது என்றார்கள்’. பிறகு ‘எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். பிறகு ‘எது?’ என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிவது’ என்றார்கள்”. (நூல்: புகாரி, முஸ்லிம்)

வணக்க வழிபாடுகளின் மூலமாக இறை நெருக்கத்தை அடைய விரும்புவோர், அதை பெற்றோருக்கு நன்மை புரிவதின் வழியாக அடைந்து கொள்ளட்டும்.

மேலும், தமது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டும் என விரும்புவோர் பெற்றோருக்கு நன்மை புரியட்டும். இதுகுறித்த நபிமொழி வருமாறு:-

“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் இந்த அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார் ‘உமக்குத் தாய்-தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ‘அவ்வாறாயின் நீங்கள் திரும்பிச்சென்று அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

நமக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து, அல்லது விபத்து, சோதனை அனைத்தும் நம்மை அணுகாமல் இருக்க, அல்லது ஏற்பட்டுவிட்ட சோதனைகளிலிருந்து விடுபட சிறந்த வழி பெற்றோருக்கு நன்மை புரிவதே. அந்த நன்மையை வைத்து இறைவனிடம் பிரார்த்திக்கும் போது நாம் நினைத்தது, அல்லது கேட்டது இதுவும் நன்மை சார்ந்து இருக்குமானால் இறைவனும் அதை ஏற்று நிறைவேற்றிக் கொடுப்பான்.

வயது முதிர்ந்த பெற்றோரை குழந்தை களாகத் தான் பார்க்க வேண்டும். குழந்தைகளைப் போன்று தான் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிப்பது போன்று அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு சில தடுமாற்றங்களையும், ரசனையுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.