பொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏனையோர் பதவியிழப்பார்களா?
================================
வை எல் எஸ் ஹமீட்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் சிலர் ஐ ம சு கூ இல் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட நிலையில் அண்மையில் பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக இணைந்திருந்தனர். இவ்வாறு இணைந்து ஒரு மாதம் பூர்த்தியாகவுள்ள நிலையில் அரசியலமைப்பின் சரத்து 99(13) இற்கமைய, ஒரு மாதமுடிவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துவிடுவார்கள்; என சில ஊடகங்கள் செய்திவெளியிடுகின்றன.
இது பிழையான தகவலாகும். கட்சிமாறுவதால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் பதவி இழக்கமாட்டார். சரத்து 99(13) கட்சிமாறுபவர்கள் பதவியிழப்பார்கள்; என்று கூறவுமில்லை.
சரத்து 99(13) கூறுவதென்ன?
—————————————-
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வதன்மூலமாகவோ, விலக்கப்படுவதன் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின்/ சு குழுவின் அங்கத்தவத்தை இழந்தால், அவ்வாறு இழந்து ஒரு மாதத்தில் அவர் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழப்பார்; என்று கூறுகின்றது.
அதேநேரம் கட்சியிலிருந்து விலக்கப்படுமிடத்து அந்த ஒரு மாதம் முடிவதற்குள் அவர் உயர்நீதிமன்றம் சென்று, உயர்நீதிமன்றம் விலக்கியது பிழை எனத் தீர்மானித்தால் அவரது பதவி பறிபோகாது; எனவும் கூறுகிறது.
இந்த சரத்துத்தான் இந்த குழப்பகரமான செய்தி உலாவருவதற்கு காரணமாகும்.
இந்த சரத்தை ஆழமாக கவனித்தால் எந்தவொரு இடத்திலும் ‘ கட்சி மாறினால் பா உறுப்பினர் பதவி ஒரு மாதத்திற்குள் பறிபோகும்; என்று இல்லை. மாறாக “ தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின்/ சு குழுவின் அங்கத்துவத்தை இழந்தால் ஒரு மாதத்திற்குள் பதவி பறிபோகும்;” என்றுதான் இருக்கின்றது.
இங்கு புரிந்துகொள்ள வேண்டியது “ கட்சி மாறுவது” என்பதும் “கட்சியின் அங்கத்துவத்தை இழப்பது” என்பதும் ஒன்றல்ல.
இந்த விடயத்தில் சரத்து 99(13) ஐ பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 64 உடன் சேர்த்து வாசிக்கவேண்டும்.
மேற்படி பிரிவு 64இன் படி பாராளுமன்ற செயலாளர் நாயகம் அரசியலமைப்பு சரத்து 66 மற்றும் 99(13) ஆகியவற்றில் ஒன்றின் பிரகாரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்படும்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பார். அதன்பின் ஆணைக்குழு வெற்றிடத்தை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இங்கு கவனிக்கவேண்டியது, பாராளுமன்ற செயலாளர்நாயகம் ‘ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’ என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.
வெற்றிடம் இரண்டுவகையில் ஏற்படலாம். ஒன்று சரத்து 66 இன் கீழ். இதில் பல விடயங்கள் இருக்கின்றன. உதாரணம் ஒரு பா உறுப்பினர் ஜனாதிபதியாதல் போன்றவை. அவற்றில் ஒன்று அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிப்பது.
இரண்டு சரத்து 99(13) இன் கீழ் தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் / சு குழுவின் அங்கத்துவத்தை இழப்பது. இதை அக்கட்சியின் செயலாளர்/ சு குழுவின் தலைவர் பா செ நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்து ஒரு மாதத்திற்குள் நீதிமன்றம் செல்லவேண்டும்.
எனவே, இங்கு புரிந்துகொள்ள வேண்டியது முதலாவது கட்சி அங்கத்துவத்தை இழக்கவேண்டும். இரண்டாவது அதை கட்சியின் செயலாளர் பா செ நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும்.
கட்சி அங்கத்துவத்தை இழத்தல்
——————————————-
பிரதானமாக கட்சி அங்கத்துவத்தை இழக்கும் முறைகள் 1) கட்சியிலிருந்து ராஜினாமா செய்தல்.
( சரத்து 66 இன் கீழ் செய்யும் ராஜினாமா பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து- எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்)
2. கட்சியிலிருந்து விலக்கல்.
கட்சியிலிருந்து ராஜினாமா செய்தல்
————————————————
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அது ஊடகங்களிலெல்லாம் வெளிவந்திருக்கிறது. இப்பொழுது அவர் ஒரு மாதத்தில் பதவியை இழப்பாரா? நிச்சயமாக “ இல்லை”.
ஏன்? ஊடக செய்தியை வைத்து பா செ நா செயற்பட முடியாது. கட்சியின் செயலாளர் ‘ இவர் ராஜினாமா செய்ததன் காரணமாக கட்சியின் அங்கத்துவத்தை இழந்துவிட்டார்’ என்று பா செ நா இற்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் பதவி பறிபோகாது.
சிலவேளை கட்சி அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். அதனால் பா செ நா இற்கு அறிவிக்காமல் விடலாம். எனவே, கட்சியில் இருந்து ராஜினாமா செய்தாலும் கட்சி பா செ நா இற்கு அறிவித்தாலேயொழுய பதவி பறிபோகாது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பா செ நா இற்கு அறிவித்தால் உடனடியாக பதவி பறிபோய்விடும்.
எனவே, இரண்டு ராஜினாமாக்களினதும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
கட்சியிலிருந்து விலக்குதல்
————————————
கட்சியிலிருந்து ஒரு உறுப்பினரை விலக்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது அவர்களது கட்சியாப்பு, தீர்மானங்களைப் பொறுத்ததாகும். ஒருவர் கட்சி மாறியதற்காக அல்லது ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியிலிருந்து விலக்கலாம். அல்லது கட்சிமாறினாலும் விலக்காமலும் இருக்கலாம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் இருப்பதற்கு அவர்களின் கட்சியாப்பு இடம்கொடுக்கலாம். அது அவர்களைப் பொறுத்தவிடயம்.
உதாரணமாக 2004ம் ஆண்டு மு கா, தேர்தலின்பின் உயர்பீடத்திற்குத் தெரியாமல் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்பிரகாரம் ஐ தே கட்சியில் மு கா சார்பில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ தே க அங்கத்தவர்களாக மாற்றப்பட்டார்கள்.
அது தொடர்பாக நாங்கள் உயர்பீடத்தில் போராடினோம். எங்களுக்கெதிராக உயர்பீடக்கூட்டத்தில் பலவந்தம் பிரயோகிக்க முற்பட்டார்கள். சட்டத்தரணி சஹீட் குர்ஆன் பிரதியுடன் இது திருட்டு ஒப்பந்தமில்லை; என்று சத்தியம் செய்யுங்கள் என்று உயர்பீடக்கூட்டத்தில் கேட்டபோது அவர்மீது வன்முறைபிரயோகிக்க எத்தனிக்கப்பட்டது. அப்போது எங்களை உள்ளேபேச அனுமதிக்காவிட்டால் வெளியில் போய்ப்பேசுவோம்; என்று கூறிவிட்டு வந்தோம்.
இதில் விதியின் திருவிளையாடல் என்னவென்றால் அன்று நாங்கள் நியாயத்திற்கு கட்சிக்குள்ளே குரல்கொடுத்தபோது தலைவருக்காக எங்களுக்கெதிராக செயற்பட்ட பலர் இன்று கட்சியில் இல்லை. இறுதியில் அவர்களுக்கு நியாயத்திற்காக போராடிய திருப்தியுமில்லை, தலைவருக்கு வக்காலத்து வாங்கியதற்காக
கட்சியில் நிரந்தர இடமுமில்லை; என்கின்ற நிலைமையாகி விட்டது.
எனவே, இங்கு புரிந்துகொள்ளவேண்டியது கட்சி மாறுவதால் உறுப்புரிமை இழக்கப்பட மாட்டாது. மாறாக அதன்காரணமாக கட்சியில் இருந்து விலக்கி அதனை பா செ நா இற்கு கட்சி அறிவிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச போன்றோர் விடயத்தில் அவ்வாறு அறிவிக்கப் படவில்லையாதலால் பதவியிழக்க மாட்டார்கள்.
விலக்கினால் நீதிமன்றம் செல்லல்
———————————————-
அவ்வாறு விலக்கினாலும் நீதிமன்றம் செல்லலாம். அவர்கள் சரியான முறையில் விசாரணை நடாத்தவில்லை; என்ற பலவிடயங்கள் அங்கு முன்வைக்கப்படலாம். அதாவது ஒருவரை சாதாரணமாக விலக்கமுடியாது. விசாரணை தேவை. அங்கு Natural Justice பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். இதை இலகுவாகப் புரிந்துகொள்வதற்கான உதாரணம் கீழே.
ரிசாட், அமீர்அலி, நஜீபின் பதவிகள் காப்பாற்றப்பட்டமை
————————————————
மூவரும் சந்திரிக்கா அரசுடன்சேர்ந்து அமைச்சுப்பதவி பெற்றபோது இம்மூவரின் கையொப்பத்துடன் சகோ ரவூப் ஹக்கீமிற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக்கடிதம் மாஷாஆல்லா என்னால் எழுதப்பட்டது. அதில் இந்த நிலைப்பாட்டிற்குக் காரணம் ரவூப் ஹக்கீமின் பிழையான தீர்மானங்கள் என்று அவருடைய செயற்பாடுகளை பிய்த்தெடுத்து அக்கடிதத்தில் மேயப்பட்டிருந்தது.
அதை வாசித்ததும் அவர் தன்னைமறந்து உணர்ச்சிவசப்பட்டு எனது ஞாபகப்படி “ இந்த சமூகம் உங்களை மன்னிக்காது” என்று பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது மு கா உயர்பீடம். அதன் தலைவர் ரவூப் ஹக்கீம். அவர் “சமூகம் உங்களை மன்னிக்காது” என்று ஏற்கனவே எழுதியதன் மூலம் “ இம்மூவரும் குற்றவாளிகள்” என்ற முடிவுக்கு விசாரணைக்கு முன்பே வந்துவிட்டார்.
எனவே, விசாரணைக்கு முன்பே தீர்ப்பை எழுதிவிட்டார்” என்ற அடிப்படையில் அது Natural justice இற்கு முரணானது என்றவகையில் “ இவர்களை விலக்கியது செல்லுபடியாகாது” என்று தீர்ப்பளித்தது.
அன்று மாஷாஅல்லாஹ், வை எல் எஸ் ஹமீட்டின் பேனை அம்மூவரின் பதவிகளையும் காப்பாற்றுவதற்கு துணைபுரிந்ததற்கு நன்றிக்கடன்தான் அவர்களின் அடிப்படைக் குணத்தைக் காட்டியது; என்பது வேறுவிடயம்.
மட்டுமல்ல, இரண்டாவது தடவையும் ரிசாட்டையும் அமீர்அலியையும் மு கா விலக்கியபோது வை எல் எஸ் ஹமீட்டின் சத்தியக்கடதாசிதான் மாஷாஅல்லாஹ் அவர்களைக் காப்பாற்றியது; என்பதையும் மறந்தவர்கள்தான் அவர்கள் என்பதும் வேறுவிடயம். ஆனால் கட்சியில் இருந்து விலக்கி அங்கத்துவத்தை இழந்ததாக பா செ நா இற்கு அறிவித்தாலும் அது அறுதியானதல்ல; என்பதை இவற்றை வைத்துப்புரிந்துகொள்ள வேண்டும்.
YLS.Hameed. L.LB