ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், 2030ஆம் ஆண்டு அவர்களிடம் ஐ.தே.க ஒப்படைக்கப்படும் எனவும் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,ஐக்கிய தேசிய கட்சியை ஊடகங்களால் அழிக்க முடியாது. கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் எதிர்ப்பு சக்தியும் இல்லை. ஊடகங்களில் பொய் சக்தியும் தற்போது இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வு மட்டுமே இன்று இருக்கிறது. டி.எஸ்.சேனாநாயக்க முதல் வலுவான தலைவர்களை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது.அதேபோல் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தேசிய அரசாங்கத்திற்கு பயிரிட முடியாத வயல் நிலமே கிடைத்தது.அந்த வயலை நாங்கள் வளமாக்கியுள்ளோம். தற்போது அறுவடை செய்யும் நேரம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.