(க.கிஷாந்தன்)
இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் 12.08.2018 அன்று இடம்பெற்றது.
அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவிலிருந்து காணொளியின் மூலம் உரையாற்றியதுடன், இலங்கை நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உநுப்பினர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
மேலும் இவ்வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
`பெறப்பட்டுள்ளதுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 89.5 மில்லியன் செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் உலக வங்கித் திட்டத்தில் நகர திட்டமிடல் அமைச்சினால் குடிநீர் வசதிகளும் இவ்வீடமைப்பு திட்டத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் 2017 ம் ஆண்டில் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் முதல்கட்டமாக 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டதற்கு மேலதிகமாக 10,000 வீடுகளை பெற்றுத்தருவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய இவ் மேலதிக வீடுகளை நிர்மாணிப்பதற்கான இருநாட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து ஆகியோருக்கிடையில் 10,000 வீடுகளுக்கான ஒப்பந்தம் இதன்போது கைச்சாத்திடப்பட்டது. இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவிலிருந்து காணொளியின் மூலம் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது .